டானியல் ஜெயந்தனின் வயல் மாதா தொகுப்பை இன்னும் நான் படிக்கவில்லை. முகநூல் விவாதங்களில் இருந்து புரிந்துகொண்டதுவரையில் அது கிருத்தவ நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது என சிலர் அந்த நூலை எரித்திருக்கிறார்கள். ஜெயந்தனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான செயலில்லை.
கருத்தைக் கருத்தாலும் எழுத்தை எழுத்தாலும் எதிர்கொள்வதே அறம்.
ஆதலால் இந்த விடயத்தில் நாங்கள் ஜெயந்தனோடு நிற்கிறோம்.
ஆனாலும் எமக்குச் சொல்வதற்கு சில விடயங்கள் இருக்கிறது ;
படைப்பிலக்கியத்திலோ, அதற்கு வெளியிலோ நம்பிக்கைகளைக் கேலி செய்கிற போது அதைப் பின்பற்றுவோருக்கு கோவம் வரத்தான் செய்யும். ஆனால் அந்தக் கோவம் நியாயமானதாக இருக்க வேண்டும்.
சல்மான் ருஷ்டி சாதானிக் வேர்சஸ் எழுதிய போது இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர், அறிஞர் அஹமட் டிடட் உலகத்தின் பலநாடுகளுக்குச் சென்று வரிக்கு வரி ருஷ்டிக்கு பதில் சொன்னார். அந்தக் காணொளிகள் இன்னமும் இணையத்தில் கிடைக்கிறது. ருஷ்டி பொய்யை எழுதினார் என்பது நிருபனமானது. ருஷ்டியால் டீடட்டை எதிர்கொள்ள முடியவில்லை. அமைதியானார். தனது சுய விளம்பரத்திற்காக, தனக்கு அறிவில்லாத விடயங்களை எழுதி பல கோடி முஸ்லிம்களின் மனதை நோகடித்த ஒருவரை இந்த உலகம் வேறுமாதிரிக் கொண்டாடியது. அவனை அடித்தால் நீயும் எனது நண்பன் என்பது நயவஞ்சகமானது.
கிருத்தவத்தை கொச்சைப் படுத்தி ஜெயந்தன் எழுதி விட்டார் என்பதற்காக அவரோடு எம்மால் ஒரு போதும் நிற்க முடியாது.
ஜெயந்தன் வயல்மாதாவை எப்படி எழுதி இருக்கிறார் என நமக்குத் தெரியவில்லை. அவரது நோக்கம் கெட்டதாக இருந்தால் மேலே சொன்னதைப் போல அதற்கு நாம் துணை நிற்க முடியாது. ஆயினும், ஆபாசத்தைக் காரணங்காட்டி வயல்மாதா நூலை எதிர்ப்பவர்கள் முதலில் பைபிளின் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் ஒரு முறை முழுமையாக படித்துவிடுங்கள்.
குறிப்பாக பழைய ஏற்பாட்டை வாசிக்கிற போது குழந்தைகளை வைத்துக் கொண்டு சத்தம் போட்டு வாசித்துவிடாதீர்கள்.
வாசியுங்கள், நான் சொல்வது ஏன் எனப் புரியும்.
பின்னர் வயல்மாதாவில் இருக்கிற விடயங்களை விமர்சிக்கலாம்.
00
என்னிடம் ஏழு விதமான விவிலியங்கள் இருக்கின்றன. எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகள். ஒவ்வொன்றிற்குமிடையில் பல வித்தியசங்களைக் காட்ட முடியும்.
எழுத்துப் பிழையோ வசன வேறுபாடோ அல்ல. மாறாக கருத்துப் பிறழ்வுகள் கொண்டதாக இருப்பதை அவதானித்திருக்கிறேன்.
குர்ஆன் ஏன் இன்னமும் அரபு மொழியிலேயே ஓதப்படுகிறது என்பதற்கும், அது ஏன் வெறுமனே எழுத்தில் இல்லாமல் மனித உளளங்களிளேயே பாதுகாக்கப்படுகிறது என்பதற்கும் காரணமே இதுதான்.
அது கடவுளின் வான்த்தையாக இறக்கப்பட்ட அதன் தூய வடிவிலேயே ஓதப்பட வேண்டும். அல்லாது போயின் தங்களது தேவைக்கேற்ப மனிதர்கள் அதை மாற்றி எழுதிக்கொள்வர்.
அல்லாஹ் குர்ஆனில் இன்ஜீலையும் (பைபில்) தௌராத்தையும் (பழைய ஏற்பாடு) நாமே இறக்கி வைத்தோம் என்பதை உறுதி செய்கிறான். மேலும் குர்ஆன் அந்த வேதங்களை மெய்பிக்க இறக்கி வைக்கப்பட்டதே.
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது…..
மேலும் அல்லாஹ் கூறுகிறான்,
2:79. அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து (கடவுளிடமிருந்து) வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
00
பைபிள் கிருத்துவின் இறப்பிற்கு எழுபது ஆண்டுகளுக்கு பின்னர் கிரேக்க மொழியில் பலரால் தொகுக்க ஆரம்பிக்கப்பட்டது என்பதை பைபிளின் வரலாற்றை படிப்பவர்கள் அறிவார்கள்.
பைபிளில் முன்னுக்குப் பின்னான முறனான செய்திகள் இருக்கிறது. இதை மறுப்பவர்கள் கமன்டில் உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.
பைபிளில் சிறுவர்கள் படிக்க முடியாத, படிக்கக் கூடாத ஆபசங்கள் இருக்கிறது.
இவ்வளவு குறைகளோடு இருக்கிற ஒரு புத்தகம் எப்படிக் கடவுளின் வசனங்களாக இருக்க முடியும்.
நம்பிக்கை கொண்டவர்களே இதுகுறித்து நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
00
படைத்த இறைவன் மக்களை நல்வழிப்படுத்த நான்கு வேதங்களை அருளினான்.
சபூர் வேதம் ஹீப்ரு மொழியில் தாவூத் நபிக்கு அருளப்பட்டது.
தௌராத் வேதம் ஹீப்ரூ மொழியில் மூஸா நபிக்கு அருளப்பட்டது
இன்ஜில் என்கிற வேதம் அரமெய்க் மொழியில் ஈஷா நபிக்கு அருளப்பபட்டது.
கடைசியாக புர்கான் என்கிற குர்ஆன் முஹமது நபிக்கு அரபியில் அருளப்பட்டது.
00
பைபிளையும் குர்ஆனையும் படிப்பவர்கள் இரண்டிலும் உள்ள செய்திகளில் பல ஒற்றுமைகளைக் காண்பார்கள்.
நீங்கள் உண்மையான தூய நோக்கத்தோடு படிப்பவராக இருந்தால், மெய்மாகவே படைத்தவனின் புறத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட வேதம் எது என்பதை உங்களது உள்ளம் புரிந்துகொள்ளும்.
நீங்கள் உங்களைப் படைத்தவனை தொழுது உங்களுக்கு மெய்யான வழியைக் காட்டுமாறு கோருங்கள்.
நீங்கள் நிச்சயம் வழிகாட்டப்படுவீர்கள்.
இந்த விடயத்தில் இதைவிட அதிகமாக இங்கே எழுத வேறேதுவுமில்லை.நன்றி உமையாழ்