சிவப்பு நிற உதட்டுச்சாயம்

சிறுகதை

மதிய வெயில் சற்றுத் தணிந்த பின்பும் காற்று தாராளமாக வீசிக்கொண்டிருந்தது. தகர அடைப்பு “சடார் படார்” என அடித்தாடிக் கொண்டிருந்தது.  வீட்டு வளவுக்குள் காய்த்து நின்ற தென்னைகளின் ஓலைகள் ஒன்றோடு ஒன்று உரசி சிரித்துக்கொண்டு நின்றன. கோழிகள் தம் குஞ்சுகளுக்கு ஈரலிப்பான மண்ணைக் கிளறி நெளிந்து புரளும் புழுக்களை கொத்திப் பரிமாறிக்கொண்டிருந்தன. நான் விறாந்தையில் வானொலியில் சூரியன் பண்பலை நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆச்சி வாயில் எதோ பழைய பாடலை முணு முணுத்தபடி குசினியில் பொன்னியரிசியை கழுவி மண் பானையில் போட்டு உலை வைத்துக்கொண்டிருந்தார். குமாரியின் காற் சலங்கைச் சத்தம் வானொலியின் பாடலுக்கு இடையில் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் துலாக் கிணற்றில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். தன் பாதத்தில் ஒட்டியிருந்த செம்மண்ணை உதறித் தட்டிவிட்டு மார்பில் கட்டியிருந்த ஈரத்துணியை தொடையிடுக்கில் நசித்துப்பிழிந்து உதறிக்கொண்டு அனிச்சையாக என் பக்கம் திரும்பினாள்.

  “என்னடி நல்ல நித்திரை அடிக்கிறாய் போல சாப்பிட்டியா?” 

என்று கேட்டாள். கொட்டாவி விட்டபடியே நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். நல்ல வெயில் கண்கள் கூசின. கண்களை அழுத்திக்கொண்டு முற்றத்தைப் பார்த்தேன். குறுக்குக்கட்டுடன் கொடியில் தனது உள்ளாடைகளை உலர்த்தக்  கயிற்றை இன்னும் இறுக்கமாகத் தென்னையோடு இழுத்துக் கட்டிக்கொண்டு நின்றாள். பனித்துளிகள் பூத்திருந்த சருமத்தை கண்கள் விரியப்பார்த்தேன். கடலை மாவும் மஞ்சளும் பூசிக்குளித்த சருமம் பூரண எழிலோடு காட்சியளித்தது. உடலோடு ஒட்டியிருந்த ஈர உடுப்பு அவளின் மொத்த அழகையும் என் கண்கள் முன்னே கொண்டு வந்தது. மார்பில் இறுக்கிக் கட்டியிருந்த சாறத்தின் அடிப்பகுதியில் இருந்து  நீர் துளிகள் சொட்டுச் சொட்டாக வடிந்து செம்மண் நிலத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தன. தலையில் முறுக்கிகட்டியிருந்த துவாயை அவிழ்த்து வழுவழுப்பான கேசத்தை நீர் தெறிக்க உதறிக்குனிந்து பின் மீண்டுமொரு முறை துடைத்துக்கொண்டு மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். கட்டுக் குலையாத உடல். கன்னக்குழி. தெத்துப்பல்வரிசை. செவ்விதழ். சிங்கள நடிகை காமினி ஜீவ புஸ்பத்தை கண்முன் கொண்டு வந்தாள். குமாரி நகரில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அழகியாகத்திகழ்ந்தாள். சென்ற வருடம் லயன்ஸ் கிளப் வவுனியா றம்பைக்குளத்தில் நடாத்திய மாவட்ட அழகு ராணிப்போட்டியில் குமாரி பங்குபற்றி இரண்டாமிடத்தை வெற்றி கொண்டாள். “முதலிடத்தைச் சில புள்ளிகளால் இழந்த இடையழகி” என்றுடி மச்சம் எப்போதும் அவளுக்கு எடுப்பாக இருக்கும். மை பூசிய இமைகள் கரு மேகம் சூழ்ந்தது போல இருக்கும். அவள் தெத்துப்பல் தெரியும்படி சிரிக்கு நான் கிண்டலடிப்பேன். சருமம் நல்ல பழுப்பு நிறம். உதட்டில் கீழ் ஒரு குட்ம் போதெல்லாம் கன்னத்தில் சிறு குழி விழுந்தேயாகும். இதற்காகவே நான் சிரிப்புக்கதை சொல்லி அவளை சிரிக்க வைப்பேன். நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட கேசம் பார்ப்பவர்களை தன் வசப்படுத்தும் தகுதிகொண்டது. புத்துணர்ச்சியோடு மீண்டும் தலையை குப்பிற வைத்து தலையணையில் படுத்தேன். வீட்டின் கூரை மீது கிளைகளை பரப்பி வளர்ந்து கிடந்த முருங்கைக் காய்கள் காற்றுக்கு சட சடத்தன. அணில் பிள்ளைகள் தாவிக்குதித்து தகரக்கூரை மீது பாய்ந்து ஓடும் சத்தம். திடீரென வீதியில் ஒரு மோட்டார் வண்டியின் எஞ்சினின் முறுக்கல் சத்தம் பின் வீதி வளைவில் கேட்டது. எங்களது வீதியை நெருங்க அதன் வேகம் குறைந்து கோர்ன் சத்தம் விட்டு விட்டு ஒலித்தது. வாரத்துக்கு இரண்டு தடவையேனும் இச் சத்தத்தைக் கேட்டுப்பழகி விட்டது எனக்கு. 

பரபரப்போடு தன் வேலைகளை முடித்துவிட்டு வேகமாக தலை முடியை முடியுலர்த்தியால் உலர்த்திவிட்டு அவள் அறைக்குள் சென்று உடை மாற்றுவதிலும் முகத்தை ஒப்பனை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். ஆச்சியும் குசினியில் வேலையை முடித்துவிட்டு வேகமாக கிணற்றடிக்குச் சென்றுவிட்டு வந்தார். சில நிமிடங்களில் ஒரு பின்னல் கூடையை கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்த மூங்கிலில் கதிரையில் அமர்ந்து வவுனியா சந்தையில் வாங்க வேண்டிய சாமான்களை பட்டியலிட்டு எழுதிக்கொண்டிருந்தாள் குமாரி. நெற்றியில் வழியும் உலர்ந்த முடிகளை காதினருகில் செருகிவிட முனைந்து தோற்றுக் கொண்டிருந்தாள். அவள் சருமத்தில் ராணி சோப்பின் சந்தண வாசனை வீசியது. வாயில் முணு முணுப்புடன் குளித்துவிட்டு பாட்டி கிணற்றடியால் வந்துவிட்டார். 

வெளிறிக் கிடந்த வானம் கண்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இலக்கின்றி வீட்டுக்குள்ளிருந்து தெருவைப்பார்த்துக்கொண்டிருந்தேன். தெரு சற்றுப்பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. நான் குடியிருந்த வீடு தெருவைப் பார்த்ததாக அமைந்திருந்தது. வீட்டுக்கூரையில் எப்போதும் புழுதி மண்டிக்கிடக்கும். சம அளவான தரை. 

தரை மெழுகிய இரண்டறைகள். கரு நிற பிளாஸ்ரிக் விரிப்பினால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. 

முன்னறையில் ஓட்டுப்பலகை கொண்டு பாதுகாப்பாக பொருத்தப்பட்ட கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கும். வெள்ளி முலாம் பூசிய  இரும்புக்கட்டில் சுவரோடு ஒட்டிப் பொருத்தப்பட்டு இருக்கும் அதில் குமாரி உறங்குவாள். நான் குமாரியின் அறைக்குள் அவளுக்குத் தெரியாமல்  பல தடவைகள் சென்று வந்திருக்கிறேன். நல்ல குளிர்ச்சியான அறை. மறைப்பே இல்லாத மற்ற அறையின் தரையில் பனம்பாயை விரித்து நானும் பாட்டியும் உறங்குவோம். வெள்ளாங்குளத்து மண்ணும் மாட்டுச்சாணமும் குழைத்து மெழுகிய விறாந்தையில் சன்னல்க் கதவுகளை சற்றுத் திறந்துவிட்டால் போதும் சுகமான காற்று சில்லென்று பகல் நேரத்து உறக்கத்தை இனிமையாக்கிவிடும். சில வேளைகளில் அவ்வாறான நேரங்களைக் பாழாக்கிய பெருமை குமாரியை சாரும். பல்லாங்குழி மற்றும் தாயாக்கட்டை   ஆடுவது பாட்டியின் பொழுதுபோக்குகளிலொன்று. நான் பாடசாலை முடிந்த பின்பு சீருடை மாற்றாமலே ஆச்சியுடன் இணைந்து விளையாடுவேன். வெற்றிலையோடு சிறிதளவு சுண்ணாம்பு தடவி அதை மென்றபடி தரையிலே சம்மணமிட்டு அமர்ந்த படியே ஆட ஆரம்பித்தால் அவ்வளவுதான். ஆச்சியை வெல்ல இந்த சுற்று வட்டாரத்தில் யாருமில்லை. 

ஆச்சிக்கு கோழி வளர்ப்பில் அதிக நாட்டமுண்டு. கோழிகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயில் ஓரளவு ஜீவியம் போகிறது. வாரத்தின் இறுதி நாட்களிலும் ஆச்சியின் கோழிப்பண்ணையைப் பராமரிப்பதில் என்னை ஈடு படுத்திக்கொள்வேன். வெள்ளிகிழமைகளில்  பூந்தோட்டத்தில் அமைந்திருக்கும் வில்லூன்றிஸ்வரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வருவோம். ஆச்சி குமாரிக்காக அவளது வாழ்க்கை சிறக்க பலமுறை அங்க பிரதட்சணம் செய்திருக்கிறார். குமாரியின் பிடிவாதம் குறைவதாக தெரியவில்லை. அவளது நண்பர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் கொழுத்தும் வெயில்,மழை என்று கூட பார்க்க மாட்டாள். என்னையும் ஆச்சியையும் ஏதாவது வேலை கொடுத்து வவுனியா நகருக்கு அனுப்பிவைப்பாள். பணம் சம்பாதிக்கிறாள் என்ற திமிர். ஆச்சி இதுவரை அவளது கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றி நான் பார்த்ததேயில்லை. 

“அவள் தானே  எங்கள் வீட்டின் முதுகெலும்பாக உழைக்கிறாள் குமாரி இல்லையென்றால் வீட்டில் உலை ஏறாது” என்பார் ஆச்சி. நான் எழுந்து சட்டையை மாற்றிவிட்டு வவுனியா செல்லும் பேரூந்துக்குச் செல்லத் தயாரானேன். குமாரி  மஞ்சள் நிறத்தில் வெள்ளைப் பூக்கள் வரைந்த மேலிருந்து கீழாக பொத்தான்கள் வைத்துத்தைத்த அழகான கையில்லாத கட்டைச் சட்டையை அணிந்துகொண்டு கையில் ஏற்றி வைத்திருந்த சந்தண ஊதுபத்தியின் நறுமணத்தை  தன் அறை முழுவதும்  படர விட்டாள். 

அவை தெரு வரை மணந்தது. வழமைபோல எந்தப்பேச்சு மூச்சுமில்லாமல் பணிக்கப்பட்ட வேலையை முடிப்பதற்காக தெருவிலே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். மெதுவாக நடந்தால் வெய்யிலில் காயவேண்டியிருக்கும்  வேகமாக நடந்தால் உடல் வியர்த்துக்கொட்டி பிசு பிசுக்கும் பஸ்ஸில் ஏறியவுடன் புளுங்கும். ஆச்சியும் நானும் பேருந்து தரிப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஆச்சி சலரோக வியாதியால் அவதிப்படுகிறார். தசைகள் நலிவடைந்துவிட்டது. கண் பார்வை குன்றிவிட்டது. அவர் நடப்பதில் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவரது கைகளைப் பிடித்து உதவி செய்தேன். தலை மன்னாரில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து தரிப்பிடத்துக்கு வந்து சேர நாங்களும் அவ் விடத்தையடைய நேரம் சரியாக இருந்தது. ஆச்சி வெயிலில் வறண்டுபோன கைகளால் பழுப்பேறிய சேலையை ஒடுக்கிச் சற்று உயர்த்தி தன் தழர்ந்து போன சரீரத்தை  அசைத்து பேரூந்தின் இரும்புப் படிகளில் ஏறினார். பேருந்து நடத்துனர் சற்று விலகி எங்களை நகர இடங்கொடுத்தார். அப்போது பல்சர்  ஒன்று உறுமிக்கொண்டு  எங்கள் வீட்டு வளவை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆச்சி பயண டிக்கெட்டுக்களை எடுப்பதற்காக தன் சேலை முடிச்சில் இருந்து நாணயங்களை எடுத்து கண்களின் அருகே கொண்டுசென்று கவனமாக எண்ணிக் கொண்டிருந்தார். பின் கைகள் நடுங்க பேரூந்தில் நடுப்பகுதியில் உள்ள கம்பியின் உதவியோடு தாண்டித்தாண்டி காலியான இருக்கையில் அமர்ந்துகொண்டு சைகையால் அருகில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார். பேருந்து உதறல்களோடு உருண்டது. வவுனியாச் சந்தை வந்து இறங்கியவுடன் அவரது கையைப்பிடித்து நடந்தேன்.

ஆச்சி வெயிலின் கொடுமையை பார்த்து கண்களைக் கூசிச் சினந்துகொண்டு வாய்க்குள் எதோ முணு முணுத்துக்கொண்டு வந்தார். நான் சமயத்தைப் பயன்படுத்தி

  “ஆச்சி ஏன் அடிக்கடி உங்கை வீட்டுக்கு ஆட்டோ, மோட்ட சைக்கிளில் 

 சில ஆம்பிளைகள் வாறினம்” 

“அதைப்பற்றி இப்ப உனக்கு என்னத்துக்கு வீடெண்டால் ஆக்கள் வருவினம்தானே” 

என் முகத்தைப்பார்க்காமல் சொல்லிக்கொண்டு அருகில் இருந்த கடையில் பரப்பிக்கிடந்த தேங்காய்க்குவியலிலே தேங்காய் ஒன்றை எடுத்து அதன் பொச்சை உருவி எடுத்துவிட்டு காதருகில் வைத்து விரலால் சுண்டிக் குலுக்கினார். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அதைப்பற்றி அறிவதற்கான வயது இல்லையோ தெரியவில்லை. 

சில வருடங்கள் கழிந்தோடின. ஒரு நாள் இரவு பாடசாலை இல்ல  விளையாட்டுப் போட்டிக்கான ஒத்திகையை முடித்துவிட்டு நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். நான் வீட்டுக்கு வந்தது யாருக்கும் தெரியாது. வந்த வேகத்தில் உடல் அசதியினால் இருட்டறைக்குள் உறங்கிவிட்டேன். திடீரென விறாந்தையில் ஆக்கள் கதைத்துச் சிரிக்கும் சத்தம் கேட்டு எழும்பிவிட்டேன். குமாரியுடன் ஒரு இளம் பெடியனின் குரல். ஆச்சியும் அன்று பக்கத்துவீட்டு நல்லி அக்காவை சந்தித்து கோழி முட்டைகளை கொடுக்கப் போய்விட்டார். சில நிமிடங்கள் நீடித்த சம்பாஷனை பின் நிறுத்தப்பட்டு கணப் பொழுதில் குமாரியின் சலங்கைச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. அவள் அறைக்குள் அந்த பெடியனை அழைத்துச்செல்கிறாள் என்பதை புரிந்துகொண்டேன். எதிர்பார்த்தது போல சற்று நேரத்தில் கிரீச் என்ற சத்தத்தோடு குமாரியின் அறைக்கதவு மூடித் தாழ்ப்பாள் போடப்பட்டது. நான் படுக்கையை விட்டு எழும்பாமல் பக்கத்து அறையில் இருந்து வெளிவரும் சத்தத்தை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.  

“குசு குசு” சத்தம் சிரிப்பு கனைப்பாக மாறி பின்னர் குமாரியும் அந்தப்பெடியனும் சிங்களத்திலும் தமிழிலும் மாறி மாறி எதோ குழைந்து குழைந்து பேசியும் இடையிடையே  கைச்சேட்டை விட்டு விளையாடிக்கொண்டிருக்க குமாரி சினுங்கினாள். அந்தப் பெடியன் குமாரியை  இடைவெளி விடாமல் கொஞ்சினான். ஆச்சியிடம் இம்முறை சொல்லியே தீருவேன் என்று முடிவெடுத்த போது குமாரியின் கெஞ்சல் சத்தம் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சில நொடிகளில் பெரு மூச்சுக்களும் கனைப்புக்களும் கேட்கத்தொடங்கின. கிறீச் கிரீச் என்று ஓசையெழுப்பியது  குமாரியின் இரும்புக்கட்டில். மெழுகிய செம்மண் தரை அதிர்ந்து வெடிப்பது போல உணர்ந்தேன். நான் திடுக்கிட்டு எழும்பி வெளியே வர எத்தனித்தேன். 

என் கால்கள் தடுத்தன. அந்த ஓசைகள் என் காதுகளுக்கு எதோ ஈர்ப்பை கொடுத்தன. வகுப்பில் சில ஆண்கள் சக மாணவிகளைக்கண்டால் இப்படி ஓசையை எழுப்பிக்கனைத்து பின் கேலியாக தமக்குள் சிரிப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். கால்கள் நகர விடாமல் தடுத்தன. அப்படியே உடுப்புக்குடையின் மீது என் முழங்கால்களை நெஞ்சசோடு அணைத்தபடியே அமர்ந்து விட்டேன். என் தேகம்  நடுங்கி பின்  வியர்த்துகொண்டியது. இந்த மாதிரி ஒரு போதும் மாட்டியதில்லை. குமாரி என்னை கண்டு பிடித்தால் கொன்றே விடுவாள். உடலில் எதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். நெஞ்சின் நடுப்பகுதியில் இருந்து மசுக்குட்டி ஊர்ந்து தொடை இடுக்கை நெருங்குவது போல உணர்ந்தேன். அப்போது என் கைவிரல்களை ஒன்றாக மடக்கி இறுக்கமாக போர்த்தினேன். தொண்டைக்குள் திரவ உருளைகள் உருண்டன. என் காதுகளை கைகளால் அடைத்தேன். கழுத்துப்பக்கம் மெல்லிய காற்று தீண்டிய போது சுகமாக இருந்தது. திடீரென நான் சாய்ந்திருந்த சுவருடன் இரும்புக் கட்டில் மோதி மோதி அதிர ஆரம்பித்தது. குமாரியின் அலறல். முன்னர் ஒரு முறை என் காலில் கூரிய ஆணி தைத்த போது இப்படித்தான் கத்தினேன் அலறினேன். 

குமாரியின் இரும்புக் கட்டில் கால்கள் “கிரீச் கிரீச்” என்ற ஓசையோடு வேகமாக சுவரை முட்டி அடித்தது. சில நிமிடங்கள் தொடர்ந்த அதிர்வு. புயல் அடித்து ஓய்ந்தது போல பெரும் அலறலோடு அடங்கியது. பின் பெரும்  மூச்சுகள் வெளிவந்தன. நான் பதட்டத்தோடு வெளியே வராமல் மறைந்திருந்தேன். இது குறித்து ஆச்சியிடம் எதுவும் சொல்லவில்லை. ஆச்சி தளர்ந்த விரல்களால் பலமாக தொடையில் இரத்தம் வரும்படி கிள்ளி வைப்பார். அந்த வலியை என்னால் தாங்க முடியாது. வலியைப் போக்க நாலைந்து நாட்களாவது வேண்டும். ஒரு நாள் பாடசாலையில் நண்பியிடம் சிறுநீர் கழிக்கச்செல்லும் போது கொட்டங்காய் மரத்தின் கீழ் அவளை நிறுத்தி சத்தியம் வாங்கி விட்டு நடந்தவற்றை ஒன்றும் விடாமல் ஒப்புவித்துவிட்டேன். ஆடு போல தலையை ஆட்டி ஆட்டிக்கேட்டவள். சனியன் பிடித்தவள். அன்று இரவே அதை தனது ஆண் நண்பனிடம் சொல்லிவிட்டாள். கதை ஊரில் உள்ள இளசுகளின் காதுகளுக்கு செல்ல ஆரம்பித்தது. பாடசாலை முழுவதும் செய்தி பற்றியெரிந்தது. 

பாடசாலை கழிப்பறைச்சுவரில் நடந்த சம்பவத்தின் போது நான் அழுக்கு உடைகள் நிறைந்த கூடையினுள் ஒளித்துப்பார்த்துக்கொண்டிருப்பதுப் போல கேலிச்சித்திரம் ஒன்றை யாரோ  வரைந்து என் பெயரையும் அம்புக்குறியிட்டு வரைந்து விட்டிருந்தார்கள். இதனால் என்னுடன் நெருக்கமாக கதைத்துப்பேசிய திலீபனும் என்னை விட்டு விலகி நடந்தான். அவன் சில நாட்களாக என்னைப் பார்ப்பதை கூட தவிர்த்து விடுவதை உணர்ந்தேன். வழமையாக பாடசாலை சிற்றூண்டிச் சாலையில் இருவரும் சேர்ந்து ஒரே மேசையில் சாப்பிடுவோம். அவன் இப்போது என் கண்ணில் படுவதேயில்லை. “அவையள் ஒரு மாதிரி ஆக்கள் சாதி வேற சரியில்லை. நான் இப்ப அவளோடு கதைக்கிறதில்ல அவளைக் காய்வெட்டிற்றன் ” என்று ஆட்களுக்கு சொல்லி இருக்கிறான். சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஒரு நாள் ஆச்சியும்  குமாரியும் என்னை பிடித்து அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். ஆச்சிக்கும் குமாரிக்கும் சரியான தலை குனிவாகிவிட்டது. 

அன்று நான் மனம் கசிந்து அழுதது போல ஒரு நாளும் அழுததில்லை. இரண்டு நாட்கள் எதுவும் உண்ணாமல் அறைக்குள் முடங்கிக்கிடந்தேன். என் அம்மாவை நினைத்து அழுதேன். 

02

நான் என் பெற்றோரை நான்கு வயதில் இழந்துவிட்டேன். வன்னி யுத்தம் என்னையும் அநாதையாக்கிவிட்டது. வேரவில்லுக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் நீண்டு வளர்ந்த தென்னந்தோப்புக்குள் சிறிய குடிசை அமைத்து அதில் எங்கள் சின்னக் குடும்பம் வாழ்ந்து வந்தது. இரண்டு முறை என் பெற்றோருக்கு குழந்தைகள் இறந்து பிறந்திருக்கின்றன. 

“ என் மகள் எமனுக்குத் தப்பிப்பிறந்த குழந்தை அருள் மிகு வேரவில் காமாச்சி அம்மனின் சாயலிலே பிறந்திருக்கிறாள்” என்பார் அம்மா.

எப்போதும் என் நெற்றியில் திரு நீறு பூசி இருக்கும். அம்மா அப்பாவுக்கு நான் என்றால் உயிர். அப்பா மரமேறி பதநீர் இறக்கி அதை விற்று எங்களை காப்பாறிக்கொண்டிருந்தார். அம்மா வீட்டுக்கு முன்னால் தென்னங்கிடுகினால் பத்தி இறக்கி மளிகைக் கடை வைத்து மேலதிகமாக காட்டுத்தேன், பனங்கிழங்கு, பனம்பழம், பனாட்டு போன்றவற்றையும் விற்று வந்தார். அப்பாவின் உடல் வைரம் பாய்ந்த உடல். விரல் சுண்டுவதற்குள் இரண்டு மரம் ஏறி நுங்கு வெட்டி சீவிக்கொடுப்பார். நானும் அம்மாவும் அதை சுவைத்துக் குடிக்கும் போது நுங்கின் சாறு எங்களுக்குள் தெறிக்க அம்மா தன் சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு தன் கையால் நுங்கின் கண்களை நோண்டி எடுத்து ஊட்டுவாள். எப்பவும் கறுத்து வியர்த்துக்கொட்டிக் கொண்டிருக்கும் உடலை நான் தொட்டுப்பார்ப்பேன். 

கடும் உழைப்பாளி. தேகம் முழுவதும் காய்த்து மரத்துப்போய் இருக்கும் பார்க்கவே சில வேளைகளில் கவலையாக இருக்கும். அப்பா ஒரு நாளும் சோர்ந்து வியாதியில் படுத்ததே இல்லை. அப்பா கள்ளு கொட்டிலில் கள்ளைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிவருவார். தினமும் தான் பருகுவதற்காக மட்டும் ஒரு முட்டியில் இரண்டு கிண்ணமளவு  கொண்டுவருவார். நான் ஒரு சில்வர் கப்பில் கொஞ்சம் திருடிப் பருகிவிடுவேன். அப்பா அதைக்கண்டு பிடித்துவிட்டு அம்மாவுக்குத் தெரியபடுத்தாமல் செல்லமாக தண்டிப்பார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஏற்பட நான் தான் வழி வகுப்பேன். வீட்டுக்கு அருகில் தமிழீழ கல்விக்கழகம் நடாத்திய பாலர் பாடசாலை ஒன்று இருந்தது. நான் அங்கே கல்வி கற்றேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. இரண்டாயிரத்து ஒன்பது வன்னி யுத்தத்தில் நடுவில் சிக்கிக்கொண்டோம். எங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறினோம். நாங்கள் கிராஞ்சிப்பகுதியால் சிரமப்பட்டு வெளியேறி குமுளமுனையில் தற்காலிக முகாமிட்டு இருந்தோம். 

அங்கு இருந்த பாலர் பாடசாலையின் அருகில் அதிகாலை மூன்று மணியளவில் உலங்குவானுயர்த்தி பொழிந்த குண்டு வீச்சில் எண்ணுக்கணக்கானவர்கள் அந்த இடத்திலே பரிதாபமாக கொல்லப்பட அப்பாவுக்கு கழுத்திலும் அம்மாவின் நெஞ்சுப்பகுதியிலும் பலத்த காயம். நான் அப்பா அம்மாவுடைய கைப்பிடியைத் தளர விடவில்லை. அப்பாவுடைய கழுத்திலிருந்து இரத்தம் சீறி முகம் முழுவதும் நனைத்துவிட்டது. 

ஒரு கட்டத்தில் அப்பாவால் நடக்கக்கூட முடியவில்லை. அப்பா அம்மாவையும் என்னையும் இறுக்கிக்கட்டிப்பிடித்துக்கொண்டு மண் தரையில் சரிந்துவிட்டார். இரத்தம் பூமியை நனைத்த போது பொழுது கூட புலரவில்லை. நான் சோர்விலிருந்து கண்களை திறந்தேன். நாங்கள் ஒதுங்கிக்கிடந்தது ஒரு வீச்சு ரொட்டிக்கடையில். இரவு ரொட்டி வீசிய வெக்கையும் அடங்கவில்லை. மாவு ,முட்டை, மரக்கறிகளின் துணிக்கைகள் அடுப்புக்கு அருகில் சிந்திக்கிடந்தன. நெருப்புத்த தணல் அணைந்து வெறும் புகையைக் கக்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் வயிற்றில் பசி இருந்ததை உணர்ந்தேன், வயிறு எரிந்து புகைந்துகொண்டிருந்தது. எவருடைய  முகமும் சரியாக தெரியவில்லை. என்னைப்போல பல குழந்தைகள் கதறி அழுதுகொண்டு இருந்தனர். பெற்றோரை தவற விட்ட பிள்ளைகளும், குடும்பத்தை தவற விட்ட வயோதிபர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த வேளையில் எங்கோ இருந்தோ அம்புலன்ஸ் வண்டியின் சிவப்பு வெளிச்சம். 

அப்பாவுடைய குரல் அடங்கி உடல் குளிர ஆரம்பித்துவிட்டது. நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் கட்டியழுதுகொண்டிருந்தோம். அப்பாவை தூக்கி அம்மா மடியில் வைத்து அடைத்த குரலில் தலைவிரி கோலமாக கத்தி அழுதது இப்பவும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போதெல்லாம் மரண வேதனையடைவேன். அம்மாவுக்கும் நிறைய இரத்தம் உடலில் இருந்து வெளியேறிவிட்டது. அந்த நேரம் “தண்ணீர் தண்ணீர்” என்று விரல்களால் சைகை செய்து அனுங்க நான் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருந்த பாலை மரத்துக்கு கீழ் இருந்த தடித்த எழுத்தில் சிவப்பு நிற குருசு இட்ட கொட்டகையை நோக்கி ஓடினேன். அங்கு செத்த உடல்கள் கும்பமாக குவிக்கப்பட்டு இருந்தன. நான் பயத்தில் போன வேகத்தில் வெளியே ஓடி வந்துவிட்டேன். மீண்டும் அம்மாவை தேடி வேகமாக வந்தேன். அம்மா நின்ற இடத்தில் இல்லை. அப்பாவுடைய உடல் மட்டும் கிடந்தது. அப்பாவை விட்டு தனியாக போக மனமில்லாமல் தேம்பி அழுதேன். அம்மாவை காணவில்லை. தேடினேன் தேடிக் கொண்டிருந்தேன். தலையில் உடுப்பு மூட்டையுடன் தண்டித்தாண்டி வந்த சுந்தரி ஆச்சியும் குமாரியும் சொன்னார்கள். தண்ணீர் எடுக்க ஓடிப்போன போது தேவாலயத்தின் மீது விழுந்த செல் வீச்சில் அம்மா செத்துப்போச்சா என்று. என் தலையில் குன்று விழுந்தது போல இருந்தது. என்னால் தாங்க முடியவில்லை. கத்தி கூச்சலிட்டேன். தொண்டை வறண்டு சத்தம் வெளியில் வரவில்லை. ஒரு சொட்டுத்தண்ணீர் அம்மா கேட்டவ என்னால் கொடுக்க முடியாத பிள்ளை ஆகிவிட்டேனே என்று வேதனைப்பட்டேன். தொடர்ந்து குண்டு மழை பொழிந்துகொண்டு இருக்க என்னை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறு கையில் குமாரியையும் அழைத்துக்கொண்டு சுந்தரி ஆச்சி வேகமாக நடந்து போனவ. எங்கு போறதென்று தெரியாமல் மணல் மேடுகளில் கால்கள் புதைய எதோ இடத்துக்கு வந்து சேர்ந்தேன். 

இறுதிச்சண்டையில் தன் மகனும் செத்துபோய்விட்டதாக ஆச்சி சொன்னவ. அது ஆச்சியின் குடும்பத்தை சரியாக பாதித்துவிட்டது. ஆனாலும் அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை கஞ்சியோ கூழோ இந்த வீட்டில் வேளை தவறினாலும்  கிடைக்கும். இடையிடை மனம் நொந்து அம்மா அப்பாவை நினைத்து தனிமையில் கண்ணீர் விடுவேன். சுந்தரி ஆச்சி என்னை தேற்றுவார். ஆச்சி இல்லையென்றால் நானும் என்றோ  செத்துப் போயிருப்பேன். குமாரி அக்காவும் என்னுடன் பாசமாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்வார். குமாரிக்கு நிரந்தர வேலை கிடையாது. குடும்ப வறுமையால் பள்ளிக்கூடப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு சில மாதங்கள் அருகில் இருந்த ஊறுகாய் தொழிற்சாலையில் வேலை செய்தாள். பின்னர் உடுப்புக்கடை,இறுதியாக நகரில் இருந்த லொட்ச்சில் வேலை செய்தாள். குமாரியின்  உழைப்பிலே எங்கள் வாழ்க்கையும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதனால் என்ன தவறு செய்தாலும் குமாரியை ஆச்சிக்கு திட்ட மனம் வராது எங்கு போகிறாள் வருகிறாள் என்று எதுவும் கேட்க மாட்டார். 

எனக்கும் குமாரியைப்போல ஒரு சுதந்திரப்பறவையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அவளுக்கு குட்டைப் பாவாடையும் டீ சேட்டும் அணிந்தால் எடுப்பாக இருக்கும். சில வேளைகளில் அவளைப்போல தலைவாரி உடையணிந்து இடுப்பு நெளித்து நடந்து பார்ப்பேன். அப்போது குமாரி கண்டுவிட்டால் செல்லமாக கண்டிப்பது போல   “முதலில் போய் படிக்கிற அலுவல பாரு என்ன மாதிரி கஸ்ரப்படாமல்” என்று செல்லமாக துரத்திவிடுவாள். ஒரு நாள் குமாரி தனது அறையை மூடாமல் சென்றுவிட நான் சமயம் பார்த்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் துள்ளியும் புரண்டு புரண்டு படுத்துப்பார்த்தேன். சிறு வயதில் எங்களது வீட்டில் இருந்த கட்டிலும் அம்மா அப்பாவுக்கு நடுவில் படுத்து உறங்க விடாமல் தொந்தரவு செய்ததும் நினைவுக்கு வந்தது. குமாரியின் மேசை மீது தங்க முலாம் பூசிய பெட்டி எப்போதும் இருக்கும் அதைத்திறந்து பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அன்று நிறைவேறியது. ஆவலோடு பெட்டியைத் திறந்தேன். இதுவரை நான் கண்டிராத பல பொருட்கள் உள்ளே இருந்தன. நகங்கள் கத்தரிக்கும் கருவி, இமைகள் சமப்படுத்தும் கருவி,மேலும் நான் அறிந்திராத பல பொருட்கள். தேன் நிறத்தில் மூடி இட்ட சிவப்பு நிற உதட்டுச்சாயத்தை எடுத்துப் பூசி, ரோசாப்பூவின் நறுமணத்தை உடைய வாசனைத் திரவியத்தையும் உடல் முழுவதும் தெளித்து  அவளது கட்டிலில் முன்னால் வைத்திருந்த  நிலைக்கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்தேன். ஆச்சி வீட்டுக்குள் வரும் சத்தம் கேட்க சட புடவென்று வெளியே வந்தேன். நான் வந்த கோலத்தைப் பார்த்து ஆச்சி சிரிக்க நான் தலையைச் சொறிந்துகொண்டு விரல்களால் தரையில் படம் வரைந்தேன். ஆச்சி செவியைத்திருகி பின் செல்லமாக கோபித்தார். கிணற்றடிக்கு அனுப்பி  உடலில் பூசிய நறுமணம் போகும் வரை குளித்துவிட்டு உள்ளே வந்தேன். குமாரி வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு கூச்சலிட்டாள். பாட்டி தான் அறைக்குள் நுழைந்து துப்பரவு செய்யும் போது சென்ற் கொட்டிவிட்டதாக பொய் சொன்னார். குமாரி சமாதானம் ஆகவில்லை. அன்று முழு நாளும் தீயாய் சுட்டெரித்துக் கொண்டிருந்தாள். 

வருடங்கள் உருண்டோடின. குமாரி சவுதி அரேபியாவுக்கு விமானமேற எனக்கு வயதும் பதினாறாகிவிட்டது. குமாரி விமான நிலையத்தில் பயணிகளின் வரிசையில் நின்று, பொன்னிறத்தில் அருகு தைத்த கருப்பு நிற பர்தாவுக்குள் மறைந்து எங்களைப்பார்த்துக் கைகளை அசைத்து பாய் பாய் என்ற சத்தம் வராமல் நளினமாக உதட்டை அசைத்த போது பாட்டியின் கண்கள் பனித்தன. மை பூசிய கண்கள் நிறைந்த கருணையோடு  எதோ என்னிடம் சொல்ல எத்தனித்தாள். ஒலிபெருக்கியில் அறிவித்தல் கேட்டது அவள் உள் நுழையும் நேரமும் வந்துவிட்டது. குமாரியை வழியனுப்பிவிட்டு நீர்கொழும்பில் இருந்து வீட்டுக்கு வர நள்ளிரவைக் கடந்துவிட்டது. ஆச்சி சற்று உடல் அசதியில் வந்த வேகத்திலே உடுப்புக்கூட மாற்றாமல் படுத்துவிட்டார். அடுத்த நாள் காலையில் நான் எழுந்து கோழிகளுக்கு தீனி வைத்துவிட்டு பிரதான வாசலில் தலையை குனிந்து நிமிர்ந்த போது ஆச்சி என் கண் எதிரே நின்றார். 

திடுக்கிட்டு உடலை சற்றுப் பின்தள்ளி விலக முற்பட்டேன். ஆச்சி சிரித்த படி கைகளில் இருந்த தங்க நிறம் பூசிய பெட்டியை என் கண் முன் நீட்டினார். என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அடக்க முடியாத ஆனந்தம்.

 “அடி கள்ளப் பொட்ட இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் எடுத்துக்கொள்” என்று மங்கிப்போன கண்களை சிமிட்டியபடி கைகளில் திணித்தாள். நான் அதை ஆர்வத்தோடு திறந்தேன். உள்ளே குமாரி பயன்படுத்திய அத்தனை ஒப்பனைப் பொருட்களும் உள்ளே இருந்தன. என் கண்கள் அவள் பயன்படுத்திய சிவப்பு நிற லிப்ஸ்ட்டிக்கைத்தேடின. ஒரு சிறிய வெண் காகிதத்தில் லிப்ஸ்ட்டிக் சுற்றப்பட்டு கேசத்தில் மாட்டிவிடும் கிளிப்பின் கோர்வையின் அடியில் கிடைத்தது. விரல்களால் பொருட்களை அகற்றிவிட்டு அந்தக் காகிதத் துண்டை ஆர்வத்தோடு எடுத்துப் படித்துப்பார்த்தேன்.

 “என் செல்லக்குட்டி நிஷாவுக்கு அக்காவின் அன்புப்பரிசு. நீதான் இப்போது வீட்டுக்கு பெரிய ஆள் வீட்டை வடிவா கவனி ஆச்சியை கவனமாக பாரு என்னுடைய அறை நான் திரும்பி வரும்வரை உனக்குத்தான். நீ கன தரம் என்ர அறைக்குள்ள வந்து பார்த்து இருக்கிறாய் எனக்கு எல்லாம் தெரியும் பயப்பிடாத இப்போ உனக்குத்தான் வடிவா சுத்தமாக வைத்திரு அலுமாரிக்குள்ள சில உடுப்புகள் உனக்கு வைத்துவிட்டு வந்தனான் எடுத்துப்போடு ஆச்சியிடம் வங்கிக்  கடன் அட்டை உண்டு. வாங்கி வைத்துக்கொள் ஓகே. 

அக்கா 

காகிதத்தைப்படித்துவிட்டு பின்னால் இருந்த பிரம்புக் கதிரையில் அமர்ந்துவிட்டேன். என் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஓடிக் கொண்டிருந்தது. கண்களை மறைத்த கேசத்தை எடுத்து விட்டு ஆச்சி என் தலையை தடவி என்னைத் தழுவிக்கொண்டார். எனக்குள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை மலர்ந்தது. இப்போது என் அருகில் என்னுடன் இருக்கும் சொந்தம் ஆச்சி மட்டும் தான். குமாரி எங்களை விட்டு நெடுந்தூரம் சென்று விட்டாள். குமாரி குறித்து நான் வைத்திருந்த விம்பம் சில நிமிடங்களில் நொருங்கியது. அன்று இரவு விருப்பம் போல குமாரியின் கட்டிலில் படுத்துப் புரண்டு எழும்பினேன். இனி நான் யாருக்குப் பயப்பட வேண்டும். எதை செய்தாலும் முழு சுதந்திரத்தோடு செய்தேன். தினமும் பாடசாலையால் வந்தவுடன் எனது அறையை துப்புரவு செய்வேன். விடுமுறை நாட்களில் கூரையின் உட்பகுதியில் படிந்திருந்த தூசிகளை தென்னையோலையால் தட்டி சுத்தப்படுத்தினேன். விருப்பம் போல முகத்தை ஒப்பனை செய்து கடைகளுக்கு நானே சென்று பொருட்களை கொள்வனவு செய்தேன். 

குமாரி சவுதிக்கு போன அடுத்த வருடம் டிசம்பரில் நான் பூப்பெய்த்தேன். அன்று பாடசாலை நாள். அதிகாலை வழமையான மாணவர்களின் ஒன்று கூடலிலே வரிசையில் நிற்கும் போது என் அடிவயிற்றில் எதோ பிரளயம் ஏற்படுவது போல வயிறு கலங்கிக் குத்தெடுத்தது. தலை சுற்றியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. சோர்வடைந்து போனேன். என் யோனித்துவாராம் திறந்து வெண்நிற சட்டையில் குருதி வடிந்து வெளியில் கசிய ஆரம்பித்தது. அன்று வகுப்பு பெடியள் பெட்டைகள் என்னைக்  கிண்டலாக பார்த்துக் கொண்டிருந்தனர். என்னுடைய மேல் வகுப்பு அண்ணன்களும் என்னை ஒரு மாதிரி பார்த்துச் சிரித்தார்கள். தங்களுக்குள் எதோ குசு குசுத்தார்கள். நான் புத்தகப்பையால் என்னுடைய சட்டையை மறைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சிலர் நான் குண்டடித்து விட்டேன். என்று காதில் கேட்கும் படியாக சொன்னார்கள். பாடசாலை முழுவதும் சம்பவம் பரவியது. அதிபர் உடனடியாக என்னை. வகுப்பாசிரியையிடம் அனுப்பினார். சசிகலா மிஸ் “இது பெண்ணாய் பிறந்தால் காலா காலத்துக்கு நடக்கிற விசயம் தானே கண் கலங்காதே ஒண்டும் தப்பில்லை”  என்று சொல்லி  வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். 

அங்கு போனபோது ஆச்சி  சிரித்த முகத்துடன் “நேற்றுத்தான் கனவு கண்டேன். உனக்கு தண்ணீர் ஊத்தி சடங்கு செய்து ஊருக்கே சோறு போட  வேண்டும் என்று” என்று சொல்லி என் கையைப்பிடித்து வரவேற்றார். பின் ஆடையை கழற்றி நீண்ட பாவாடை ஒன்றை மார்பில் இறுக்கிக் கட்டிவிட்டு கிணற்றடியில் வைத்து தலையில் தண்ணீரை ஊற்றினாள். நான் சுத்தமானேன். “நீ இப்ப குமர் ஆகிவிட்டாய்” என்று சொல்லி நெற்றியில் முத்தமிட்டார். அப்போது என் கண்கள் பனித்தன. என் அம்மாவை நினைத்துக் கலங்கினேன். இந்த நேரம் பார்த்து குமாரி இல்லையென்று பாட்டி கவலைப்பட்டார். குமாரி இரண்டு வருடம் கழிந்த பின்னர்தான் ஊருக்கு வரலாம் என்று அரபிக்காரன் சொல்லிவிட்டதாக குமாரி கடிதம் எழுதியிருந்தாள். குமாரி சில மாதங்கள் தொடர்ச்சியாக பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பின்னர் பணம் அனுப்பாமல் விட்டு விட்டாள். வீட்டில் உணவுக்கே திண்டாட்டம். நானும் ஆச்சியும் கோழி முட்டைகளை விற்று சாமாளித்துக் கொண்டிருந்தோம். குமாரியின் சம்பளத்தை மொத்தமாக அரபிக்கு கீழ் இருக்கும் மலையாளி பிடிச்சு வச்சு இருக்கிறானாம். எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. நான் வேலைக்கு போயே ஆகவேண்டிய சூழ் நிலை. உயர்தரப்பரிட்சையும் நெருங்கியது. ஒழுங்காக படிக்க முடியவில்லை. 

பள்ளிக்கூட காசு கட்டகூட பணம் இல்லாததால் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகவில்லை. இந்தக் கஸ்ரத்துக்குள்ள எப்படி டியூசன் போறது. இப்படி காலம் சென்று கொண்டிருக்கும் போது எங்களது தெரு மூலையில் புதிதாக கோழிகளுக்கான தீவனம் விற்கும் கடை ஒன்று திறந்தார்கள். அதில் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று விதானை மூலம் ஆச்சிக்கு தகவல் வர உயர் தரப் பரிட்சை எழுதி முடிந்த கையோடு அந்த வேலைக்குப்போனேன். 

அந்தக் கடையை தினமும் திறக்க கணேசன் என்ற பெடியன் வருவான். அவன் முதலாளியின் மகன். குட்டி யானை போல பெயருக் கேற்ற உருவம் ஆனால் முகம் அப்படியல்ல நல்ல முகவெட்டு காதல் தேசம் அப்பாஸ் மாதிரி. எப்போதும் துரு துருவென்று கண்ணில் படுவான். என்னிலும் சில வயதுகள் கூட இருக்க வேண்டும். பொது நிறம், எப்போதும் தொடை தெரிய அரை காற்சட்டையுடன் கடைக்கு வருவான். சரியான சினிமாப் பைத்தியம், அவனது தகப்பனுக்கு சொந்தமாக இரண்டு மூன்று கடைகளும் ஒரு சினிமா அரங்கும் நகருக்குள் இருக்கிறது. தினமும் என்னுடன் கதைப்பான். சாப்பிடக்கூட தன் வீட்டுக்குப் போக மாட்டான். என்னையும்  வீட்டுக்குச் சாப்பிட விடாமல்  தடுத்துக் கடையில் இருந்து கட்டுச் சோறு எடுத்து வருவான். எங்கள் கடைப்பழக்கம் நட்பாகி நாளடைவில் காதலாகி கனிந்துவிட்டது. ஒரு நாள் என்னை சினிமாவுக்கு அழைத்துப் போனான். இரவுக்காட்சி என்ற படியால் நல்ல கூட்டம் அவர்களது சொந்த அரங்கு. தன் விருப்பத்துக்கு நொறுக்குத் தீனிகளையும், குடிவகைகளையும் வாரி இறைத்தான். திரையில் காட்சிகள் ஓடும்போது அவனது கால்களும், கைகளும் சும்மா இருக்கவில்லை. அன்று இரவு தான் நான் இறுதியாக அவனை சந்தித்த நாள். பின் நாட்களில்  அவனும் கடைக்கு வருவதில்லை. விடயம் முதலாளிக்கு தெரிய என்னையும் பணியில் இருந்து நிறுத்திவிட்டார். வறுமை மீண்டும் தலைவிதித்தாடியது. 

கோழி முட்டைகளை பனங்கிழங்கோடு  வேகவைத்தும் பொரித்தும்  பசியை போக்கிக்கொண்டு இருந்தோம். சுந்தரி ஆச்சியின் உடல் நிலை இன்னும் மோசமாகி வருவதை உணர்ந்தேன். நான் முழு நேரமும் வீட்டிலே இருப்பதனால் ஆச்சியை கோழி முட்டைகளை சேகரித்து வைக்கோற் பெட்டிக்குள் பக்குவமாக எண்ணி அடுக்கும் பணியை மாத்திரம் விட்டுக் கொடுத்தேன். ஒரு நாள் அடித்தது லொத்தர். வாட்ஸாப்பில் கிடைத்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு நடுத்தர வயதுடைய ஒருவர் தொலைபேசியில் அழைத்து எங்களது முட்டைகளை மொத்தமாக தமது ஆசிரமத்துக்கு கொள்வனவு செய்வதாக சொன்னார். நாங்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தோம். அடுத்த நாள் காலை அந்த நபரை வரவேற்பதற்காக தயாராகினோம். நேரம் வந்தது. ஒரு மோட்டார் சைக்கிள் உறுமிக்கொண்டு எங்கள் வீட்டு தெரு முனையில் வந்து நின்றது. நான் வெளியில் வந்து பார்த்தேன். 

என்னுடன் முட்டை கேட்டு அழைத்த மகேசன் என்ற வாடிக்கையாளர் தான் என ஊகித்து அவரை உள்ளே அழைத்து கதிரையில் அமரும் படி சொன்னேன். நீண்ட காலம் வீட்டுக்கு வந்து பழகியவர் போல அவரது நடவடிக்கையிருந்தன. ஆனாலும் பார்க்க நல்ல கண்ணியமான படித்தவர் போல தோன்றினார். சுருண்ட கேசம். உரோமம்  மணிக்கட்டு வரை கறுத்து திரண்டிருந்தது. நீல நிறத்தில் டெனிம் ஜீன்சும் கருப்பு நிறத்தில் மேல் சட்டையும் அவருக்கு எடுப்பாக இருந்தது. பொதுவான நிறம், கண்களை வெட்டி வெட்டிப்பேசினார். நான் பேசும் போது என்னை விழுங்குவது போல பார்த்தார். அதற்கு இடையில் ஆச்சி தேநீர் கொண்டு வந்து பரிமாறினார். நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். “ஈறு தெரிய சிரித்துச் சிரித்துப் பேசுகிறார் அவரிடம்  பொய்மை இருக்காது” என்று பாட்டி காதுக்குள் குசுகுசுத்தாள். பின்னர் தமக்கு உடனடியாக தேவையான முட்டைகளை கையோடு எடுத்துச் செல்வதாக சொன்னார். அதற்கான பணத்தையும் நேரிலே கொடுத்துவிட்டு நன்றி கூறினார். நாங்கள் தான் நன்றி கூறவேண்டும் என்று சொல்லி சில கட்டுப் பனங்கிழங்குகளையும் கையோடு ஆச்சி கொடுத்தார். “உண்டு பாருங்கள் ருசியில் திரும்பத்திரும்ப வருவீர்கள்” என்று பாட்டி பற்கள் தெரிய சிரித்தபடி சொல்ல கண்கள் விரிய சிரித்தார் மகேசன். பின்னர் விடைபெற்றுச் சென்றார். நான் வாசல் வரை சென்று மகேசனை வழி அனுப்பி வைத்தேன்.

அன்று இரவே அவரது தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. பனங் கிழங்கு மிகவும் சுவையாக இருப்பதாகவும் மீண்டும் உண்ண வேண்டும் கொடுப்பீர்களா? என்று கேட்க நான் மறுத்துப் பேசவில்லை வாருங்கள் வீட்டுக்கு என்று அழைத்தபோது தொடர்ந்து பேசத் தொடங்கினார். எங்கள் பேச்சு முட்டை வியாபாரத்தைத்தாண்டி பொதுவான விடயங்களைப்பற்றி விரிந்தது. பின்னர் இருவரும் எங்களை அறியாமலே ஏதோவெல்லாம் பேசினோம். என்னுடன் பேசுவதற்காக தினமும் தொலைபேசியில் அழைத்தார். நான் மகேசுடன் பேசுவதற்காக விஷயங்களை மனதுக்குள் சேமித்து வைத்திருந்தேன். வீட்டுக்கு வந்து பாட்டிக்கு சின்னச்சின்ன உதவிகளை செய்து கொடுத்தார். நாளடைவில் அவரது அன்பான உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவரிடம் என்னுடைய மனதைப் பறிகொடுத்துவிட்டேன். 

அவர் என்னை ஒரு நாள் வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள சுவையருவி சிற்றூண்டிச்ச்சாலைக்கு அழைத்து உபசரித்தார். 

அன்று நான் அணிந்த சுடிதார் தான் நினைத்த மாதிரியே அழகாக உள்ளதாகவும் தன்னைக் கவர்ந்துவிட்டதாகவும் இன்று வழமையை விட நான் அழகாக இருப்பதாகவும் கூறி என்னை ஆச்சரியப்படுத்தினார். நான் அவரது பேச்சுக்கு சற்று மயங்கித்தான் போனேன். பேச்சைத்தொடர்ந்தார். பின் எதிர்பார்க்காத நேரத்தில் சிவப்பு  நிற ரோசா பூச்செண்டை கொடுத்து என்னை மணம் முடிப்பதாக சொன்னார். நான் அவருக்கு உடனே பதில் தரவில்லை. மகேசும் வற்புறுத்தவில்லை. சில நாட்கள் சென்றன. 

எங்களது சந்திப்பு தேநீர் சாலையிலும் சினிமா அரங்குகளிலும் நீடித்தது. அன்று வெள்ளிக்கிழமை. வழமை போலல்லாது எழுந்து வீட்டைச்சுத்தம் செய்து அழகுபடுத்தினேன். பின் கிணற்றுக்குச் சென்று மஞ்சள் பூசி தலைக்கு சிகைக்காய் கொண்டு முழுகிவிட்டு வந்தேன். அதற்குள் ஆச்சி சமைத்து வைத்துவிட்டார். நான் உள்ளே வந்து தலையை துடைத்து உலர்த்திக் கொள்ள நேரம் மதிய ஒருமணியைக் கடந்துவிட்டது. வேகமாக என் அறைக்குள் சென்று தங்க முலாம் பூசிய பெட்டியை எடுத்து சிவப்பு நிற உதட்டுச்சாயத்தை உதட்டில் மென்மையாக பூசினேன்.

 உடலும் மனமும் புத்துணர்ச்சியடைந்தது. முகத்துக்கு அளவான ஒப்பனை செய்து தலையை வாரி உச்சி மண்டையில் கொண்டையிட்டேன். தேவையான வாசனைத் திரவியத்தை உடலுக்கு பூசினேன். சில ஊதுபத்திகளை எடுத்து பற்றவைத்து அதன் புகையை அறை தொடங்கி வீட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் செல்லும்படி படர விட்டேன். ஆச்சி குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்து விட்டார். தூரத்தில் மோட்டார் வண்டியின் உறுமல் சத்தம் கேட்டது. நான் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயார் செய்து மேசையில் வைத்தேன். சுந்தரி ஆச்சி இரண்டு உரைப்பைகளை எடுத்து உதறி பின் பக்குவமாக மடித்து கைக்குள் அடக்கிக் கொண்டார். நான் நெஸ்ட மோல்ட் பேணியில் இருந்த சில பண நோட்டுக்களை எடுத்துக் கொண்டு ஆச்சியிடம் கொடுக்க ஆச்சி அதைப்பெற்றுகொண்டு  ஊன்று கோலின் உதவியுடன் ரவுண் செல்வதற்காக தலைமன்னாரில் இருந்து வரும் பேருந்தைப்பிடிக்க மெதுவாக  நடக்க ஆரம்பித்தார். 

சில நாட்கள் கழிந்தன. தைப்பொங்கலுக்கு முதல் நாள். ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று அதிகாலை எங்கள் வீட்டுப்படலை திறக்கும் சத்தம்  கேட்டு நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன. போலீஸ் இராணுவத்தினரை கண்டால் குறைப்பதுதான் நாய்களின் வேலை. அன்று அப்படியல்ல குரைத்த நாய்கள் திடீரென சமாதானம் ஆகி குழையும் சத்தம் கேட்டன. சில நிமிடங்களில் வீட்டுக்கதவு தட்டும் சத்தம். மகேசுதான்  இந்த நேரம் வந்திருக்கிறேர் என்று சொல்லிக்கொண்டு குலைந்து கிடந்த கேசத்தை வழித்துக்  கொண்டை போட்டுக் கொண்டு சேலையை சரிசெய்தபடி கதவின் அருகில் சென்று ஆச்சி மெதுவாகத் திறந்தார். 

எதிரே குமாரி. ஆச்சி பெரிய சத்தமாக குமாரி என்று கத்தினார். நான் எழும்பி ஆச்சிக்குப் பின்னால் ஓடினேன். அது குமாரிதான். மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை மீண்டும் வீட்டுக்கு வசந்தம் வந்துவிட்டது.  சந்தோசத்தில் துள்ளிக் குதித்தோம். இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்வதற்காக மகேசுக்கு ஒரு குறுஞ்செய்தி உடனடியாக அனுப்பினேன். பின் குமாரி கொண்டு வந்த பொருட்களை விரித்துக்கிடந்த பாயில் அடுக்கி வைத்தேன். குமாரி வேறு பாசையில் யாருடனோ எதோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். இன்று மதியம் கோழி அடித்து குழம்பு வைத்தார். பாட்டி மகேசையும் மதிய உணவுக்கு அழைப்பது திட்டம். மகேசை தொடர்ந்து அழைத்தேன். பதில் இல்லை. அடுத்த நாளும் ஓயாமல் அழைத்தேன். பதில் இல்லை. ஒரு வாரம். மாதம் ஆகியும் அவன் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. தினமும் எங்கள் தெருவைத்தேடி மோட்டார் வண்டி உறுமிக்கொண்டு வருகிறதா எனப் பார்ப்பேன். ஒரு நாள் வெளி வாசலில் நின்று நீண்ட நேரம் தெருவைப் பார்த்துக்கொண்டு நின்றேன். திடிரென வெம்மையான இரண்டு கைகள் என் தோளை தொட்டன. வெடுக்கென்று திரும்பினேன் பின்னால் குமாரி. நெற்றியில் வழிந்த முடிகளை வழித்துச் சரிபடுத்தியபடியே கருணை நிறைந்த கண்களால் என் கண்களை நோக்கி “அவன் பொறுக்கி இனி வர மாட்டான். கச்சடா. அவனை விடு குட்டி. உள்ளே வா! என்றழைத்தாள். சற்றுத்தயங்கி கண்ணில் கசிந்த நீரைத்துடைத்தபடி தலையை உயர்த்திப்பார்த்தேன். நிர்மலமான ஆகாய வெளியில் கரும் முகில்கள் நகர்ந்து கொண்டிருந்தன. பெரு மூச்சொன்று விட்டபடி குமாரியின் அடியையொற்றி நடக்க ஆரம்பித்தேன்.

டானியல் ஜெயந்தன்.

 

 

3 thoughts on “சிவப்பு நிற உதட்டுச்சாயம்

  1. போர்கள் எப்போதும் அப்பாவிகளான குழந்தைகளையும்,பெண்களையும் பாதிக்கிறது , அவர்களின் வாழ்க்கையின் உணர்வுகளை எப்படி மாற்றிவிடுகிறது என்பதை இலக்கிய வடிவில் கொடுத்து படிக்கும்போது சோகப்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *