வளைவுகள் குட்டிப்பாலங்கள் கடந்து, நதி நீரின் சலசலப்பு. பறவைகளின் ஒலிகளூடே மின் விளக்குகளே இல்லாத காட்டுப்பாதையில் வண்டி சென்றுகொண்டிருந்தது. வண்டியின் கணப்பிலிருந்து வெளி வந்த வெப்பம் முகத்தை எரித்தது. “இன்னும் ரெண்டு கிலோ மீற்றரிலை எங்கட அடுத்த யாத்திரை ஸ்தலம் வந்துவிடும்” என்கிறார் சிலுவையர். வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த அய்வரும் சோம்பலுடன் கண்களை விரித்து வண்டியில் இருந்து வெளியே பார்த்தனர். வானளவு உயர்ந்த மலைகள் ராட்சச விலங்குகள் போல நகர்ந்து கொண்டிருந்தன. யாத்திரை ஸ்தலம் நெருங்க நெருங்க என் மனதுக்குள் ஒரு வகையான கிளர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன். ஓட்டுநர் இருக்கை அருகில் அமர்ந்திருந்த எஸ்தாக்கியார் வெக்கை தாங்க முடியாமல் முன் கண்ணாடியை மெல்ல கீழ் நோக்கி இறக்கினார். மெல்லிய குளிர் காற்று உடம்பை சிலிர்க்க வைத்தது. டியூனிங் கொலர் வைத்த வெள்ளை நிற சட்டையை அணிந்த சிலுவையர் வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக்கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அசைவாடிக்கொண்டிருந்தார். வாகனம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது.
சிலுவையருக்கு கணக்கான நல்ல சிவலை உடம்பு. மீசை தாடி சொட்டுமில்லாமல் மழித்த முகம். தலைமுடியை கொஞ்சம் நீளமாக வளர்த்த வெள்ளை மயிருக்கு டை அடிச்சு இடைக்கிடை குடும்பி கட்டி விட்டிருப்பார். அது அவருக்கு எடுப்பாக இருக்கும். பின்னிருக்கையிலிருந்து மங்கலான புகை வெளிச்சத்தில் சிலுவையரை பார்க்கும் போது கண்களுக்கு தூய ஆவியானவர் போல காட்சியளித்தார். இந்தக் காட்சியை சிகரட் புகைக்கும் இடைவெளியில் அவரிடம் சொன்ன போது அதை கண்டு கொள்ளாதவர் போல் வான் நோக்கி சிகரெட் புகையை சுளி சுளி வடிவாக வெளியேற்றினார்.
அதை நான் எஸ்தாக்கியிடம் சொன்ன போது கருப்பு நிறப் பருத்த உடம்பை மெல்ல அசைத்து இலகுவாக்கி, விழிகளை உருட்டியபடி நெஞ்சுக்குள் இருந்த சளியை இழுத்து நாவில் உருட்டி அருகில் வளர்ந்திருந்த முட் செடியை பார்த்து துப்பிக்கொண்டு, “டேய் பேயா விசர் கதை கதைக்கிறாய்” என்று சொல்லிவிட்டு சிறிய யோசனையின் பின் “ நடந்த விசியம் அறிஞ்சால் இப்பிடி கதைக்க மாட்டாய்?” என்றான். “சரியான தூமை துண்டு” என்று சற்று கோபத்தோடு சொன்னேன். எஸ்தாக்கி சொற்களோடு சளியையும் விழுங்கியபடி “நேற்று சிலுவையர் குடும்பச் செபமாலை முடித்துவிட்டுப் படுக்கப்போன போது மரியன்னை அவரை அழைத்திருக்கிறாள். அதைச் சிலுவை எனக்கு விபரமாக சொல்லவில்லை,
‘சிலுவை சிலுவை சிலுவை’ என்று மூன்று முறை கீச்சுக் குரலில் அழைத்து ஆலத மணி அடித்தோய்வதற்கு முன் நேரம் தாமதிக்காமல் என்னிடம் வா…!’
என்ற அழைப்பு , முதலில் அவரைக் குழப்பமடைய செய்ததாகவும், பின் மணி என்றவுடன் அவருக்கு மூளையில் ஒரு பொறி தட்டியதாம் மனுசன் உடனே ஊகிச்சுப்போடேர் அது வயல் மாதாவுடைய ஏவுதல் தான் என்று , உடனடியாக பயணத்துக்கு தயாராகி டீசல் செலவுக்கும்,நெடுஞ்சாலை கட்டணத்தையும் சமாளிக்க எங்களை கூட்டிக் கொண்டுவாரார் கண்டியே?”
“ அவருக்கு மட்டும் மாதாவுடைய எல்லாம் முன் கூட்டியே …?”
“என்ன வியர் கத கதைக்கிறாய்? இந்த நிலைக்கு வர சிலுவையர் இருபது வருடங்கள் என்ன பாடுபட்டவர் எண்டு எப்பிடி எல்லாம் கஸ்ரப்பட்டவர் விசா இல்லாமல் எவ்வளவு வருடங்கள் கோயிலே தஞ்சம் எண்டு கிடந்தவர் இண்டைக்கு மனுசனை பார்! பிரான்சில் கத்தோலிக்க ஆன்மிக பணியகம் ஆல மரம்போல வளர்ந்து நிக்க முக்கிய காரணம் அந்தாள்தான். ஆனால் சிம்பிளாய் நம்மளுக்கு றைவர் வேல பாக்குது” என்று கூறிப் பெரிய பெருமூச்சொன்றை விட்டு நிறுத்தினான்.
இன்று பிரான்ஸ் போர்கோன் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க குருக்கள் தொடக்கம் குரு முதல்வர்கள் வரை சிலுவை மரியானை தெரியாதவர்கள் மிகவும் சொற்பம். அந்த சொற்பமானவர்களும் நகருக்கு வெளியே வாழ்பவர்களாகவே இருப்பார்கள். யார் அந்த சிலுவை மரியான்? என்ற கேள்வி எழுந்தால் சிலர் அவரைக் கத்தோலிக்க வரலாற்று ஆசிரியன் என்பர். சிலர் ரோமாபுரி தவற விட்ட சின்ன போப் என்பர். பிரான்சில் உள்ள தேவாலயங்களின் திருவிழாக்கள் மற்றும் தேவாலய வரலாற்று சிறப்பு நிகழ்வுகளை தரவுகளுடன் சொல்வதற்கு அவரை அடிக்க பிரஞ்சுக் காரரிலும் கூட ஆரும் இல்லை. பிரான்சில் உள்ள தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் மிக முக்கியமான புள்ளி.
“உங்கள சிலுவை அல்லாமல் எதுவும் அணுகாது” என்பார்கள் அவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். சிலுவையர் சிலாபத்துறையில் இருந்து செக்கோஸ்லாவோக்கியா வந்து அங்கு அவருடைய போலிக்கடவுச்சீட்டுப் பிடிபட்ட பின்னர் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்பித்தரை வழியாக பிரான்சின் போர்கோன் நகருக்கு வந்தவர். சிலுவை மரியான் போர்கோன் நகரில் கால் பதித்தபோது அங்கே ஒரு ஆசியக் கண்டத்தினரும் இருக்கவில்லையாம். ஆனால் அவர் அங்கு வந்து சேர்ந்ததே எதேற்சையாக நடந்த நிகழ்வுதான். பரிசிலிருந்து சுவிஸுக்கு போவதுதான் அவரின் திட்டம். சுவிஸ் செல்லும் வழியில டிஜோன் நகருக்கு இடையில நல்ல ஊர் மனையா பார்த்து அவரை வண்டியிலிருந்து தள்ளி இறக்கி விட்டு போனார்களாம் என்பார்கள். வண்டியின் பின் இருக்கையில் இருந்து பார்க்கும் போது நீண்ட சம தரையான பச்சைப் புல் வெளிகளாய் விரிந்திருந்த நகரம் எதுவென்று அவருக்கு சரியாகத்தெரியவில்லை. வயல் ஓரங்களில் புல் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகளை கண்டவுடன் அங்கே பிழைத்துபோய் விடலாம் என்ற எண்ணம் வர
“இங்க வயல் கரையாப் பார்த்து இறக்கி விடுங்கோ அண்ணே”
என்று அவராகவே கேட்டு இறங்கிக் கொண்டார் எனச் சொல்பவர்களும் உண்டு. அப்படியாக அவர் வந்து சேர்ந்த இடம் பூஸ் நகரம் . இப்ப இங்க உள்ள பூஸ் குட்டிக்களிடம் சிலுவை மரியானை தெரியுமா? என்றால் மியாவ் என்று காத்துமாம். அப்படியாக பூஸ் நகரின் வரலாற்றில் அவரும் கலந்துவிட்டார். இங்க வந்த புதிதில் சிலுவையர் வேலைக்காக தினமும் ஒவ்வொரு ஆலயமாக ஏறி இறங்கி தங்குமிடம் கேட்டு வந்திருக்கிறார். யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. கோவில் வாசலில் நின்று தனக்கு தெரிந்த ஓரிரு பிரெஞ்சு சொற்களைத் திரும்பத்திரும்ப ஜெபம்போலச் சொல்லிக்கொண்டிருந்தார். இவருடைய பிரெஞ்சு ஆர்வத்தை கண்ட கத்தரின் பியர் என்ற கன்னியாஸ்திரி அவருக்கு ஒரு பிரெஞ்சுப் பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்க வழி செய்தார். பின்னர் ஓரிரு வருடங்களில் சிலுவையர் பிரெஞ்சு மொழியை தட்டாமல் பேச கற்றுத் தேறி விட அகதி விசா கிடைக்கவும் ஒரு பங்கு தந்தை சகாயம் செய்தார் . பின் “நோர்த்தடாம் ஸ்பேஸ்” என்ற தேவாலயத்தில் தனது ஆன்மிகப்பணியை ஆரம்பித்தார் சிலுவையார்..
ஒரு நாள் தேவாலய கழிவறையில் இருந்து தன் நாட்டு மக்களைப்பற்றியும் அவர்களது ஆன்மிகப் பின்மாற்றம் குறித்தும் சிந்திக்க தொடங்கிய போது திடீரென தன் மொழி பேசுகின்ற மக்களை இணைத்து ஒரு பணியகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் பேய் போல புகுந்தது. இது நடந்த ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு. அடுத்த வருடமே அந்த பங்கு பிஷப் மூலம் ஒரு ஆன்மிகப்பணியகமாக உருவெடுத்தது. பிரான்சில் முதலாவது ஆன்மிகப்பணியகம் போர்கோன் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது இது வரலாறு . இதை மறைக்க பலர் முயற்சி செய்து கொண்டு இருப்பதாக சிலுவை மரியானுக்கு சிலர் மீது கடுங்கோபம் . ஏதாவது கொண்டாட்டத்தில் குடித்துவிட்டு வெறி ஏறினால்
“இந்த சிற்றிக்கி வந்த முதல் குடி மகன் நான் தான்” என்று மார்தட்டி சொல்வதை நானும் பல முறை கேட்டிருக்கின்றேன். செபதேயு மரியான் அவரது உண்மையான பெயர் உறங்கும் போதும் அவர் கழுத்தில் மாட்டு சைசில சிலுவை அணிந்துகொண்டுதான் உறங்குவார். இதனாலேயே இவருக்கு சிலுவை மரியான் என்ற பெயர் வந்ததாக சொன்னார்கள் . அண்மையில் காட்டு மாதா கோயில் திருவிழாவில் பீடத்தில் எடுபிடி வேலை செய்து கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம் அவரைத் தலை குனிய வைத்தது. அதிலிருந்து அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டார். பாரிஸில் பிரபலமான குழுச்சண்டை பொலிஸாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் போனதும், கோவில் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்தையும், சேதப்படுத்தப்பட்ட பொருட்களின் விபரங்களை விஷப் மஞ்சள் காகிதத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு வந்து தரவுகளோடு வாசித்துக்கொண்டு இருக்கும் போது ஆலயத்தின் பின்பகுதியில் நின்று யாரோ பிரசங்கத்தை குழப்ப எத்தனித்ததை அறிந்த விஷப் கடும் சீற்றத்தில் கையில் இருந்த தனது பைபிளை கை தவறி கீழே போட்டு விட்டார். எதிரே முன் வாங்கில் வெட்கத்தோடு தலையை நிலத்தில் தொங்க போட்டுகொண்டு கைகளை கூப்பிய வண்ணம் இருந்த சிலுவையர், காற்றைக் கிழித்துக்கொண்டு வெடுக்கென்று பாய்ந்து புனித வேதாகமத்தை தன் கரங்களில் ஏந்த எத்தனித்தார். துரதஸ்ரவசம் . அவர் கைக்குள் வேதாகமம் சிக்கவில்லை. சிலுவையரது கூப்பிய கைகள் இரண்டும் குருவானவரின் காலை பதம் பார்த்தது. “எக்ஸ்கியூஸ்முவா பர்டோன் பர்டோன்…. பீடத்திலே நின்று குறுகுறுத்தார். சிலுவையரின் கனிந்த குரல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒலி பெருக்கிகளில் ஒலித்தன. குருவானவர் என்ன செய்வதென்று அறியாமல் சடுதியில் தனது கால்களை அகட்டி சிலுவையை தொட்டு விடாமல் விலகி நின்றார் .
சம்பவத்தை பார்த்த உதவி குருக்கள் பீடத்தில் இருந்து வெருண்டடித்துக்கொண்டு ஓடி வந்தனர். வேதாகமத்தின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த குறிப்புக் காகிதங்கள், வீசிய பலத்த காற்றுக்குப் பறந்து போயின . பிடிக்க எழுந்து ஓடிப்போன சிலுவையின் கைகளில் குருவானவரின் மஞ்சள் நிற காகிதங்கள் சிக்கிக்கொண்டன. அந்த நொடி சிலுவையின் கண்கள் பனித்தன, தன்னைச்சுற்றி நின்றவர்களை இரக்கத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டு எழுந்து பீடத்தில் கலவரத்தோடு நின்ற குருவானவரிடம் காகிதங்களை கொடுத்து விட்டு ஆலயத்தின் மத்திய பகுதியில் பய பக்தியுடன் நின்று தனது தலையை முழங்கால் வரை பணிந்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். அப்போது சிலுவையர் தன் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையை வெள்ளை நிற துணியால் துடைத்தார். அவரது கண்கள் சிவந்து போய், தொட்டால் வெடித்து அழுத்திடுவார் போல் அசையாமல் இருந்தார். நிகழ்வுகளனைத்தும் தேவாலயத்தை சுற்றி பொருத்தப்பட்டிருந்த அகண்ட வெண் திரையில் ஓடிக்கொண்டிந்தன. பின் நாளில் சிலுவையர் அந்த வெண் திரையை ஒரு அவமானச்சின்னமாக அறிவித்தாராம். இதை சொல்லி முடித்து விட்டு எஸ்தாக்கி மீண்டும் காய்ந்த நெஞ்சுச் சளியை வற்புறுத்தி நாவிலெடுத்து இம்முறை எட்டத் துப்பினான். துப்பிய சில துளிகள் எதிர்க்காற்றில் அவன் மூஞ்சியில் தெறித்தது. ஓ** சளி என்று தன்னையே சபித்தான்.
அதிகாலை நேரம் எட்டு மணியைக்காடியது . அப்போது வாகனம் ஒரு தரிப்பிடத்தில் முன் மெதுவாக நின்றது. சிலுவையர் விரல்களை நெட்டி முறித்து இடுப்பை நெளித்து சோம்பலை முறித்துக்கொண்டார். பின்னர் தன் வெள்ளை நிறச் சட்டைக்குள் இருந்து குருத்துப்பச்சை நிறத்தில் ஒரு செப மாலையை வெளியே எடுத்து அனைவருக்கும் தெரியும் வண்ணம் சரிப்படுத்தி விட்டார். நாங்கள் எல்லாரும் வண்டியில் இருந்து பட படவென்று வரிசையாக இறங்கிவிட்டோம். எங்கள் முன்னால் உயர்ந்த மலை. மலை மீது சிறிய ஆலயம் தென்பட்டது. ஆலயத்தின் முகப்பில் கருணையின் வடிவிலான கன்னி மரியாளின் திருச்சொரூபம் காட்சியளித்தது. அம்மலையைச் சுற்றிய பிரதேசம் எல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தாற் போல வயல்வெளிகள், அச்சூழலே என்னை ஆசிர்வதித்துக்கொண்டது போல உணர்வு.
அப்போது சிலுவையர் “இறையன்பில் பிரியமான எனது சகோதரர்களே நீங்கள் தற்போது தரிசிக்கும் இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பல சரித்திர நிகழ்வுகள், புதுமைகளை நிகழ்த்திக்காட்டும் எங்களுடைய வயல் மாதா இங்குதான் பிரசன்னமாக இருக்கிறாள்”. என்று தேவாலயத்தின் சுற்று மதிலின் வெளியிப்புறத்தில் நின்று சிறிய பிரசங்கத்தை எடுத்தார் . நாங்கள் முதலில் அவளை பய பக்தியோடு வணங்கிக்கொள்வோம்” அனைவரும் இயந்திரமாக இயங்கி சற்று முன் சென்று சொரூபத்துக்கு முன்பாக மண்டியிட்டனர் .
ஒரு அருள் நிறைந்த மரியாளே செபத்தை பய பக்தியோடு சொல்லி விட்டு நிமிர்ந்த போது சிலுவை மரியான் மீண்டுமொரு சிற்றுரையாற்றினார் . அனைவரும் மெல்ல உரை சொல்லப்படும் திசையை நோக்கி கண்களை ஏறெடுத்தனர். அருமைச் சகோதரர்களே! இதோ நீங்கள் பார்க்கின்ற தேவாலயத்தில் பூட்டி இருக்கின்ற ஆலய மணியை யாரும் இதுவரை தொட்டதில்லை ! இம்மணி இதுவரை எண்ணிச்சொல்லக்கூடிய எண்ணிக்கையில்தான் ஓசையை எழுப்பி இருக்கிறது. இதன் பின் ஒரு வரலாறுண்டு பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த இத் தேவாலயம் யாரால் கட்டப்பட்டது என்று யாருக்கும் தெரியாது.
பல படையெடுப்புக்கள். முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்களின் போதும் சிறு சேதமும் இல்லாமல் இங்கு வீற்றிருக்கும் வயல் மாதா தனது தூதர்களை கொண்டு பாது காத்திருக்கிறாள். ஒரு முறை இந்த ஆலயத்தின் மணியைத் திருத்தி வர்ணம் அடிக்க இரு போர்த்துக்கல் ஊழியர்கள் மேலே ஏறி இருக்கிறார்கள். அவர்கள் மணியைத்தொடுவதற்கு முன்பே நினையாப் பிரகாரம் அந்த மணி ஓசையை எழுப்பியிருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை அந்த மணிக்கு வர்ணம் பூசுவதை நிறுத்தி விட்டார்களாம். இன்னுமொரு சம்பவம் ஸ்பெயினில் வாழ்ந்த வயல் மாதாவுடைய பக்தர்கள் வருடா வருடம் தமது கோடை விடுமுறைக்கு “இதோ பாருங்கள் என்று தன்னுடைய ஆட்காட்டி விரலால் அங்குள்ள செரிஸ் மரம் ஒன்றை சுட்டிக்காட்டி அதன் கீழ் முக்கோணி வடிவில் ஒரு கொட்டில் அமைத்து அங்கே தான் அந்த ஸ்பானிய விசுவாசிகள் தங்கி அன்னையை வழிபட்டார்களாம். என்றொரு கதை உண்டு . அவர்கள் ஒரு முறை பசுபிக் சமுத்திரத்தை கடக்கும் போது பெரிய ஆபத்து ஒன்றை எதிர் நோக்கினார்களாம். அச் சடுதி நேரத்தில் நினைவு வர வயல் மாதாவை வேண்டிக்கொண்டார்களாம். இதைச்சொல்லிக்கொண்டு இருக்கும் போது சிலுவையர் தன்னை ஒரு பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் போன்று தன்னை கற்பனை செய்து கொண்டார் .
அந்த நொடிப்பொழுதில் வயல் மாதா அவர்கள் முன் காட்சி கொடுத்து இரட்சித்திருக்கிறாள் என்று அவர்களே அதைக் குறித்து நேரில் வந்து மாதாவுடைய கோயில் திருத்தலத்தில் முன்பாக மண்டியிட்டு அடித்து சாட்சி சொன்னார்களாம். அப்போது அதை இடை மறித்து சேகர் அண்ணன் சந்தேகத்தோடு நேசரிப் பிள்ளை போல கையை தூக்க “ஏய் மாதாவை சந்தேகிக்காதே! பொறு உன்னுடைய சந்தேகம் எதுவென்று எனக்கு தெரியும் தீர்த்து விடுகின்றேன்” என்று உரிமையோடு சேகரை பேச விடாமல் கண்டித்தார். மீண்டும் சொல்ல ஆரம்பித்த போது சிலுவையர் முகம் சற்று கலவரப்பட்டு இருந்தது . அன்று அந்த ஸ்பானிய குடும்பம் வயல் மாதாவை வேண்டிப்பிரார்த்தனை செய்து கத்திய போது இங்கே இதோ உங்கள் முன்னால் இருக்கும் இந்த ஆலய மணி தன் பாட்டில் அடித்ததாம். அவர்கள் சமுத்திரத்தில் கத்திய நேரமும் இங்கு கோயில் மணி அடித்த நேரமும் ஒன்று ஒன்று என்று இங்கு வாழ்ந்த பாதிரியார் செபஸ்ரியன் ரவுல் உறுதிப்படுத்தினாராம்.
திடிரென்று சேகரை சுட்டிக்காட்டி உன்னைப்போல சிலர் இந்த புதுமையை நம்ப வில்லை என்பதால் அன்று ரட்சிக்கப்பட அதே ஸ்பானிய குடும்பம் அடுத்த வருடம் இங்கு வந்து சாட்சி கூறினதாம். அவர்கள் சொன்ன சாட்சி கால நேரப்படி கரெக்டாக இருந்ததாம் . இறுதியாக மடு மாதா கோவில் மீது நடத்தப்பட்ட எறிகணையத்தாக்குதலின் போதும் இந்த தேவாலய மணி அடித்து ஓய்ந்ததாம் என்று சொல்லி பெருமூச்சொன்றை விட்டபடி தன்னுடைய துணிப் பையில் இருந்த போத்தலை த்திறந்து ஒரு மிரடு தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
“ ஆகவே என் பிரியமாணவர்களே வத்திக்கான் இந்த ஆலயத்தை பிரான்சில் உள்ள பன்னிரண்டு யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக பிரகடனம் செய்துள்ளது” என சிலுவையர் சொல்லி முடித்தார். இதைக்கேட்டதும் அங்கிருந்த எஸ்தாக்கி கைகளை தூக்கி வானத்தை பார்த்து மாதாவே வான ராக்கினியே எங்களுக்கும் இரங்கும் என்கிறார். அப்போது வானத்தில் சில கழுகுகள் தென்பட்டன. பின்னர் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் ஆலயத்தின் பிரதான வாயிலை தள்ளித் திறந்து உள்ளே எங்களை அழைத்துச்சென்றார் சிலுவையர் . அங்கே பெருந்திரளான மக்கள் கூடி செபித்துக்கொண்டிருந்தனர். சிலர் கண்ணீர் மல்க மண்டியிட்டு செபித்துக்கொண்டிருந்தனர் . பலர் அங்கே பொருத்தப்பட்டு இருக்கின்ற மணியை உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். ஒரு தாடிக்கார பாதிரியார் சில விசுவாசிகளுடன் மிகவும் ஸீரியஸாக விவாத்தித்துக்கொண்டிருந்தார். அவரது வலக்கையில் பரிசுத்த வேதாகமும் இடக்கையில் வெள்ளை நிற செபமாலையும் காணப்பட்டது . எங்களோடு வந்த சிலுவையை திடீரென காணவில்லை . ராஜ சேகரன் சனக்கூட்டத்தில் சிலுவையை கண்டுபிடித்து எனக்குக் காட்டினான் . பாதிரியாருடன் ஏதோ சீரியஸா பேசிக்கொண்டு இருந்தவர். திடீரெனே விசுவாசிகள் பெருந்திரளானவர்கள் கூடி நின்ற இடத்தில் தொப்பென்று மாதாவுடைய சொருபம் இருக்கும் திசையை பார்த்து ஓவென்று கத்தி முழந்தாள் இட்டு கூப்பாடு போட்டார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஸ்தலம் அமைதியாய் அடங்கிப்போனது . திடீரென் நிமிர்ந்தவர் வாயில் வந்த பாஷைகள் எல்லாவற்றாலும் எதையோ சொல்லி பிதற்றிக்கொண்டிருந்தார் . இத்தாலியானோ ,போர்த்துக்கல்,பிரெஞ்சு ,இறுதியாக ,ஆங்கிலத்தில் சில வாக்கியங்களைச் சொல்லி முடித்தார். இதைக்கண்ட கூடி நின்ற வெளி நாட்டு விசிவாசிகள் கண்ணீர் மல்க மாதாவை துதிக்க ஆரம்பித்தனர் . சிலர் உணர்ச்சிக்கொதிப்பில் தமது ஆண் நண்பர்களை கட்டிக்கொண்டு முத்தமிட்டனர். சற்று நேரத்தின் பின் எங்கிருந்தோ வந்து என் முதுகை சுரண்டினான் எஸ்தாக்கி . விடயம் என்னவென்று கேட்ட போது என்னைச் சிறு நீர் கழிக்கும் இடத்துக்கு அழைத்துபோனான் .
“மச்சி இப்ப நம்புறியா ? என்னடா ? விளக்கமா சொல்லு என்று கேட்டதும் உண்மையை சொன்னான் . “நேற்று சிலுவையாருக்கு தரிசனத்தில வந்து இங்க போ என்று சொன்னது இந்த வயல் மாதாதான் மச்சி இப்ப எல்லா விபரத்தையும் இந்த பங்குப்பாதர் ஒண்டு விடாமல் சொல்லிபோட்டேர். மேலும் பங்குப்பாதர் சிலுவை மரியான் – மாதா அழைப்புப் பற்றிய விபரம் அடங்கிய கடிதத்தை உடனடியாக போப்பாண்டவருக்கு அறிவித்து விரைவில் மிஸ்யு சிலுவை மரியானை வத்திக்கானுக்கு அனுப்பி தலைமைப்பீடத்தை சந்திச்சு வர ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னார் . எனக்கு சலக்கடுப்பு வந்திற்று ஏன் என்று மூளையைக் கசக்கி யோசித்த போது குடிச்சது பைப் தண்ணீ எண்டு அப்பதான் நினைப்பு வந்தது .
அனைவரும் எழுந்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என சொல்லி விரல்களினால் அடையாளமிடும் வேளை சிலுவை மரியானுடைய தொலைபேசியில் மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்தி போற்றி …. என்று இசை அழைப்பு மணி இடையில் அறுந்து போனது. தொலைபேசியை எடுத்து மீண்டும் அழைத்த சிலுவையின் முகம் நொடியில் மழையில்லாத வறண்ட நிலம் போல மாறியது. முகத்தில் ஒரு சென்னல் நரம்புகள் புடைத்துக்கொண்டு வந்தன. “மாதா எனக்கு நடக்கபோறத நேத்தைக்கே காட்டித்தந்திற்றா … ஏசு மரி சூசை துணை என்று பெரிய சத்தமாய் கத்திக்கொண்டு கோயில் வளவைவ் தாண்டி வெளியில் ஓடி வந்து ஒரு மறைவுக்குள்ளே நின்று
“பு*ஆண்டிகளா …ஆருக்கு ஓ …… என்று சொல்லித் துடையை தட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார். அப்போது அவரது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஒரு பருந்து வீழ்ந்து ஒரு பட்சியை தூக்கி உயர எழுந்தது மறைந்தது . சிலுவையர் அன்று முழுவதும் தொலைபேசி உரையாடலில் கலவரப்பட்டு பீபி மருந்தை அதிகமாகக் குடித்துக்கொண்டிருந்தார்.
செட்டிக்குளத்தில் வைத்து ஒரு கன்னியாஸ்திரி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக தகவல் சிலுவையருக்கு கிடைத்தது. அவரது கோபத்துக்கும்,இரத்த அழுத்தத்துக்கும் காரணம் அதுவே என்று இறுதிதியாக அறிந்துகொண்டோம்.
“இது சாதாரண விடயமல்ல ரோமன் கத்தோலிக்கத்தில் கை வைத்தால் எவ்வளவு பிரச்சனை வரும் என்பதை மறந்து விட்டார்கள். போல சரியான பாடம் படிப்பிக்கத்தான் வேணும் பற்களை நறும்பிய படி சிலுவையர் சொன்னார். யாருண்ணே இந்த வேலை பாத்திருப்பாங்க ?
நேவியா?
இல்ல
இந்த வெள்ளை வேன் காரங்கட வேலையைத்தான் இருக்கும் என்றான் எஸ்தாக்கி .
இல்லை இந்த பிறசிடண்ட் புண்ண்டையாண்டி ரணில் இருக்கிறானாலோ அவன்தான் இதுக்கு காரணம். அடேய் இருபது வருசமடா இருபது வருஷம் அந்த புள்ள சிஸ்ரறா போய். சைக் இப்பிடி செய்து போட்டங்களேடா … என்று மேலும் நொந்து கொண்டிருந்தார் சிலுவையர். தன்னுடைய உடன்பிறந்த சகோதரி காணாமல் போனது போல பாவனையில் அவரது முகம் சஞ்சலப்பட்டு இருந்தது. நகங்களை கடித்துக்கொண்டு குழப்பத்துடன் விறு விறு என்று ஆலயப் படிகளில் நடந்து திரிந்தார்.
“அண்ணே சிஸ்ரர்ட உடுப்போடையா தூக்கி போட்டாங்கள் இல்ல இரவு நைட்டி ஓடையா ? என்று இன்னும் ஒருத்தன் கிண்டலா கேட்க அருகில் இருந்தவர்களுக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட ஆளை ஆள் வாயில் கையை வைத்து சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தனர். நான் பத்தைக்குள்ள சிறு நீர் கழித்துகொண்டு நிற்கும் போது எஸ்தாக்கி ஒரு கதை சொன்னான். “காணாமல் போன உந்த சிஸ்ரர்ட பெயர் மரிய கொரட்டி. சிஸ்ரர் மடத்துக்குள்ள முக்கியமான புள்ளி சிலாவத்துறையில் இருந்து இறை பணிக்கு போன முதலாவது கன்னியாஸ்திரியாம் சிலுவையாருக்கு வேண்டப்பட்ட ஆளாம் சின்ன வயசில இருந்து படிப்பிலையும் இறை பணியிலும் நன்கு சித்தி அடைந்து இருந்த மரிய கொரட்டி சிறிய வயதிலேயே அவரது தகப்பனார் தெய்வேந்திரன் அவளை மடத்துக்கு அனுப்ப வேணும் எண்டு கனவு கண்டவர். கொரட்டி பூப்பெய்வதற்கு முன்னரே ஒரு ஊர்ப்பையன் கண்ணுக்குள்ள வச்சிற்றானாம் நேரம் பார்த்து நைசா நயிற் கிளாசில வச்சு அவளுக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டான். இந்த விடயம் வீட்டுக்குத் தெரியாமல் பாத்திருக்கு அந்தப் பெட்டை . அந்தப் பெடியன் அவளைச் சுற்றி வர இருந்தவர்கள் எல்லாருடைய கண்களுக்குள்ளும் மண்ணைத்தூவிவிட்டு பெட்டையை பார்க்கக் கோவில் முடிந்த பின்பும் காத்திருப்பான்.
அவள் திரும்பிப்பார்த்த மாதிரி இல்லை. கோயில் பெரு நாளுக்கு முதல் வாரம் ஊரில் விழித்திருந்து வாசாப்பு பார்ப்பார்கள். பெட்டை தாயுடன் இருந்து விட்டு அவசரமாக சலம் கழிக்கப்போன நேரம் இவன் கையை புடிச்சு இழுத்து கொஞ்சி இருக்கிறான். பயந்து போன பெட்டை போட்டு இருந்த பாவாடையோட மூத்திரம் போச்சு . அவள் கத்தி ஊரைக் கூப்பிடவில்லை. அடுத்த ஓரிரு வாரங்களில் அவள் வீட்டில் சாமத்திய வீடு நடந்தது. பின்னர் பெட்டைக்கி சாட மாடவா பெடியனில விருப்பம் வந்திற்று. ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் வைத்து பகிடிக்கி எதோ சினிமா பார்த்துவிட்டு
“ என்ர பேரை உன்ர உடம்பில பச்சை குத்து பார்க்கலாம்”
என்று பகிடிக்கி அந்த பெட்டை சொல்லி இருக்கு அடுத்தநாள் அவனது வலது கால் தொடையில் “மரியா”என்ற பெயரை பச்சை குத்தி விட்டு முன்னால் வந்து நின்றான்.
இந்த விடயத்தை யாரோ அந்த பெட்டையின்ர தகப்பனுக்கு ரகசியமாக சொல்ல தெய்வேந்திரன் இரவு இரவா நீர்கொழும்பிலுள்ள மரிஸ்ரேலா சிஸ்ரர் மடத்தில கொண்டுபோய் சேர்த்து விட்டேர். அதற்கு பிறகு மரிய கொரட்டி ஊர் பக்கம் வரவே இல்லை. பெடியனும் அப்பிடியே இத்தாலிக்கு கப்பல் வேலைக்கு போய் விட்டானாம். இதை சொல்லிக்கொண்டிருக்கும் போது வெளிக் கதவைத்திறந்து வெள்ளைக்கார பாதிரி வயல் மாதா கோயிலுக்குள் வந்தார். அதுவரை சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த சிலுவையர் சிகரட்டை தரையில் போட்டுவிட்டு கால்களால் மிதித்து கிழட்டு பாதிரி வரும் திசையை நோக்கி ஓடினார். நாங்கள் தரையில் இருந்து ஓரிரு பாறைகளை பற்றிக்கொண்டு மேலே ஏறி ஒரு சமனான நிலத்தை கண்டு பிடித்தோம். அங்கிருந்து இடது பக்கம் சற்று சாய்வாக ஒரு மரத்திலான கதவு தெரிந்தது. அதைத்திறந்த போது அறை முழுவதும் இருள் மண்டிக்கிடந்தது. அவசரமாக வெளியில் வந்துவிட்டோம். தூரத்தில் சிலுவையர் நடந்து வருவது தெரிந்தது ,அவரது முகம் கலவரத்தால் நிறைந்திருந்தது .
“செய்வினை செய்து தூக்கி இருக்கிறானுகள் வேசை மக்கள்” என்கிறார்.
எங்களுக்கு ஒண்டும் பிடிபடவில்லை. “
இவனுகளை சும்மா விட மாட்டன் இந்த பிரச்சனை ரோம் வத்திக்கான் வரை கொண்டு போய் இந்த நாறல் கூட்டத்தை வேரோட அழிக்காமல் இந்த சிலுவை மரியான் ஓய மாட்டான்” என்று சொல்லி ஏழு சீற் வேனில் அடித்து சத்தியம் செய்தார் .
“இது என்ன ஓ** கதை சிஸ்ரருக்கு செய்வினையே’’ நல்ல கதை உடுரினம் என்றான் மலக்கியாசின் மூத்த மகன். “நல்ல வேளை சிலுவையின் காதில் விழவில்லை”என்றான் குஞ்சுமணி.
சிலுவையர் தொலைபேசி இலக்கங்களை அழுத்தி யாரோ பங்கு பாதருக்கு தொடர்பை ஏற்படுத்தினார்.
“பாதர் அவனுள் குடும்பத்தோட ஊர்ல எந்த நல்ல கெட்ட ஒரு காரியத்திலையும் பங்குபற்ற விடக்கூடாது. ஊர்ல இருந்து அவனுகளை ஒதுக்கி வைக்க வேணும் இது ஊருக்கு வெக்கக்கேடான விசயம் நான் இவனுகளை சும்மா விடமாட்டன். வத்திக்கான் வரை போவேன் பாதர்” என்று கூறிவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
ஓரிரு நாட்கள் கழிந்தவுடன் எஸ்தாக்கியை ஒரு துருக்கிய கெபாப் கடையில் சந்தித்து பேசினேன். ஆளுக்கு சில போர்தொ வயின்களை வாங்கி ஒன்றை பற்களால் உடைத்து பருகிய படி இருக்கையில் அமர்ந்தோம். நான் மெல்ல அவனிடம் பேச்சைக்கொடுத்தேன். போதை மிகுதியால் அவன் சொன்ன செய்திகள் என்னை வியப்பின் உச்சியில் தொங்க விட்டன.
“மச்சி சிஸ்ரரை ரணிலும் கடத்தை இல்லை வெள்ளை வேனும் கடத்தி கொண்டு போகவில்லை செய்வினையுமில்ல”
“என்ன பு** செய்வினை ? எண்டல்லோ சொன்னான் சிலுவ”
அப்போது நாங்கள் மூன்றாவது வயின் போத்தலை உடைத்து குடிக்க ஆரம்பித்தோம் .
“ம்ம்ம்ம் நான் விசயத்தை சொன்ன பிறகு நான் ஒரு வீடியோ காட்டுறேன் பாரு உனக்கு எல்லாம் புரியும் “ என்றபடி வைனில் ஒரு உறுஞ்சல் உறிஞ்சினான் .
மச்சி இந்த கொரோனா வந்து மனுசனுக்கு அழிவை கொடுத்துதோ இல்லையோ பலருடைய குடும்பியை அறுத்திட்டு போயிருக்கு என்றான். எரிச்சல் தாங்காமல் “விளக்கமா சொல்லுடா என்று அவனை வற்புறுத்தினேன்…”
எல்லாம் பழைய ஓ** லவ் தாண்டா ….
என்னடா சொல்லுறாய்?
ம்ம்ம்ம்ம் அந்த இத்தாலி கப்பல் காரன்தான். அந்த பெட்டைக்கி சாமத்தியப்படுறதுக்கு முன்னமே கடிதம் கொடுத்தவன் அவன் தான் சிஸ்டரை ஆட்களை வைத்து தூக்கி இருக்கிறான் . தூக்கினதுக்கு உடந்தையா இருந்தது அவனுடைய பழைய பிரெண்டாம் அவன்தான் சிஸ்ரரை கொழும்பில உள்ள ஒரு லொட்ச்சுக்கு கொண்டு போய் மறைத்து வைச்சு அப்பிடியே நீர் கொழும்பு மூலம் இத்தாலிக்கு கப்பல் ஏத்தி விடுறதுதான் திட்டம் விசியம் எப்பிடியோ வெளியில கசிஞ்சு போச்சு பத்து பாதிரியார் அடங்கலாக உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்து சிஸ்ரரை தேடி இலங்கை முழுவதும் போலீசார் ராணுவத்தை கொண்டு தேடுதல் நடத்தினார்கள். இடையில் மறித்து
“என்ன மசிருக்கு” என்று அவனிடம் கேட்டேன்.
அவன் சிகரெட் புகையை விட்டபடி தலை ஆட்டினான். எனக்கு ஒண்டும் பிடிபடவில்லை.
”என்னடா இது சிஸ்ரருக்கு செய்வினை சூனியம் எண்டானுகள் இப்ப ? பொறு அப்ப அந்த சிஸ்ரருக்கு விருப்பம் இல்லையோ ? என்று கேட்டேன். தன் தோள்களை குலுக்கிவிட்டு
கையில் வைத்திருந்த தொலைபேசியின் தொடு திரையை தட்டி ஒரு வாட்ஸாப் வீடியோவை தட்டி இயங்கச்செய்தான். போதை மயக்கத்தில் கண்கள் சற்று தடுமாறியது என்னை நிதானப்படுத்தி அந்த வீடியோவை உன்னிப்பாக பார்க்க முயற்சித்தேன் .
ஒரு பொது நிறத்தில் சற்றுப் பருமனான முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் சிவப்பு நிறத்தில் சட்டை அணிந்து கழுத்தில் மெல்லிய கருப்பு நாடாவுடன் வீடியோவில் காட்சி தந்தாள். முழங்கைகள் இரண்டையும் மேசையில் ஊண்டியபடி மேசைக்கு முன்னால் இருந்து பேசிக்கொண்டு இருக்கும் பெண்ணை முதன் முதலில் பார்த்தேன். கண்களை அழுத்தி துடைத்துக்கொண்டு மீண்டும் கலங்கிய கண்களால் ஊடுருவிபார்த்த போது அவளது கூந்தல் கன்னங்கரியாக இருந்தது. அழகிய பல்வரிசை எல்லாம் வெளுப்பாக இருந்தன . பார்த்தவுடன் புரிந்துகொண்டேன். அவள் தான் இவர்கள் தேடி அலைகின்ற பெண் என்று கிளியாராச்சு. அவள் பேசும் சொற்களை உன்னிப்பாக கேட்டு ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தேன். அவளும் எழுதிகொடுத்த கூத்துப்பிரதியை இரவு முழுதும் மனனம் செய்துவிட்டு அதிகாலை எழுந்து அண்ணாவியார் முன் எழுத்துப் பிழையின்றி ஒப்புவிப்பதைப்போல . கொஞ்சம் துக்கம் கலந்த குரலில் கிளிப்பல் தெரிய இடையிடை சிரித்தபடி பேச அவளது முகம் பிரகாசமாக வெளிப்பட்டது . அவளது பேச்சும் பதினெட்டு வயது பெட்டையின் குரல் போல கனிவாக இருந்தது . மிகவும் ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன் . சிஸ்ரர் மரிய கொரட்டி சொன்னது …
“அம்மா அப்பா அண்ணாக்கள் எல்லாருக்கும் முதலில் sorry!!!!! என்று முதலில் இவ்வாறு ஆரம்பித்தாள் . நான் செய்த விடயம் உங்களுக்கு கோபத்தையும் இழுக்கையும் கொண்டு வந்துவிட்டதாக ஊரில் எல்லாரும் தவறாக சொல்லிக்கொண்டு திரியிறினம் என்னை யாரும் வற்புறுத்தி தூக்கவில்லை. யாரும் என்னை கடத்தவும் இல்லை. நான் நிதானமாக சுய விருப்பத்தோடதான் இப்படி செய்தனான். பெரிய அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி ரெண்டு வருடங்களுக்கு முன்னர் நான் உங்களுக்கு கடிதம் போட்டனான். எனக்கு இந்த பணியைத் தொடர்ந்து செய்ய முடியாத மன நிலைக்கு வந்துவிட்டேன்.
இது குறித்து எனக்கு பொறுப்பான பெரிய சிஸ்ரருக்கு அறிவித்தல் கொடுத்துவிட்டேன். அவ சொன்னவ உங்களுடைய வீட்டுக்காரர் வந்து கூட்டிக்கொண்டு போனால் பிரச்சனை இல்லை என்று சொல்லுறினம் .அண்ணா எப்ப வந்து என்ன கூப்பிட போறீங்க? என்று எத்தனை முறை கடிதம் போட்டு இருக்கிறேன். பெரிய அண்ணா நீங்கள் கனடாவில் இருக்கிறீங்கள் உங்களுக்கும் என்னை புரிந்து கொள்ள முடியாமல் போச்சு என்று நினைக்கத்தான் சரியான கவலை. ஏன் அண்ணா உங்களுக்கு வெக்கமா? அண்ணன் நான் வெளியில வந்தால் என்னுடைய உணர்வுக்கு மதிப்புக் குடுக்க மாட்டிங்களா?உங்களுக்கு ஊரில சாதி சண்டையும், உங்கட இனம் சனம் என்ன சொல்லும் எண்டதுதான் முக்கியம் என்னை கவனிக்க இல்லை .
நான் ரெண்டு வருடங்கள் பொறுமையாக இருந்தேன். இனியும் என்னால் இருக்க முடியாது என்று வெளியில் வந்துவிட்டேன். நான் சந்தோசமாக இருக்கின்றேன் கர்த்தரின் கிருபையால். நீங்கள் என்னை வெறுத்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும் இருபது வருடங்கள் என்னுடைய வாழ்வு கோவில் கட்டிடத்துக்களே தொலைந்து விட்டது . தயவு செய்து என்னை புண்படுத்த வேண்டாம்! என்னைத் தேடாதீர்கள்! எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ விரும்புகின்றேன் . நான் உங்களுக்கு தெரிந்த எங்கள் ஊர் பெடியனைத்தான் திருமணம் செய்யப் போகின்றேன். அவன் என்னை நல்ல முறையில் பார்ப்பான். என்ற நம்பிக்கை இருக்கு. அந்த குடும்பத்தை பழி வாங்க புறப்பட்டு இருக்கின்றீர்கள். பிழையான தகவலை பரப்புகின்றீகள் . ஒரு மத குருவை பிசாசு பில்லி சூனியம் தாக்கும் என்றால் பின்ன எதற்கு இந்த கன்னியாஸ்திரி பாதர் வேஷம்? கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்தியுங்கள் . ஓர் இருவர் செய்த தவறுக்கு அந்த குடும்பத்தை ஊரில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றீர்கள். உங்களுக்கு அறிவு இல்லையா ?
உங்களது சுய கவுரவத்துக்காக தவறாக போலீஸ் அரசாங்கத்தை பயன்படுத்துகின்றீகள். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. என்னை ஏற்றி வந்த அப்பாவி ட்ரைவர் பெடியனை நடுச்சாமம் போய் தொந்தரவு செய்கின்றீகள். அவன் மீது ஆட்கடத்தல் வழக்கு போட்டு இருக்கின்றிர்கள். இது அசிங்கமான செயல் எங்களால் மற்றவர்கள் துன்பப்பட கூடாது என்ற காரணத்தால் தான் நான் இந்த வீடியோவை வெளியிடுகின்றேன் . இதோடு நிறுத்துங்கள் உங்களது நாடகத்தை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”
என்று சொல்லி அந்தப்பெண் வீடியோ பதிவை நிறுத்தி வைத்தாள். பு*** ரெண்டு வருஷம் முன்னர் கடிதம் போட்டு இருக்கிறாள். அந்த ரெண்டு வருசமும் வெள்ளச்சட்டையோட சும்மா பேய்க்காட்டல் தான் மச்சி. நல்ல வேளை கடவுளுக்கு வெளிச்சமெ” என்றான் எஸ்தாக்கி
“இந்த விடயத்தை நீ எப்பிடி பாக்கிறாய் மச்சான்” என்று கேட்டான் எஸ்தாக்கி.
நான் கடிகாரத்தை பார்த்தேன். அவன் என்னைப்பார்த்து மச்சி இந்த வீடியோ பார்த்ததாக யாரிடமும் சொல்லாதே ! என்றான் நான் மெல்லிய புன்னகையை சிதற விட்டேன் . அவனிடம் விடை பெற்று என்னுடைய பாரிஸ் செல்லுகின்ற தொடரூந்தை பிடிக்கவும் நேரம் சரியாக இருந்தது . ரயிலின் நடை பாதையில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு தமது பயணப்பொதிகளுடன் அங்குமிங்கும் அலைமோதிக்கொள்கின்றனர் .என் தலை கிறுகிறுத்தது. என் கண்களில் தட்டுப்படுகின்ற பெண்கள் எல்லாருடைய முகமும் சிஸ்டர் பெட்டையின்ர முகம் சாயலிலே இருந்தனர் . தலையை உதறி முகத்தை கரங்களால் அழுத்தித்துடைத்துக்கொண்டு என்னை சுதாகரித்துக்கொண்டேன். சில நொடிகளில் இது பிரம்மையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன் . தலை மெல்ல சுற்ற ஆரம்பித்தது . தொடரூந்தில் ஏறிக்கொண்டேன். பேஸ் புக்கில் மரிய கொரட்டி என்று தேடினேன். அந்தப்பெயரில் எந்த முக நூல் கணக்கும் இல்லை என்று தகவல் கிடைத்தது . என்னையே நொந்துகொண்டேன். தொலைபேசியை எடுத்து எஸ்தாக்கியின் தொடர்பிலக்கத்தை அழுத்தினேன். ஒரு சில நிமிடங்களில் அழைப்பு அறுந்து போய் ஒரு பெண் குரல் ஒலித்தது. தொலைபேசியை துண்டித்துவிட்டு. தமிழில் உள்ள ஆக பெரிய கெட்ட வார்த்தையால் அவனைத்தித்தொலைத்தேன்.
நன்றி – ஆக்காட்டி