லட்சம் நூல்கள்,ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணங்களுடன் விசமிகளால் எரியூட்டப்பட்ட
யாழ்.பொதுஜனநூலக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளரின் நூல் பிரான்ஸில்
தீ நாக்குகள் ரசித்து ருசித்து உண்ட செய்தி இலக்கிய ஆர்வலர் என்ற வகையில் என்னை
புண்படுத்தியது.நூல் எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலை எரித்து எதிர்வினையாற்றியது தொடர்பாக எமது உணர்வுகளை கொட்டித்தீர்த்தோம்.இந்த சம்பவத்தினால் பெருமாள் முருகனுக்கு எழுத்துலகில் பெயரை தேடிக்கொடுத்தது.பல மொழிகளிலும் அவரது நூல்கள் வெளியிடப்பட்டன.அத்துடன் விருதுகளும்,பாராட்டுகளும்
பெற்றுக்கொடுத்தன.
டானியல் ஜெயந்தன் என்ற எழுத்தாளரை வயல் மாதா எரிப்பு சம்பவம் எழுத்து பரப்பில்
உச்சரிக்க வைத்தது.
எழுத்துலகம் மட்டுமல்ல முழு உலகமும் அறிந்து கொண்டது. அவமானப்படுத்த
புறப்பட்டவர்கள் பிரபல்யம் அடைய வைத்துள்ளனர் .சமூக வலைத்தளங்கள் மற்றும் சஞ்சிகைகளில் வயல் மாதா எரிப்பு பேசு பொருளானது.ஆதரவும்,எதிர்ப்பும் என செய்திகள்
வந்தன.ஜெயந்தனை கழுவி ஊத்த புறப்பட்டவர்கள் அலங்கரித்து அழகனாக புடம்போட
வைத்துள்ளனர் .அவருக்கு சிறப்பான விளம்பரத்தை பெற்றுக்கொடுத்து தமக்கு தாமே சூனியம் வைத்துக்கொண்டனர்.
வயல் மாதாவிற்கு எதிரான கண்டன கணைகளை எதிர்கொண்டு தனது கருத்துகளை பலகுழல் எறிகணையாக ஜெயந்தன் பொழிந்து தள்ளினார்.அவர் இளம் தலைமுறை எழுத்தாளராக இருந்தாலும் தைரியத்துடன் தனது பக்க நியாயங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த எதிப்பலைகள் வயல் மாதா விற்பனை அதிகரித்துள்ளது.மேலும் இரு அறிமுக நிகழ்வுகளை சந்திக்க உள்ளது.தாயகம் உட்பட புலம்பெயர் புத்தக கடைகளிலும் ,இணையத்தளம் மூலமும் விற்பனைக்கு சென்றுள்ளது .வாசகர் பரப்பும் அதிகரித்துள்ளது.
யார் இந்த ஜெயந்தன் என இலக்கிய ஆர்வலர்கள் அறிய ஆவல் கொண்டுள்ளனர் .யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இலக்கிய குடும்பத்தில் உதித்தவர்.சிறந்த உதைபந்தாட்ட வீரன்.இலக்கிய ஆர்வலர். டானியல் அன்ரனி எனும் இலக்கிய ஆளுமையின்
வாரிசு .டானியல் அன்ரனி “சமர்” சஞ்சிகை ஆசிரியர்,வலை சிறுகதை தொகுதி வெளியிட்டவர்.சமூக அக்கறையாளன்,
கவிதை,சிறுகதை,விமர்சனம் என தனது எழுத்துகளால் ஈழ இலக்கியத்தில் தடம் பதித்தவர்.
கே.டானியல் போன்ற பல எழுத்தாளர்களை தனது கிராமத்தில் அறிமுகப்படுத்தியவர் .
இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளை பெற்றவர். மரணத்தின் பின்
2014இல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இவரது இலக்கிய பணியை கெளரவித்து மல்லிகை சஞ்சிகை தனது முன் அட்டை நாயகனாக பிரசுரித்து கெளரவித்தது .
சிறந்த பண்புகளை கொண்ட ஒரு படைப்பாளியின் மகன் என்பதால் பாரிஸ் இலக்கிய தளத்தில் ஜெயந்தன் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார்.2015 ஜனவரி 4 பாரிஸில் நடைபெற்ற “எஸ்.பொ. நிழலில் சிந்திக்கும் தினம்”என்னும் நிகழ்வில் கலந்து கொண்ட தருணம் எனது அருகில் அமர்ந்திருந்த இளைஞரிடம் கதைத்தேன்.அவர் நாவாந்துறையிலிருந்து
பாரிஸ் வந்ததாக கூறினார் .அந்த இடத்தை சொன்னாலே டானியல் அன்ரனிதான் எனது
நினைவில் வருவார்.அந்த எழுத்தாளரை தெரியுமா?என்று கேட்டேன்.அவரது மகன்தான்
நான் என அறிமுகப்படுத்தினார்.அவரை அணைத்து என் அன்பை வெளியிட்டேன்.
பல கதைகளை பேசினோம் .இலக்கிய துறையில் தான் ஒரு கற்றுக்குட்டி என்றார்.
தந்தையின் தாக்கம் இவரிடம் இருக்கும் என்பதால் எனது வினாவுக்கு விடையளிக்கும் போதே
அவர் இவ்வாறு கூறினார் .
“காற்றை பிடித்திழுத்து
கடல் நீரை வற்ற வைத்து
நீட்டிய நிலத்தின் மீது
நின் பாத சுவடு சுற்றி
மூட்டுவேன் தீ யை ஓர் நாள்
மூழ்கியே எழுவாய் நீயும் ” என்ற டானியல் அன்ரனியின் வரிகளை நினைவூட்டினேன்.
எமது நட்புக்கு பாலமான இந்த சந்திப்பு பல தடவைகள் தொடர்ந்தன.அவரது முதல் கதையே
என்னை அதிசயிக்க வைத்தது. தேர்ந்த எழுத்தாளர் பண்பு உனது எழுத்துகளில். பிரதிபலிக்கிறது என்று அவருக்கு உற்சாக மாத்திரைகளை வழங்கினேன்.இலக்கிய பயணம்
தொடர்ந்தது புகலிடம்,தமிழகம்,தாயகம் என எழுத தொடங்கினார் .தந்தையின் வழியே நடந்தார்.இலக்கிய ஜாம்பவான்களுடன் நெருக்குமானார்.
இலக்கிய காட்டுக்குள் நுழைந்தால் கல் எறிவார்கள்,ஏசுவார்கள்,எரிப்பார்கள் அதில் எதிர்நீச்சல் போடவேண்டும் என்பதை வயல் மாதா நூலுக்கு கிடைத்த எதிர்வினைகள் உதாரணமாக இருக்கிறது.
டானியல் ஜெயந்தன் தொடர்ந்து எழுத வேண்டும் வாசகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறார்கள் .அவரின் துணிவு,நேர்மை ,,கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு போன்ற பண்புகளை பாராட்டுகிறோம் .
நன்றி,
எழுத்தாளர், என்.கே.ரி துரைசிங்கம்