உணர்வின்றிப் பாலத்தின் மேலே கிடந்த என் கால்களை மெல்ல அசைத்துப்பார்த்தேன். கால்கள் அசைந்தன. உடலைத்திருப்பி எழுந்து நிற்க எத்தனித்தேன். வலது முழங்காலில் சதை பிய்ந்து வெள்ளை நிறத்தில் கரடு முரடாக எலும்புகள். கண்கள் இருண்டு தலை சுற்றியது. மூச்சு வாங்க வீதிப்பாதுகாப்பு தூணின் மீது சாய்ந்து கண்களை மெதுவாக மூடினேன். “தம்பி இப்பயெல்லாம் நேரத்துக்கு இருட்டுது மாட்டுத்தனமா பிரண்டு போன அடையானுகள் கார் ஓடுவானுகள் பார்த்து பத்திரமா ஓடு. கெல் மட் கவனம்! என்று காலையில் வைத்தியசாலை சக்கர நாற்காலியில் அமர்ந்த படி அம்மா எச்சரித்த போது நான் அலட்சியத்தோடு வீதியை நோக்கி மிதிவண்டி பெடல்களை ஊன்றி மிதித்தது நினைவுக்கு வர, நெஞ்சில் பழுத்த இரும்புக்கம்பியால் அம்மாவே சூடு வைச்சது போல ஒரு உணர்வு. வியர்வை நெற்றியின் வழியே வழிந்து கன்னத்தை தடவியதும் சுள்ளென்று எரிந்தது முகம். கையை உதறி எழுந்தேன். தலை விறைத்தது.
உள்ளங்கையில் குருதி பிசு பிசுத்தது. தலைக்கவசத்தைத் தேடினேன். அது வீதியின் மறுபக்கம் சிதைந்து போய் கிடந்தது. அதன் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு ஒருவர் அருகில் வந்து உதவிட எத்தனித்தார். நெளிந்து போன மிதிவண்டியை உருட்டி என் அருகில் நிறுத்தினாள் நடைப்பயிற்சிக்கு வந்த ஒரு இளம் பெண். கண்கள் எரிந்தன,தொலைபேசியில் இலக்கத்தை அளைந்து மனைவியை அழைத்தேன். மின்னல் வேகத்தில் அவளும் வந்து சேர்ந்துவிட்டாள். மிதி வண்டியை அவளும் உருட்டிப்பார்த்தாள். அதன் முன் சக்கரம் வளைந்து மிதிவண்டி வேறு திசைக்கு சென்றது. வீதியை விட்டு அகற்றி அதை ஒதுக்குப்புறத்தில் சரித்துவிட்டு வேகமாக ஓடோடி வந்தாள். அவளின் உதவியோடு வண்டியில் ஏறிக்கொண்டேன். நடந்தவற்றை விபரமாக சொன்னேன். அப்போது அவள் தன் கரங்களை எடுத்து தன் தலையில் அடித்துக்கொண்டாள். வண்டி வைத்திய சாலையை நோக்கி விரைந்தது.
போகும் வழியில் அம்மா வந்திற்ராவா சைலா? என்று கைகளால் எரிவுகாயங்களைப்பொத்திக்கொண்டு அடைத்த குரலில் கேட்டேன். இன்னுமில்லை ! எரிச்சலோடு முகத்தைத்திருப்பிச்சொன்னாள். “இப்ப அம்மாவுக்கு தெரிஞ்சால் இன்னும் பிரஷர் ஏறும் என்ன சொல்ரெண்டு தெரியேல சைக் என்று சினந்தாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவளது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. “சின்ன ரெஸ்ட் எடுத்துப்போட்டு அம்மாவை மத்தியானம் அம்புலன்ஸிலே கொண்டு வாரண்டு தானே சொன்னவங்க காலமை” என்றேன்.
“இந்தக்கோலத்தில உங்கள அம்மா பாக்கவா இண்டைக்கு அம்மா வர வேணும் எண்டு நிக்கிறிக .. என்று சொன்ன படி அடுத்த கியரை போட்டு எஞ்சினை வேகப்படுத்தினாள். நேரம் செல்லச்செல்ல உடலின் எரிச்சல் உண்டாகிக்கொண்டிருந்தது. அம்மாவை நினைத்துக்கொண்டேன். நேற்று துண்டு வெட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக வைத்தியர் உறுதியளித்தவர். முன்னர் இவ்வாறு இரண்டு முறை கூறி நாங்கள் அனைவரும் ஏமாந்து போயிருக்கிறோம். அம்மாவுடைய வரவு தாமதமடைந்ததை குறித்து விசனம் கொண்டேன். எனக்கு வைத்திய சாலைக்குச் செல்லும் எண்ணமெதுவுமில்லை. வெறும் சுடு நீரால் ஒத்தடம் பிடித்து அகலப் பிளாஸ்ட்ரை ஒட்டினால் சரியாகிடும் ஆஸ்பத்திரி தேவ இல்ல” என்று உறுதியாய் சொன்ன போது மனைவி கடிந்துகொண்டாள். “உங்கட வருத்தம் உங்களுக்குத்தான் தெரியும் என்னவோ செய்யுங்க! இப்ப என்ன செய்ய? வீட்ட விடு என்றேன். வண்டி வேகமாக வீட்டுக்கு முன்னால் சென்று தரிப்பிடத்தில் நின்றது. வண்டியை விட்டு இறங்கி மெல்ல அடியெடுத்து வைத்தேன். வீட்டு வாயிலில் அக்கா குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டு நின்றாள். என்னைக்கண்டவுடன் உணவு மேசையில் உணவுத்தட்டை வைத்துவிட்டு பதறிக்கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தாள். நான் எதுவும் பேசவில்லை. மெதுவாக உள்ளே சென்று குளியலறையில் இரத்தக்கறைகள் படிந்த வேலை உடையை வேகமாக உருவிப் போட்டேன். உடலில் சுடு நீர் பட்டதும் எரிச்சல் தாங்க முடியவில்லை. பின்னர் சுகமாக இருந்தது. என்னை அறியாமல் சிறு நீர் பிரிந்து சென்றது.
இர உணவு உணவைத் என்னை அழைத்தாள். ஒரு தேநீர் மட்டும் போதும் என்றேன். சில நிமிடங்களில் மனைவி ஒரு கையில் தேநீர், மறுகையில் பச்சை நிற முதலுதவிப்பெட்டியுடன் வந்தாள். அக்கா கையை பிடித்துக் கட்டிலில் இருந்து தூக்கிவிட்டாள். சூடான தேநீர் உடலுக்குள் இறங்க இதமாக இருந்தது. உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில் எல்லாம் மருந்துகளை பூசி மெல்லிய துணியினால் எனது உடலைப் போர்த்துவிட்டுப்போனாள் மனைவி. பருத்தித்துணி இதமாக இருந்தது.
இப்போதும் நினைவு இருக்கின்றது.1979 ல் எனக்கு ஏழு வயது ஆகி இருக்காது. யாழ்ப்பாணத்தில் கடும் வெய்யிற் காலம். எங்கு பார்த்தாலும் சின்னமுத்து வியாதி பரவிக்கொண்டிருந்தது. அம்மா என் கழுத்தில் பொக்கணியை முட்டுகின்ற அளவில் உலோகக்குருசு பொருத்திய வெள்ளை நிறச்செபமாலையை அணிவித்து சிப்பித்தரையில் உள்ள அந்தோனியார் தேவாலயத்துக்குக் கொண்டு சென்றார்.
அங்கே தங்கிப் பனம்பாய் விரித்து உறங்கி ஏழு நாட்களில் நிறைவடைந்த நேற்றிக் கடனை, முப்பது வாளித் தண்ணீரை தலையில் ஊற்றி நேற்றியை முடித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வர, அம்மாவுடைய உடல் முழுவதும் அம்மை தழும்பு. அம்மாவை வேப்பம் குளைகள் மீது கிடத்தி வெள்ளைப் பருத்தித்துணியால் போர்த்து, நெற்றியில் திரு நூறு பூசிவிட்டார் அப்பா. அன்று தான் அம்மாவுடைய சீற்றத்தின் உச்சத்தைக் கண்டேன். அப்பா அது “அம்மனின் சீற்றம்” என்று சொல்லிச்சமாளித்தது நினைவுக்கு வந்தது. அம்மா சரியான கண்டிப்பு மிக்கவர். இன்று அவர் வீட்டில் நின்று இருந்தால் “சொல் கேளாப் புள்ளை வீட்டுக்கு உதவாது” என்று திட்டிக்கொட்டித்தீர்த்திருப்பார். அதை நினைத்த போது கண்ணில் நீர் முட்டியது. அப்போது என்னுடைய மனைவி அறை மின் விளக்கைப் போட்டபடி “எழும்பிச்சாப்பிடுங்க” என்றாள். அறையுள் மென் இருட்டு. நான் மெல்ல எழும்பி கட்டிலில் அமர்ந்தேன். சுவரில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் இரவு எட்டு மணி பதினோரு நிமிடத்தைக் காட்டியது. எனக்கு உணவு உண்பதற்கான மனம் இல்லை. சன்னல் வழியே தெரு வெளிச்சம் எட்டிப்பார்த்தது. அப்போது பெரிய இரைச்சலோடு வாகனம் ஒன்று வீட்டுக்கு முன் வந்து பிரேக் அடித்து நின்றது. அக்கா என்னுடைய அறையை நோக்கி ஓடி வந்தாள். என்னுடைய மனைவி வாகனத்தை நோக்கி ஓடினாள். “தம்பி அம்மாவ கொண்டு வந்திறங்கடா என்றாள். நீ இரு உனக்கு ஏலாது நாங்க கூட்டிக்கொண்டு வாறம்” என்றாள். என்னால் இருப்புக் கொள்ள முடியவில்லை. என்னுடைய போர்வையை விலக்கி விட்டு சாறத்தை எடுத்து அணிந்து கொண்டு உன்னி வெளியில் வந்தேன். வீடு முழுவதும் மின் விளக்குகள் ஒளிர்ந்தன. ஊர்த்திரு விழா போல கலகலப்பு. எல்லாருடைய முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருந்தது. நான் வெளியில் வரவும் தம்பியும் அவனது மனைவியும் வாசலுக்குள் ஏறவும் நேரம் சரியாக இருந்தது.
அக்கா அம்மாவுடைய அறையை வேகமாக துப்பரவு செய்து, கட்டிலை தட்டிப் புது மெத்தை விரிப்பை விரித்தாள். பின் புதிய சன்னல் திரைச்சியிலையை திருத்தமாக மாட்டிவிட்டாள் . தம்பியுடைய மனைவி தலையணைகளுக்கு புதிய உறைகளை மாட்டுவதில் உற்சாகமாக இருந்தாள். அக்கா வேகமாக குசினிக்குள் ஓடிப்போய் சூடு நீர் வைப்பதற்காக கேத்திலின் சுவிட்சைப் போட்டாள். அங்கே வந்து நின்ற அம்புலன்ஸ் ஊழியர்கள் ஏதோ சைலஜாவிடம் சொல்ல அவள் வேகமாக என்னை நோக்கி ஒடி வந்தாள். “என்னங்க அம்மாவை கூட்டிக்கொண்டு இப்ப உள்ள வருவினம்” என்றாள் அம்மாவை மீண்டும் வீட்டுக்குள் பார்ப்பதில் எல்லாருக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி.
வெள்ளையும் குருத்துப் பச்சையும் கலந்த நிறத்தில் சீருடை அணிந்த நான்கு வைத்திய ஊழியர்கள் அம்மாவை சக்கர நாற்காலியில் வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள். அம்மாவை பார்க்க எல்லாரும் முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள். அம்மாவுடைய அறையை நெருங்கியதும் பின்னால் வந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி “தூஸ் மோ தூஸ் மோ “ என்றாள். அவளது எடுப்பான நடவடிக்கை அவளை ஒரு பெண் தலைமை வைத்தியர் என எண்ணத்தோன்றியது. அவளது அருகில் இன்னுமொரு பெண் அம்மாவுடைய ஆக்சிஜன் மெசினை பக்குவமாக இழுத்து வந்தாள். அம்மா கட்டிலின் மீது இறக்கி விடப்பட்டார் . அம்மாவுடைய வீங்கி வெளுத்த முகத்தில் கண்கள் சிறுத்துப்போய் மஞ்சள் நிறத்தில் இருந்தன. தன் தெத்துப்பல் தெரிய மென் சிரிப்பை உதிர்ந்து விட்டார் அம்மா. அம்மா வழமைக்கு மாறாக என்னுடைய ஒரு வெள்ளைக்கோடான் சேட்டையும் ,சைலஜாவுடைய கருப்பு நிறத்தில் வெள்ளை பூ போட்ட ஜீன்ஸையும்,காலில் தம்பி மனைவியின் நாவல் நிற காலுறையையும் அம்மா விரும்பி கேட்டு வாங்கி அணிந்து கொண்டாராம்.
தம்பி ஓடிச்சென்று ஆக்சிஜன் மெசினை சரியான இடத்தில் வைத்துவிட்டு அதன் நீண்ட வழங்கற்குழாயை எடுத்து சரிப்படுத்தினான். அக்கா வெடுக்கென்று தலையில் கையை வைத்துக்கொண்டு குசினியை நோக்கி ஓடினாள். ஆக்சிஜன் மோட்டர் வேலை செய்யும் போது அடுப்பு பற்ற வைக்க கூடாது என்ற விடயம் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. சைலஜா குழந்தையை அம்மாவிடம் கொடுக்க அவனைத்தூக்கி உச்சி முகர்ந்து முத்தமிட்டார் அம்மா. எல்லாரும் சுற்றி நின்று பார்த்துக்கொண்டு நின்றனர். “எங்க அவன் மூத்தவன். உன்ர புருசன். எங்க பிள்ளை” என்று கேட்டாள் அம்மா. அம்மாவுடைய சத்தம் எனக்குக் கேட்டது அதற்கிடையில் அக்கா “ம்ம்ம்ம் வந்திருக்கிறேர். காலம உங்கள ஆஸ்பத்திரியில பாத்துப்போட்டு வேலைக்குப் போச்சு சாப்பிட வரேக்க ஆரோ வந்து காரால இடிச்சுப்போட்டு போச்சாங்கள்.” என்னடி சொல்றாய் ? அம்மாவுடைய முகம் மாறி பதட்டத்தில் நடு நடுங்கியது. பலமாக இரும ஆரம்பித்தார். அவரின் சுவாசப்பை செயலிழந்து விட்டது. இப்போது அதற்கான சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அவர் நெஞ்சு வலிக்க இருமும் போது தன்னிலிருந்து பிரிந்து செல்லும் உயிரைப் பிடித்திழுத்து மீண்டும் நோயுற்ற உடலுக்குள் செலுத்தி உயிர் தரித்துவிடுகின்றார். ஆக்சிஜன் அளவு அதிகரிக்க தம்பி அக்காவை ஒருக்கா முறைத்து பார்த்தான். அந்த முறைப்பில் எல்லாம் அக்காவுக்கு புரிந்து விட்டது. “இல்லயம்மா அவனுக்கு ஒண்டும் ஆக இல்ல சின்ன கீறல் காயம் தான் அவன்ர மனிசி இப்பதான் மருந்து போட்டு விட்டவள்.
எல்லாம் ஓக்கே ஆயிரும்” என்றாள். நான் மெல்ல அடியெடுத்து அறையை நோக்கி வந்தேன். என்னுடைய நடையின் சத்தத்தை வைத்து நான் வருவதை அறிந்துகொண்டவள் “டேய் இங்கால வா ! என்று அதட்டினார்.
நான் சிறிய நடுக்கத்தோடு அம்மாவுடைய முகத்தைப் பார்க்காமல் கட்டிலில் கால்களைப்பார்த்துக்கொண்டிருந்தேன். கட்டில் கால்களின் இடையால் ஓடும் நீண்ட ஆக்சிஜன் குழாய் என்னுடைய கண்களுக்குள் அகப்பட்டது. அதன் அளவைபார்த்தேன். அது வழமையடை விட சற்று பெருத்து இருந்தது. ஓடிக்கொண்டிருந்த ஆக்சிஜன் இயந்திரத்தைக் கூர்ந்து அவதானித்தேன். அதுவும் வழமைக்கு மாறாக அதன் உருவத்தில் பெரிதாக இருந்தது. அச்சத்தோடு அம்மாவுடைய கட்டிலுக்கு அருகில் தரையில் அமர்ந்துவிட்டேன். அம்மாவுடைய இதயம் அடிக்கும் வேகத்தை என்னால் அளந்து கொள்ள முடிந்திருந்தது. அம்மா என்னை திட்ட ஆரம்பித்தார். அவரது வாய் மட்டும் அசைகின்ற மாதிரித் தோற்றம்.
அவரது உடலின் அங்கங்கள் கோபத்தால் அதிர்ந்துகொண்டிருந்தன. நான் எதுவும் பேச முடியாமல் நிறுத்தி வைத்த பொம்மை போல் அமர்ந்திருந்தேன். சற்று தலையை நேராக நிமிர்த்திப்பார்த்தேன். அம்மாவுடைய முகம் சிவந்து கோபத்தில் சிவப்பு நரம்புகள் தாறுமாறாக ஓடுவதைக் கண்டேன். நெருங்கிப்போய் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தேன். ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் என்னையறியாமலே வாயில் இருந்து வந்தது. என்னுடைய வலது தொடையில் தேய்ந்திருந்த புண் கட்டில் விளிம்பில் உரசியவுடன் தொடை வலித்தது. நான் காட்டிக்கொள்ளவில்லை.அம்மாவை நெருங்கிச் சென்று அமர்ந்தேன். அம்மாவின் உடலில் இருந்து புது வாசனையை நுகர்ந்தேன். அவ்வாசனை மனதுக்குல அது அம்மாவின் உண்மையான உடல் வாசனை இல்லை. ஏதோ வைத்திய சாலைக்குள் நுழைந்து விட்ட உணர்வு. ஆமாம் அந்த வாசனை எனக்கு அந்நியமாகப்பட்டது. அதே இடத்தில் இருந்து பேச எனக்கு வார்த்தைகள் வரவில்லை. எழுந்து செல்ல வேண்டும் போல ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. அம்மாவை சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் அம்மாவுடைய குறும்ப்புப் பேச்சுக்களையும், அவரின் நடப்பிப்புகளையும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
“தம்பி இரவு எனக்கு என்னமாதிரி எல்லா ஒழுங்கும் சரியா? தலை மாட்டுக்குள்ள வைக்கின்ற உன்ர படிக்குற மேசை லாம்பை வைச்சுப்போட்டு துணியால மூடு வெளிச்சம் படக்கூடாது! மற்றது என்ற தையல் மெஷினுக்கு கொஞ்சம் மெஷின் ஒயில் விட்டு வை நான் நாளைக்கு சில சாரி பிளவுஸ்கள் தைக்க வேண்டி இருக்கு. இதோ பாரு இந்தப்பக்கம்! அதுதான் அந்த பிளாஸ்ட்டிக் பெட்டியை ஒருக்கா கையில எடுத்து தா என்ற சொன்ன படி அவர் அணிந்திருந்த எனது சேட்டைச் சரி செய்தாள். சைலஜா அம்மாவைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்ந்து விட்டாள். வைத்தியசாலைக்கு சென்று வருவதென்றால் அம்மாவுக்கு வேப்பெண்ணை குடிப்பது போன்ற உணர்வு. சென்ற நத்தார் தினத்திலே அம்மாவை வைத்திய சாலைக்கு அழைத்திருந்தார்கள். அம்மா மருத்துவ சோதனை செய்ய மறுத்துவிட்டார். “என்ன லூசனுகள் வருஷம் நத்தார் தெரியாத மொக்கனுகளா இருக்கிறானுகள்” என்று அம்மா திட்டி அந்த முறை சிகிச்சையை தட்டிக்கழித்துவிட்டார். அம்மாவுக்கு தன் உடலின் வேதனையையும், அலைக் கழிப்பையும் நன்கு தெரியும். ஆனால் அதன் தீவிரத்தன்மையைப்பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. நாங்கள் மனிசி கவலைப்படும் என்று சொல்லவில்லை. அம்மா சரியான பிடிவாதக்காரி இன்று இந்த நிலைக்கும் அதுதான் காரணம். இந்த வருத்ததோடு சமையல் கட்டுக்கு போகாத கொம்மா என்றால் கேட்க மாட்டார். எப்படி கோபமாக சொன்னாலும் காதில் எடுத்துக்கொள்ள மாட்டார்.
பிறகு இரவு நித்திரைப்பாயில் கிடந்து கஸ்ரபடுவார் .உடனே வைத்தியசாலைக்கு போவம் எழும்பண என்றால் எனக்கு நோர்மலாச்சு என்று சொல்லுவார். அப்படியும் வற்புறுத்திச்சொன்னால் அவரது வைத்தியரையும் அவரது பணியையும் குறை கூறிவிட்டு இருமலுக்கு வீட்டிலே சுடுதண்ணியை குடித்துவிட்டு பேசாமல் படுத்துவிடுவார். இன்றுதான் முதன் முதல் அம்மா ஒரு வைத்தியசாலை நிர்வாகத்தையும், குறித்த வைத்தியரையும் பாராட்டி பாராட்டுப் பாத்திரம் கொடுத்திருந்தார். சென்ற மாதம் அம்மா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது அம்மாவுக்கு சிகிச்சை வழங்கிகொண்டிருந்த வைத்தியர் முறைப்பாடு வழங்கியிருந்தார். அது பற்றி அம்மாவிடம் விசாரித்த போது அம்மா கடுமையாக வைத்தியரையும் திட்டி தீர்த்து விட்டார். “டீசண்ட டிசுப்பிளின் தெரியாத வெள்ளைக்காரன் அடுத்த முறை அந்த டொக்ட்டர் தான் என்னை பார்ப்பார் என்றால் நான் அங்கே செல்ல மாட்டேன்” என்று அம்மா உறுதியாக சொல்லிவிட்டார். “டீசண்ட் டிசுப்பிளின்” என்ற வாத்தைகள் அன்றில் இருந்து பிரதானமாக எங்களது குடும்பத்துக்குள் பேசு பொருளாகிவிட்டது. ஒரு முறை அம்மா சாந்தமாக இருக்கும் போது தெளிவாக கேட்டு அறிந்துகொண்டேன். சென்ற முறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது தினமும் அம்மாவை நித்திரையில் இருந்து எழுப்புவது ஒரு ஆபிரிக்க தாதிப்பெண். தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை அவள் திருத்தமாக செய்து முடிப்பவள். மருந்துக் குளுசைகள் கொடுப்பதும் அதோடு ஒரு குவளையில் நீர் கொடுப்பது இரவு வேளைகளில் கட்டிலில் பொருத்தப்பட்டு இருக்கின்ற அவசர தேவைப் பொத்தானை அழுத்தினால் அது எந்த நேரமானாலும் உடனடியாக தாதிப்பெண் உதவிக்கு வருவார். அம்மா மணிக்கு இரண்டு மூன்று முறை அழுத்தித்தொந்தரவு செய்வார். இதை வைத்தியர் சொன்ன போது எந்த ஆச்சரியமோ,கோபமோ வரவில்லை. குறித்த பெண் தாதி விடுப்பில் வீடு சென்றாலோ அல்லது வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டாலோ அதற்கு பதிலாக வேறு பெண் தாதியை பணிக்கு அமர்த்துவது வைத்திய சாலையில் வழமையானது. அன்று நிகழ்ந்த சம்பவம் வேறு. அந்த விடயம் நினைவுக்கு வரும் போதெல்லாம் அம்மா கோபத்தின் உச்சத்துக்குச் சென்று இருமத்தொடங்கிவிடுவார்.
எப்போதெல்லாம் இருமல் அதிகமாகி சுவாசிக்க கடினமாகும் போதெல்லாம் அம்மா தன்னுடைய கை மருத்துவத்தை பிரயோகித்து விடுவார். அதில் ஏலக்காய், வசம்பு,கடுகு ,மிளகு ,இஞ்சி ,உள்ளி ,இன்னும் பல அடங்கலாக அனைத்தும் கட்டிலுக்கு குறித்த நேரத்துக்குள் வந்துவிட வேண்டும். இல்லா விட்டால் கத்திக் கூப்பாடு போடுவாள். “டேய் உடனடியா ரிக்கெட் போடடா நான் வந்த மாதிரி திருப்பிப்போக ,எனக்குத் தனியா போக தெரியும் நாட்டுக்குப் போய் ஊரோட கிடந்துசெத்துப்போறன்” என்று சொல்லி சினுங்க ஆரம்பிப்பார். அன்று வைத்திய சாலையில் பெண் தாதிக்கு பதிலாக நாற்பத்து அய்ந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் தாதி சேவைக்கு அனுமதிக்கப்பட்டதும் அவன் வழமையின் பிரகாரம் தனது பணிகளை செவ்வனே செய்தான். குளிக்கும் நேரம் வந்ததும் அவன் அறையை விட்டு போகும் வரை அம்மா பொறுமையாக இருந்தார். தனக்குச் சொல்லி இருக்கிற அறிவுறுத்தலுக்கு அமைவாக அம்மாவை கைத்தாங்கலாக குளியலறைவரை அழைத்துச்சென்றவன். அவன் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவானென்று அம்மா நினைத்தாள். அவன் வெளியேறவில்லை . அம்மாவுடைய ஆக்சிஜன் வயரை சரிபடுத்திவிட்டு துடைப்பதற்கு துணி, ஷாம்போ போன்றவற்றை தண்ணீர் படாமல் எடுத்து மாற்றிவிட்டு வெளியேறும் முனைப்பில் துவாயை எடுத்த போது அவனது வலது கரம் அவனை அறியாமல் அம்மாவுடைய இடதுபக்க முதுகில் தொட்டு விட்டது. அவன் உடனடியாக சுதாகரித்துக்கொண்டு பிரெஞ்சில் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியேற எத்தனித்தான். அப்போது அவன் முன்பு அம்மா பத்திரகாளியாட்டம் ஆடியிருக்கிறார்.
“ஸ்டூப்பிட் உனக்கு டீசண் டிசுப்பிளின் தெரியாதா? என்று முகத்துக்கு முன்னால் கேட்ட போது அவனது முகம் அவமானத்தால் சுருங்கிப்போனது. பெரிய சத்தம் போட்டுத் தமிழாலும் அவனைத்திட்டி தீர்த்து விட்டார். அவன் ஏதோ குற்றம் செய்தவன் போல ஒடுங்கிப்போய் ஒரு மூலையில் நின்றான். அம்மாவுடைய அறைக்குள் ஆட்கள் கூடிவிட்டார்கள். அப்போது அம்மா தனக்கு தெரிந்த ஆங்கிலத்தால் போட்டுத்தாக்கியிருக்கிறார். நிலைமையை புரிந்துகொண்ட அதிகாரிகள் குறித்த பரிதாபத்துக்குரிய ஆண் தாதியை வெளியேற்றிவிட்டு உடனடியாக எனக்கு அழைத்துப் பேசினார். வைத்தியர் தாழ்மையான குரலில் உடனடியாக வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். நான் மறுத்துப்பேசவில்லை. இயந்திரமாய் இயங்கி வேலைத்ததளத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துவிட்டு வைத்தியசாலைக்கு ஓடினேன். அம்மா குமர் பெட்டை போல விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார். எனக்குப் பரிதாபமாக இருந்தது. பின்னர் வைத்தியரை அணுகி நிலைமையைக் குறித்து அவர்களுடன் பேசி அனைவரும் சமாதானமானோம். அம்மா கை விரல்களை நெட்டி முறித்துக்கொண்டு “இந்த முறை ஆஸ்பத்திரியில் நல்ல கவனிப்பு தம்பி ஒரு அடச்சியை என்ர ரூமுக்கு விட்டவங்க நான் எத்தின மணிக்கு பட்டினை அழுத்தி கூப்பிட்டாலும் கெதியாய் வந்துவிடுவாள் நல்ல பெட்டை” என்றாள்.
அக்கா என்னை ஒரு மாதிரியாய் பார்த்தாள். அந்தப்பார்வையில் ஏதும் அர்த்தம் இருக்கத்தான் செய்தது. யாரும் பதில் சொல்லவில்லை. வீட்டு அழைப்பு மணி அடித்தது. அம்மாவுடைய ஆக்சிஜன் கலங்களை நிரப்புவதற்காக இரண்டு வெள்ளைக்காரர்கள் வந்திருந்தார்கள். அம்மாவின் மடியில் இருந்த குழந்தையை தூக்கி எடுத்தாள் அக்கா. அம்மாவுக்கு தேவையான சூடு தண்ணீர் அளவான பாத்திரத்தில் பக்குவமாக பரிமாறப்பட்டது. அம்மா சூடு நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை உள்ளங்கையில் வைத்து அழுத்திக் கைகளைக் கததப்பாக்கிக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிக் கூட்டம். மீண்டும் அம்மாவுடைய கைகளுக்கு ஒரு குழந்தை நீட்டப்பட்டது. அதற்குப் பிடித்தமான ஒரு குழந்தைப்பாடலை அம்மா பாடிக்கொண்டிருந்தார்.
குழந்தை அம்மாவுடைய மடியை விட்டு உதறியது. தன்னால் கட்டுப்படுத்த முடியாத போது “ ஆத்தே இந்தா பிள்ளை பிடி பாலைக்குடு என்று பிள்ளையை மனைவியிடம் அம்மா நீட்டினார். பின் போர்வையை விலக்கி கால்களை நீட்டி மெல்ல தலையணையில் சாயும் போது மெல்ல சுடுநீர் பையினால் முதுகு கால்களை ஒத்தடம் பிடித்து விரல்களை நெட்டி முறித்துக்கொண்டிருந்தாள் அக்கா. அம்மாவுக்கு பிடித்தமான செய்முறைகள் அதில் உண்டு அதை ஒழுங்காக செய்தால் குறித்த நேரத்துக்குள் அம்மா நிம்மதியாக உறங்கிவிடுவார். அன்று அம்மா உறங்கவில்லை. “தம்பி பெரியவன் வாடா இங்க என்ர தலை மாட்டில வந்து இரு ! தம்பி எங்க? அவன் கடைக்குப் போச்சானம்மா” என்றேன். மூன்று வாரங்கள் அம்மா பிரிந்து சென்ற தன் கைத்தொலைபேசியை அன்றுதான் பரிசாக கிடைத்த நத்தார் பரிசைப்போல மகிழ்ச்சியோடு முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்து மடியில் அழுத்தித்தித் தொடு திரையை துடைத்து சுத்தம்செய்துகொண்டிருந்தார்.
ஏற்கனவே அம்மாவைச்சுற்றி பெண்கள் கூட்டம் நின்றிருந்தபடியால் நான் கட்டிலில் அமர்வதற்கு போதிய இடம் இருக்கவில்லை. கட்டிலின் எதிரே அம்மாவுடைய பார்வை என் மீது பதிக்கும்படியாக அறைச்சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு அம்மாவுடைய கண்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். உடல் வலித்தது. தூக்கம் கண்களை அரித்துக்கொண்டிருந்தது. மெல்ல எழுந்து அடுத்த அறைக்கு செல்ல எத்தணித்த போது “ம்ம்ம்ம் போறான் பாரு தலை மாட்டில வந்து கொஞ்ச நேரம் இரு எண்டு சொல்ல ஓடுறான் .இவனுக்கு சரியான பயம் புள்ள “ என்றாள். அம்மா அப்படி சொன்னது என்னுடைய காதில் விழுந்தது. ஆனால் அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இப்போதைக்கு எனக்கு தூக்கமும் கொஞ்சம் ஓய்வும் தேவைப்பட்டது .கட்டிலில் போய் சுருண்டு படுத்துவிட்டேன்.சற்று நேரத்தில் மனைவி குழந்தையை எனக்கு அருகில் படுக்க வைத்து ஒரு தலையணையை அணைவுக்கு வைத்துவிட்டு போனாள். பக்கத்து அறையில் இருந்து ஒரே சத்தம். சிரிப்புக்குப் பஞ்சமில்லை. பழைய கதைகள், புதுக்கதைகள்,ஆஸ்பத்திரி பம்பல்கள் என நீட்டிக்கொண்டே போனது அந்த இரவு. உடல் அடித்துப்போட்டது போல இருந்தது. நான் மகனை அணைத்துக்கொண்டு உறங்கி விட்டேன்.
சிரிப்பொலி அதிகமாக வெளிவரும்போதெல்லாம் எனக்கு நித்திரை குழம்பும். நான் பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் பழைய நினைவுகளால் ஆட்கொள்ளப்படுவேன். அம்மாவுடைய சுவாசப்பை செயலிழந்து விட்டது. வைத்தியர்களின் கவனக்குறைவும் சரியான வைத்தியமும் அங்கு செய்யமுடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனியாக அம்மா பிரான்சுக்கு வந்து இறங்கிய போது நான் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்தேன். இவ்வளவு உடலில் வியாதி இருந்தும் அம்மா துணிந்து தனியாக விமானம் ஏறியதை ஊரில் எல்லாரும் பெருமையாக பேசிக்கொண்டார்கள். இதுதான் அம்மாவுடைய முதல் விமானப்பயணம். விமான நிலையத்தினுள் இருந்து ஒரு ஊழியர் அம்மாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார். அம்மா மெலிந்து வாடிப்போய் காணப்பட்டார். இருபது வருடங்களின் பின்பு அன்றுதான் முகம் முகமாக பார்த்தேன்.
சக்கர நாற்காலியில் இருந்து இறங்கி நடந்து மின் தூக்கியில் முதன் முதலாக கால்களை வைத்த போது மழைக்குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல அம்மாவின் தொடைகள் நடுங்கின. குழந்தையைப்போல அம்மாவைத் தூக்கி கவனமாக நிறுத்தியதும் நினைவுக்கு வந்தது. அப்பா இறந்து ஆறு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. அம்மா தனிமையில் எவ்வளவு போராட்டம் போராடி விட்டு வெளி நாடு வந்திருக்கிறார். அதை நினைத்தால் நாங்கள் வாழும் இந்த வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையா? என்று எண்ணத்தோன்றுகின்றது.
சைலஜா அறை விளக்கை அணைத்துவிட்டு மீண்டும் அம்மாவுடன் கதைப்பதற்காக சென்று விட்டாள். நான் உறங்கி விட்டேன். அப்போது நேரம் நள்ளிரவைக்கடந்து இருக்க வேண்டும். அம்மா கழிப்பறைக்கு செல்ல ஆயத்தமானால் அதற்கு முன்பதாக இருமல் வராமல் இருக்க முன் ஏற்பாடுகள் செய்வார். விக்ஸ் இனிப்புகளை உண்பதும், ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுதல் போன்ற செயல்களை அடிக்கடி செய்வதை நான் பார்த்து இருக்கிறேன். அதை அக்கா கண்டிக்கும் வகையில் “நே கொம்மா இங்கிலீஸ் வைத்தியம் பாத்துக்கொண்டு இருக்கும் போது நீ இப்பிடி ஏலக்காயும் கருவாப்பட்டையும் திண்டுகொண்டு இருந்தால் என்ன பிரயோசனம்?
“அடி போடி இந்த இங்கிலீஸ் மருந்து முழுக்க ஏலக்காய் கிராம்பிலதான் செய்யிறாங்க அது தெரியுமா உனக்கு ? என்று கேட்டு அக்காவுடைய வாயை அடைத்து விடுவார். வெளியே சல சலப்பு. தம்பி வேலையால் வந்துவிட்டான். அம்மா கட்டில் கம்பியை பிடித்துக்கொண்டு யாருடைய உதவியும் இல்லாமல் கழிப்பறைக்கு செல்கிறார். “கடைசி மட்டும் கட்டிலில் கிடந்தாலும் என்ர புள்ளைகளுக்கு நான் பீ மூத்திரம் எடுக்க வைக்க மாட்டன்” என்று அம்மா சொல்லுவா. எப்பவும் அப்படித்தான் யாராவது உதவிக்கு வந்தால் திட்டிவிடுவது அம்மாவுக்கு வழக்கம். இன்று வேலையால் வந்த கையோடு அம்மாவிடம் வாங்கிக்கட்டி இருக்கிறான்.
கழிப்பறையில் இருந்து அம்மா வெளியில் வர அரை மணி நேரம் எடுத்தது. அனைவரும் கட்டிலுக்கு அருகில் அம்மாவுக்காக காத்து நின்றனர். இருமிக்கொண்டே வெளியேறிய அம்மா ஆக்சிஜன் குறைந்து செல்ல சைலஜா ஓடிச்சென்று ஆக்சிஜன் குழாயை அம்மாவுடைய மூக்குக்குள் திணித்த போது அம்மா சாதாரண நிலைக்கு வந்து விட்டார் . எல்லாரும் பதட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் நடந்த எந்த சம்பவமும் எனக்கு தெளிவாக நினைவிலில்லை. உடல் அடித்துப்போட்டது போல் கிடந்தேன். குழந்தை என்னருகில் நெளிந்து கொண்டு கிடந்தான். அம்மாவுடைய அறையில் யார் யாரோவெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
போர்வை என்னுடைய உடலில் இருந்து சற்று வழுக்கிச்செல்வதை உணர்ந்தேன். சைலஜா போர்வையை இழுத்து தன்னுடைய கால்களை மூடிக்கொண்டாள். சற்று விசனத்தோடு கண்களை திறந்து திட்ட ஆரம்பித்தேன்.
“கொஞ்சம் எனக்கும் போக்க பெட்ஸிட தாங்க” என்று கேட்டு அனுங்கினாள் .
என்ன செய்தனி இவ்வளவு நேரமும் ?
“அம்மா ஆஸ்பத்திரிக்கு போச்சா இப்பதான் அம்புலன்ஸ் வந்து ஏத்திக்கொண்டு போனது” என்றாள் .
எனக்கு முகத்திலை ஓங்கி அறைஞ்சது போல இருந்தது.
ஏண்டி என்னை எழுப்ப இல்லை என்று கேட்டு திட்ட ஆரம்பித்தேன். கோபம் உச்சிக்கு ஏறியது .வழமையாக அம்மா என்ன தேவை என்றாலும் என்னை எழுப்புவா ஏன் இண்டைக்கு என்னை எழுப்பவில்லை. ஏன் அம்புலன்சில் நாலு பேர் வந்து தூக்கி கட்டிலில் ஏற்றிக்கொண்டு போனபோதும் உங்களுக்கு எதுவும் தெரியாதா?
இல்லை தெரியாது….
ஏன் இப்படி அம்மா ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகவில்லையே? என்னையே நான் நொந்து கொண்டேன். என்னையறியாமலே கண்களில் நீர் பெருகின. சைலஜா கதைத்துக்கொண்டிருக்க எல்லாரும் அறைக்குள் வந்துவிட்டனர். மற்றவர்களையும் திட்ட ஆரம்பித்தேன். “ஏலாமல் கிடக்கிறிங்க ஏன் எழுப்புவான் அம்மா நாளைக்கி திரும்பி வந்திருவா தானே” அதுதான் எழுப்பவில்லை என்று தம்பியின் மனைவி என்னை சமாதானப்படுத்தினாள். நான் சமாதானம் ஆகவில்லை. மனதுக்குள் மிகப்பெரிய கொந்தளிப்பு. பேச முடியவில்லை. உதடுகள் துடித்தன. தொட்டால் வெடித்து அழுது கொட்டிவிடுவேன். அதை தவிர்ப்பதற்காக விறு விறுவென்று எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்து நடக்க ஆரம்பித்தேன். அயல் வீடுகளில் இருந்து நாய்களின் குரைப்பு ஓயவில்லை. அம்புலன்ஸ் போகும் திசையை பார்த்து அவை குறைத்துக்கொண்டிருந்தன.
வானில் எஞ்சி இருந்த நட்சத்திரங்களும் தள்ளி நகர்ந்துகொண்டிருந்தன. பார்வையை தாழ்த்தி அம்புலன்ஸ் சென்ற வழியை பார்த்துக்கொண்டு நின்றேன். வெளியில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை. அப்போது நேரம் அதிகாலை இரண்டு மணியை கடந்துவிட்டது. ஆம்புலன்சில் ஏற்றும் போது அம்மாவின் கைகளை பிடித்து “அம்மா ஒன்றும் கவலைப்படாதயண நாளைக்கு விட்டுருவாங்க என்று சொன்ன போது அம்மா மறுத்து ஒரு மாதிரி தலையாட்டியதாக தம்பி சொன்னான் . சைலஜா வைத்திய சாலையைக்குத் தொடர்பு கொண்டு விசாரித்த போது அம்மா பிடிவாதம் பிடித்து சிகிச்சை நிறைவடையாமல் வீட்டுக்கு வந்தவ என்ற உண்மை தெரிய வந்தது. அம்மாவின் உடல் நிலை பற்றி அறிந்த வைத்திய சாலை நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சொன்னார்களாம். அம்மாவிடம் இந்த பிடிவாதம் ஒரு போதும் ஒழிந்து போவதில்லை. என்பதை அப்போதும் சொல்லி திட்டினேன் நாங்கள் எவரும் நித்திரை கொள்ளவில்லை. அம்மா தன்னுடைய தலை மாட்டில வந்து ஒருக்கா இரு எண்டு சொன்ன போது நான் பொருட்படுத்தாமல் சென்று தூங்கிவிட்டேன். நான் எவ்வளவு அதிஸ்ரம் இல்லாத முட்டாள் என்பதை அந்த நொடி எனக்கு உணர்த்தியது .
சைலஜா நான் நிற்கும் இடத்தை தேடி ஓடி வந்தாள். திரும்பிப்பார்த்த போது ஏதோ முக்கியமான செய்தியோடு வந்தது தெரிந்தது. வைத்தியர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறார்களாம். தற்போது அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொன்னார்களாம். என்று கூறினாள். எல்லாரும் செபிக்க ஆரம்பித்தார்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடந்த மாதம் நடந்து முடிந்த சம்பவம் ஒன்று என்னுடைய மண்டைக்குள் ஓட ஆரம்பித்தது. எதோ வேலைத்தளத்தில் என்னுடைய முதலாளியுடன் ஏற்பட்ட தகராறில் அவன் வேலையை விட்டு நில் என்ற சொல்லை மிகச்சாதாரணமாக சொல்லிவிட்டான். அதுவும் பதினைந்து வருடங்கள் பணி செய்த இடத்தில் நேற்று வந்த தொழிலாளிக்கு முன்னால் இப்படி சுடு சொல்லை சொன்னது எனக்குப்பிடிக்கவில்லை. எரிச்சலோடு வீட்டுக்குள் நுழைவதற்குள் அம்மா தம்பி என்ர ஒப்பிறேசன் எப்பயடா ? இப்பிடி நாளை கடத்திக்கொண்டு போனால் எங்க போய் முடியப்போதோ தெரியேல்ல உனக்கு இதில அக்கறை இருக்கா இல்லையா என்று கேட்டபோது நெஞ்சில் பெரிய கத்தியை செருகியது போல இருந்தது. சற்று முன்னர் இதே சொல்லைத்தான் முதலாளியும் சொன்னான். அழுகிப்போன தக்காளிப்பெட்டியை தன்னிடம் சொல்லாமல் குப்பைக்குள் போட்டு விட்டேன். நான் இந்த உணவகத்தில் செப் ஆக தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து செய்து வருகின்ற வேலைதானே இது என்ன புதிதாக இவன் என்னை ஒரு மாதிரி கேள்வி கேக்கிறான். கோபம் தலைக்கேறியது.
கையில் வைத்திருந்த பிளாஸ்ரிக் தட்டை வீசிவிட்டு சிகரெட்டை வாயில் கவ்விக்கொண்டு வெளியில் வந்துவிட்டேன். இப்போது அம்மா இப்படி பேசியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை வாய்க்கு வந்த சுடு சொற்களால் திட்டிவிட்டேன். “என்னை உடன அனுப்பு ஊருக்கு ,நான் ஆருக்கும் பாரமா இருக்க இல்லை அங்க போய் ஊரோட கிடந்து செத்துபோறன் என்று சொல்லி வெடித்து கதற ஆரம்பித்தார். என்னால் அதை சகிக்க முடியவில்லை. ஷைலஜா அம்மாவை சமாதானப்படுத்த அம்மா அனுமதிக்கவில்லை திட்டி அனுப்பி விட்டார். அம்மாவுடைய அறுவைச்சிகிச்சைக்கு பொருத்தமான சுவாசப்பை இன்னும் கிடைக்கவில்லை என்று கடிதம் வந்து இருந்தது. அதை அவரிடம் காண்பிக்கவில்லை. அம்மா கோபம் கொண்டால் அவரின் உடலுக்கு நல்லதில்லை . நான் தவறு செய்துவிட்டது போல குற்ற உணர்வு. அன்று இரவு அம்மா நிச்சயம் தூங்கி இருக்கமாட்டார் . தினமும் நித்திரையால் என்னை எழுப்புவது அம்மா. தேநீர் தயாரித்து பிஸ்கட்டுடன் கொடுக்க வேண்டும். அடுத்த நாள் காலை அம்மா என்னை எழுப்பவில்லை. நான் சிறு நீர் கழிக்க எழுந்து செல்லும் வழியில் வழமை போல அம்மாவுடைய அறையில் ஆக்சிஜன் அளவுகளை சரி செய்ய அறையை எட்டிப்பார்த்தேன் .
நித்திரைத்தூக்கம். மங்கலான வெளிச்சத்தில் வெள்ளைப் போர்வையால் அம்மாவின் உடலை மூடி இருப்பது போல பிரம்மை. நெஞ்சு படபடத்தது. இரு கால்களையும் நீட்டி கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு படுத்து இருக்கும் முறையும் என்னை ப்பதறவைத்தது. இது என்ன பிரம்மையா? பயம் கொண்டேன். பின்னர் சுதாகரித்துக்கொண்டு அம்மாதான் ஏதோ நாடகம் ஆடுவதாக நினைத்தேன். அம்மா பிளாக் மெயில் பண்ணுவதில் கெட்டிக்காரி என்ற விடயம் எனது மூளையில் பொறியாய் தட்டியது. சென்ற வாரம் வெற்றி நாயகி கோயிலுக்கு சென்று அங்கு நடந்த விருந்துணவை முடித்துவிட்டு குறித்த நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை. தொலைபேசியில் தாமதத்துக்கான காரணத்தை சொல்லி விரைவில் வந்து விடுவதாகவும் குரல் செய்தி அனுப்பி இருந்தேன். அம்மா அதை கேட்கக் கூட இல்லை. அம்மாவுக்கு தேவையான உணவையும் தவறாமல் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் அம்மா நீண்ட நேரம் அறையில் இருந்த எதையும் உண்ணாமல் இருந்து இருக்கிறார். வீட்டுக்கு வந்து உணவைக்கொடுத்த போது கோபத்தில் உணவுத்தட்டை விட்டெறிந்தார். உணவு வெள்ளைச்சுவரை அழுக்காக்கியது. அது மட்டுமல்ல அன்று இரவு முழுவதும் உண்ணாமல் மருந்து எதுவும் உட்கொள்ளாமல் உண்ணாவிரம் இருந்து சாதித்து விட்டார்.
கழிவறையில் இருந்து நினைத்துப்பார்த்த போது குபீர் என்று சிரித்துவிட்டேன். சில நிமிடம் கழித்து வெளியில் வந்து மீண்டும் அம்மாவை பார்த்தேன். என்ன ஆச்சரியம் அம்மா இப்போது நீல நிறப் போர்வையால் மூடி கால்களை மடித்து நெச்சில் கைகளை வைத்து வழமை போல ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தார் .நான் பதறிப்போனேன். எதுவும் பேசவில்லை. விறு விறுவென்று என்னுடைய படிப்பறைக்குச் சென்று ஒரு புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். அதிகாலை என்னை அழைப்பதற்கு பதிலாக சைலஜாவை அம்மா கூப்பிட்டு இருக்கிறாள். அம்மாவுடைய முகம் அழுது வீங்கி இருந்ததாக சைலஜா சொன்னாள். ஏன் வருத்தக்கார மனுசியை இப்பிடி வதைக்கிறீங்க என்று சொன்ன போது என்னுடைய தொண்டை இறுகிப்போனது.
அந்த நாளுக்கு பிறகு நான் சரியான கவனமாக இருக்க கற்றுக்கொண்டுவிட்டேன். அம்மாவுக்கு பிரெஞ்சு சுத்தமாக வாயில் நெளியாது. அவளைச்சுற்றி மொழி தெரியாதவர்கள் என்ன என்னவோ எல்லாம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அம்மா தனியாக மொழி தெரியாமல் என்ன செய்து கொண்டு இருப்பார். ஒரு ஆறுதலுக்கு கூட நான் அங்கு இல்லை. அம்மாவைத் தனியாக அனுப்பிய பாவியாகிவிட்டேன். எப்படியெல்லாம் வேதனைப்படுவார். என்னால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடைந்து அழுதுகொண்டிருந்தேன். விடியும் வரை காத்துக்கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த இரவு நீண்டிருக்கின்றது. அப்போது சைலஜா என்னை உள்ளே அழைத்தாள். அவளது முகம் வியர்த்துக்கொட்டியது. உதடுகள் நடுங்கின. “அம்மாவுக்கு கொஞ்சம் சிரியஸா இருக்காம்” எங்களை பிரேயர் பண்ணவாம் தங்களால் முடிந்த ட்ரீட் மேட் செய்வதாக டொக்ட்டர் சொன்னவை. என்னால் எதுவும் பேச முடியவில்லை பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துவிட்டேன். அம்மாவின் பத்துவருட கொடுமை நிறைந்த சிலுவைப்பாதை இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்று நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.
அங்கு நடப்பது எதுவும் எனக்கு கேட்கவில்லை. “ஒண்டும் கவலைப்படாதீங்க அம்மா திரும்ப வருவா” அந்த மனிசிக்கு சரியான துணிச்சல் காரி இத்தின வருசமா இந்த வருத்தத்தோட போராடினவ!” நல்லவங்களை மாதா கைவிட மாட்டா ! இவ்வளவு கஸ்ரப்பட்டு புள்ளைகளை வளர்த்த மனிசிக்கு புள்ளைகள் நல்லா வந்த பின்பு பாக்கிறதுக்கு கட்டாயம் திரும்ப வருவா பாருங்க ! என்று யாரோ சொல்லி மூக்கை சீறியது நன்றாக உறைத்தது.
யாரோ என்னுடைய தோளை உலுப்ப நினைவுகள் திரும்பின. கண்களை விரிவாக திறந்து பார்த்தேன். வீட்டுக்குள் நிறைய ஆட்கள் வந்து குவிந்து விட்டார்கள். எனது இருண்ட கண்களில் மங்கலாக உருவங்கள் தென்பட்டன. யார் யாரோவெல்லாம் என்னைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். மாமி எங்களை விட்டுட்டு போச்சிங்களா? என்று கீச்சிட்டு என்னை மோதி கட்டிக்கொண்டு கதறியள ஆரம்பித்தாள் சைலஜா. என் மூச்சு அடங்கி எனது ஆவி பிரிவது போல உணர்வு. நான் அவளை உதறிவிட்டு எழுந்து அம்மாவுடைய கட்டில் இருக்கும் அறையை நோக்கிச் சென்றேன். அறையின் மூலையில் கருப்பு துணியால் மூடப்பட்ட மேசை விளக்கில் இருந்து மெல்லிய மஞ்சள் வெளிச்சம் அறையை நிறைத்துக்கொண்டிருந்தது.
அப்போதுதான் அம்மா போர்வையை விலக்கி எழுந்து சென்ற தடயங்களோடு அறை காணப்பட்டது. அவர் உடலின் வெம்மையோடு கூடிய வாசனை அந்த அறையை விட்டு இன்னும் அகலவில்லை. அம்மாவின் கருப்பு நிற உறை போட்ட தலையணையை எடுத்து என் மடியில் வைத்து மென்மையாகத் தடவிக்கொண்டிருந்தேன். தலையணையில் ஒட்டியிருந்த அவரின் வெண்ணிற முடிகளை பிரித்தெடுக்க மனமில்லாமல் தேம்பி அழுதுகொண்டிருந்தேன். என் அறைக்கதவை ஓயாமல் தட்டிக்கொண்டிருந்தார்கள்.
டானியல் ஜெயந்தன்-