நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் டானியல் ஜெயந்தனின் வயல் மாதா என்ற சிறுகதைத் தொகுதியை முன்வைத்து ஃப்ரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் டானியல் ஜெயந்தனைக் கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள். பயமுறுத்தியிருக்கிறார்கள். நூலை எரித்திருக்கிறார்கள். அப்படிச் செய்த அராஜகவாதிகள் ஃப்ரான்ஸை விட்டு வெளியேறி விட வேண்டும். ஃப்ரான்ஸின் கருத்துச் சுதந்திரத்துக்கே இது அவமானம். அப்படி வெளியேறாவிட்டால் அவர்களை ஃப்ரான்ஸை விட்டுத் துரத்த வேண்டும். ஏனென்றால், அவர்கள் தங்களின் யாழ்ப்பாணத்து பூமியில் எத்தனை வேண்டுமானாலும் அராஜகம் செய்து கொள்ளட்டும். கருத்துச் சுதந்திரத்துக்குப் புகழ் பெற்ற ஃப்ரான்ஸை விட்டு விடுங்கள்.
