லாச்சப்பல் ரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் மேற்கே செல்லும் சுதந்திர சதுக்கத்தின் சுற்று வட்டத்தில் அமைந்திருக்கும் ‘நாம் தமிழர்’ தேநீரகத்தின் முன்பாக நின்று மீண்டும் தொலைபேசியைத் திறந்து தொடு திரையை விரித்து முகவரியைச் சரிபார்த்தேன். பாதைகள் தொலைத்தொடர்புக் கம்பிகளைப் போல
பச்சை ,நீலம், சிவப்பு நிறங்களில் குறுக்கும் மறுக்குமாக சிக்கலாகச் சென்றுகொண்டிருந்தன. எனக்கு எதுவும் சரியாகப்பிடிபடவில்லை. பின்னர் கூகுள் வழிகாட்டும் செயலியைத் திறந்து குறித்த முகவரியை வெட்டி அதில் பேஸ்ட் செய்தேன். சில நொடிகளில் நான் செல்ல வேண்டிய இடத்தையும், தெரிவு செய்ய வேண்டிய மெட்ரோவையும் துல்லியமாக செயலி தெளிவுபடுத்தியது. லாச்சப்பலில் இருந்து ஐந்தாம் இலக்க மெட்றோ, பொபினி டிரெக்சனை சரியாகப் பார்த்து எடுத்தால் குறைந்தது முப்பத்து இரண்டு நிமிடங்களில் பொபினி மக்கள் கடையின் எதிரே அமைந்திருக்கும் ரொபேர் நொக்ஸ் தரிப்பிடத்தை அடையலாம். அங்கிருந்து மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகத்தில் நடந்தால் அடுத்த எட்டு நிமிடங்களில் பொபினிஅஞ்சல் நிலையத்தின் பிரதான வாயிலை நெருங்கலாம். அங்கிருந்து விரிந்து பிரியும் இரு விதிகளில் ஒன்றை கவனமாக பிடித்தால் உரிய இடத்திற்கு சென்றடையலாம். தகவல்களைப் பூரணமாக மண்டைக்குள் பதித்துக்கொண்டேன். சன நெரிசலில் நுழைந்து லாச்சப்பல்ப் பளிங்கு மின் தூக்கிக்குள் பாய்ந்து ஏறிக்கொண்டேன். மிகச்சுறு சுறுப்புக்காக இயங்கிக்கொண்டிருந்த லாச்சப்பல் ரயில் நிலையத்தின் கீழ்த்தளத்துக்குச் செல்லவென அருகருகே பொருத்தப்பட்டிருந்த இரண்டு இராட்சத மின்தூக்கிகளும் தமிழருக்காகவென சிறப்பு சேவையில் ஈடுபடுகின்ற எண்ணத் தோன்றியது.
‘புசு புசு’ வென்று வளைக்குள் செல்லும் எலியைப் போல மக்கள் கைகளில் பொலுத்தீன் பைகளுடனும், சிறிய தள்ளுவண்டிகளுடனும் தட்டு முட்டுப்பட்டு ஏறினர். சற்று முன்னர்தான் எலுமிச்சை மற்றும் நாட்படாத தேனில் செய்யப்பட்ட வாசனை மிக்க நீர்மம் கொண்டு திருத்தமாக சுத்திகரிக்கப்பட்ட மின் தூக்கியின் சுகந்த வாசனையை கறி வேப்பிலை, வேப்பெண்ணையின் நாற்றம் வெற்றிகரமாக முறியடித்து, சிலநிமிடங்களில் சகிக்க முடியாத துர் நாற்றத்தை அள்ளி வீசியது. மக்களை ஏற்றுவதற்கான மின் தூக்கியின் பரும அளவு மீறி
கதவுகள் அடைபட மறுத்தன. உந்தி மேல் செல்வதற்கு மின் தூக்கியின் பொத்தானை அதன் அருகில் நின்ற மூதாட்டி தன் தளர்ந்த விரல்களால் அழுத்திப்பார்த்தாள். கதவுகள் அடைபட மறுத்தன. தொடர்ந்து சிவப்பு நிறத்தில் பொத்தானின் சுட்டுக்குறி மின்னி மின்னி அனுங்கியது. உள்ளே இருந்தவர்கள் சினந்துகொண்டு
ஏதேதோ மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகளை பிரயோகித்துக்கொண்டு நின்றனர். கைகளில் கனமான பொருட்களை வைத்துக் கொண்டு கதவுடன் மரப்பல்லி போல ஒட்டி நின்ற வயதானவர் ஒரு எட்டு வைத்து வெளியேறினால் மின் தூக்கி தன் போக்கில் மேலே செல்லும். அவர் அசைவதாக தெரியவில்லை. திருமணமாகி சில வாரங்களே ஆன இளமையின் வனப்பு சற்றும் குறையாத தமிழ்ப்பெண் ஒருத்தி தன் சோடி மார்புகளும் எனது நெஞ்சோடு உரசும் படியாக நெருங்கி நின்றாள்.
மின் தூக்கியில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அவை அதிக அழுத்தத்துடன் என் நெஞ்சைப் பதம் பார்த்தன. அவள் மிகச்சாதாரணமாக தனது உதடுகளின் மேலே கசிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தாள். எனது சுவாசக்காற்று அவள் மீது சிந்த முன்னறிவிப்பின்றி என்னிடமிருந்து தன்னை விடுவித்து விடுவாள் என்பதற்காக என் உயிர் மூச்சை சில நிமிடங்கள் நிறுத்தி மூச்சை எனக்குள்ளே அழுத்தி வைத்திருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவது மின் தூக்கி தரையைத்தட்ட அதன் கதவுகள் அகண்ட பறவையின் சிறகுகள் போல விரித்து திறந்தன. இதில் நின்றவர்கள் தள்ளுப்பட்டு ஓடி அதில் ஏறிக்கொண்டனர். என்னோடு ஒட்டி நின்ற பெண் சற்று விலகித் திரும்பி தன் படர்ந்து விரிந்த முதுகை எனக்கு
காட்டியபடி தனது தொலைபேசியில் படவரியைத் திறந்து தனக்குப்பிடித்த சமையல், முக அலங்காரக் காணொளிகளில் தனது முகத்தை பதிந்திருந்தாள். அவள் தொலைபேசியைக் கை மாற்றும் போது மறு கையில் இருந்த நீல நிறப் பொலுத்தின் பையுள் நசிந்து தொள தொளத்துக் கொண்டிருந்த மாமிசம் என் கால்களில் உரசுப்பட சற்று முன்னர் அனுபவித்த அதே சுகம்.
இராட்சதப் படிகளின் வழியே பக்குவமாகக் கீழ் இறங்கினேன். என் முன்னால் வைத்தியசாலை நோக்கிச்செல்லும் மெட்ரோ ஓடுபாதை பாதாளத்தினுள் சாரைப்பாம்புகளைப்போல பிணைந்து கிடந்தன. அவை கரிப்பிடித்த வீட்டுப் புகைக்கூண்டை நினைவுபடுத்தியது. பொபினிக்குச் செல்லும் மெட்ரொவின் அறிவிப்புக் கேட்டது. இன்னும் இரண்டு நிமிடங்களில் குறித்த இடத்தை அடையும் என ஒரு பெண் மும்மொழிகளில் நளினமாக அறிவித்தாள். அவள் இறுதியாக ஆங்கில் மொழியில் அறிவித்து முடிந்தவுடன் அதில் வந்த சில சொற்களை மூளையில் ஏற்றி உதடுகளில் போட்டு மனனம் செய்தேன். ‘சீற்றா’என்ற சொல்லுக்கு மட்டும் நல்ல கவர்ச்சி இருந்தது. அதை வாயில் சொல்லிக்கொண்டு பொபினிக்கு செல்லும் மெட்ரொவில் ஏறினேன். அவ் ஸ்பானிய வார்த்தைகளை எங்கோ கேட்ட நினைவு. அது புகழ் பெற்ற லத்தினோ பாடகர் ஹென்ரிக் கிலார்சனின் பாடல். அண்மையில் அவரது அமெரிக்க இசைநிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சியில் பார்த்திருந்தேன். திறந்த வெளி அரங்கில் “மாமா சிற்றா” என்ற சொல்லை அடிக்கடி காதல் தேன் சொட்ட அழுத்தமாக சொல்லிப்பாடுவார். அரங்கில் முண்டியடித்து, ரசித்துக்கொண்டு நின்ற ரசிகர் பட்டாளத்தினுள் தலைமுடிக்கு ஆர்ஞ்சு நிறச்சாயம் பூசிய அமெரிக்க இளம்பெண் ஒருத்தி திடிரென்று தனது ஜக்கட்டை கழற்றி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது சிவப்பு நிற மார்புக்கச்சையை சடார் என்று கழற்றி
மேடையை நோக்கி வீசி எறிந்த போது அது புகழ்பெற்ற பாடகரின் முகத்தில் விழுந்தது. அப்போது அக்காட்சியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
பாடகர் அந்தப் பெண்ணின் சிவந்த மார்புக்கச்சையையால் வியர்வையில் நனைந்த தன்பாதி நிர்வாண உடம்பை அழுத்தித் துடைத்துவிட்டு மீண்டும் வெறி கொண்ட ரசிகர்களை நோக்கி எறிந்தார். பின்னர் “மாமா சிற்றா ஓமக்க ஸியா ஸியா” என்று உச்சஸ்தாயில் பாடலைப்பாடி முடிப்பார். மெட்ரொ நிலையத்தில் பெண் ஸ்பானிய மொழியிலும் கூறுகிறாள் என்பது அழுத்தமாக மனதில் பதிய அப்பாடலை மீண்டும் முணுமுணுத்துக்கொண்டு தரிப்பிடங்களைச் சரியாகக் கவனித்து எண்ணிக்கொண்டு வந்தேன். அங்கிருந்து வழித்தேடல் செயலி காண்பிக்கும் வழியைப்பிடித்து இறுதியாக பல அடுக்குமாடிகுடியிருப்புகளை தாண்டி அந்த அஞ்சல் நிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அங்கிருந்து வேகமாக நடந்து சரியான முகவரியை அடைய இரண்டு ஏழு நிமிடங்கள் தாமதமாகி விட்டது. பதட்டத்தோடு கடைத்தெருவை அடைந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம். ஆசிய நாட்டவர்,பிரெஞ்சு,ஆபிரிக்கர் என பிரித்தெடுக்க முடியாத அளவுக்கு வாடிக்கையாளர்கள். கடையின் வலது பக்கம் கும்பலாகக் குவிக்கப்பட்டிருந்த றம்புட்டான்களையும், மாம்பழப்பெட்டிகளையும் வாங்குவதில் மக்கள் தீவிரமக இருந்தனர்.
துடிப்பான இளைஞன் ஒருவன் கையில் சில செரிப்பழப் பெட்டிகளை எடுத்து தலைக்கு மேல் உயர்த்தி ‘மேடம் “மெடம் மிஸியூ வியாந் அறிவே”வியாந் அறிவே’ என்று கூவிக்கூவி அங்குமிங்கும் நடந்து திரிந்தான். நிழற்குடையோடு பொருத்தப்பட்டு இருந்த மறுபக்கம் பலகைத்தட்டில் மரவள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்களை
வாங்குவதில் இன்னும் பலர் போட்டி போட்டுகொண்டு இருந்தனர். அவர்களின் சத்தங்களுக்கு இடையில் அங்கு வேலை செய்யும் தமிழ் பெடியன்களின் சத்தம் பெரிதாக கேட்டது. கடையின் பிரதான
வாயிலில் சந்தண ஊதுபத்தியின் நறுமணம் கமகமக்க மஞ்சள் தெளித்த சிமெந்துத்தரையில் சிதறிக்கிடந்த தேசிக்காயை மிதித்துவிடாமல் படியேறி கடைக்குள் இறங்கினேன்.
“வாரத்தின் ஏழு நாட்களும் பொபினி மக்கள் கடை தனது சேவையை வழங்கும்” என கொட்டை எழுத்தில் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அறிவித்தலை நின்று நிமிர்ந்து வாசித்து விட்டு சனக்கூட்டத்தில் மெல்ல உள்ளே நகர்ந்து இன்னுமொரு ஆ3 அளவிலான வெள்ளைக்காகிதத்தில் கருப்பு நிற மையால் எழுதப்பட்ட விளம்பரத்தை வாசிக்க முற்பட்டேன். என் பின்னால் இருந்து ஒருவன் “அண்ணே சுறுக்கா நகர்ந்து வழி விடுங்க அக்கா உள்ளி இஞ்சி எடுக்கட்டும்” என்றான். அந்த இளம் பெண்ணுக்கு வழியை விட்டு மீண்டும் அதில் எழுதப்பட்டு இருந்த விளம்பரத்தை வாஞ்சையோடு வாசித்தேன். வேலைக்கு ஆட்கள் தேவை! இருநூறு யூரோவுக்கு மேல் பொருட்களை வாங்கினால் பொங்கல் பானை இலவசம்! என்ற அறிவித்தல் கண் முன்னே வந்து நின்றது. தையல் வேலைக்கு பெண்கள் தேவை, இரண்டாவது அறிவித்தலுக்கு உரிய ஆள் நானே. சரியான கடைக்கு வந்தேன். புள்ளையாரப்பா என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு சிறிய பதட்டத்தோடு சன
நெருக்கத்துக்குள் நுழைந்து கடையின் கவுண்டரை அடைந்தேன். நிமிர்ந்து பார்த்தேன். எவரும் என்னைப்பார்ப்பதாக தெரியவில்லை. சாராயப் போத்தல்களை அடிக்கி வைத்திருக்கும் பக்கம் நகர்ந்து
நின்றேன். தொட்டால் ஒடிந்து விழும் அளவுக்கு உடலை ஒத்த மனிதன் இரும்பு றாக்கையில் சாய்ந்து நின்றான்.
அவனைப்பார்த்தால் இங்கு வேலைசெய்ப்பவன் போன்ற எடுப்பு. மெல்ல கதையைக்கொடுத்தேன்.
“அண்ணே நான் சிவதாசன் அனுப்பின ஆள் மஞ்சப்புறா நிக்கிறேரா” காதைக்குடைந்துகொண்டு மஞ்சபுறாவா ? அவன் பின்னேரம்தான் வருவான். என்ன விசயமா வந்திருக்கிறீர் ?
“வேலை இருக்கெண்டு சொன்னவங்க அதுதான் கேட்டுப்பார்ப்போம் எண்டு வந்தனான்” என்றேன். அந்த மனிசன் என்னை ஏற இறங்கப்பார்த்துவிட்டு “தம்பியேன் கொஞ்சம் இங்கால விலகி நில்லுங்க சாமான் வருகுது’ என்கிறார். நான் விலகி நிக்க “தம்பி சத்துப்பொறுங்க பத்ரோன் வருவேர் பின்ன கதைங்க” என்கிறார். தயக்கத்தோடு ஒதுங்கி நின்றேன். அவன் ஒரு சிகரெட்டை பற்ற வைப்பதற்காக கடையின் ஒதுக்குப்புறமாக
சென்றுவிட்டான். குலாப்ஜாம் கேட்டு இரண்டு பிரெஞ்சுப்பெட்டைகள் வந்து நின்றார்கள். ஒரு வயதான ஐயா குலாப் ஜாமுக்கு பதிலாக வேறு எதோ பொருளை கொண்டு வந்து மேசையில் வைக்க நெற்றியில் திரு நூரு அடித்த ஒருவன் கண்டபடி அந்த அய்யாவைத் திட்டி தின்றுகொண்டிருந்தார்.
“பென்ஷனுக்குப் போற வயசில வந்து பழசு எங்கட உயிரை வாங்குது. ஐயா போங்க அங்காலப்பக்கம் லிவரேசன் வந்திருக்காம் போய் அதை இறக்கி ஸ்ரோருக்குள்ள அடுக்குங்க” என்று அதிகாரத்தொனியில் கட்டளையிட்டார். அந்த வயதான ஐயா கூனிக்குறுகி அந்த இடத்தைக்காலி செய்தார். எனக்கு மனசுக்குள்ளே
அச்சம் முளைக்க ஆரம்பித்தது. இவ்வளவு கெடுபிடிக்குள்ளே எப்படி வேலை செய்வது? முதலில் வேலை கிடைக்க வேண்டுமே. நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். மஞ்சப்புறா இதில் எங்காவது நிற்பான். பெயருக்கு ஏற்ற உருவத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். நீண்ட நேரம் நான் ஒரே இடத்தில் நிற்பதை அவதானித்த ஒருவர்
விறு விறுவென்று என்னைத்தேடி வந்தார். அந்த ஆள் கழுத்தில் புலிச்சின்னம் பொறித்த மொத்த முறுக்குச்சங்கிலி ஜொலித்துக்கொண்டு கிடந்தது. நல்ல சிவாலை. மீசையும் தடிப்பாக வைத்து வெள்ளை நிற சேட்டும் அணிந்துகொண்டு என்னைத்தேடி வந்து கரகரத்த குரலில்
“என்ன தேடுறீங்க? சாமான் ஏதும் எடுக்க வந்தனீங்களே? என்று விசாரித்தார்.
“மஞ்சப்புறா வேலை இருக்கு இங்க வரச்சொன்னவர்” என இழுத்தேன்.
“வேலை வேணும் எண்டால் நேர அங்க வந்தல்லவா கேக்க வேணும் இப்பிடி வழி நடுவில நிண்டு வாற சனத்துக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று குறு குறுத்தார். நான் பதிலெதுவும் கூறாமல் பம்மிக்கொண்டு நின்றேன். “தம்பி இங்கால வாரும்” என்கிறார் சற்று நடந்து அரிசி மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் மறைவில்
வைத்து “ உம்மட பேர் என்ன? புலேந்திரன்…..
மட்டை இருக்கா ? மட்டையோ? எனக்கு ஒன்றும் புரியவில்லை மீண்டும் விசா இருக்கா ? என்று அழுத்தமாக கேட்க பையில் இருந்து ஒரு காகிதத் துண்டை எடுத்து நீட்டினேன். முதிர்ந்த இராணுவ அதிகாரி சோதனை செய்யும் தோரணையில் காகிதத்தை புரட்டிப்புரட்டிப்பார்த்துவிட்டு “ம்ம்ம்ம்ம் ஒரு வருஷப்பேப்பர் பிரெஞ்சு கொஞ்சம் கதைப்பீரா” என்று கேட்க ம்ம்ம்ம்ம்ம்…… என்று தலையாட்டினேன். அவர் மூஞ்சியை ஒரு போக்கில் வைத்துக்கொண்டு “இந்த விசாவோட வேல செய்ய ஏலாது போலீஸ் பாஞ்சால் எண்பதாயிரம் யூரோ கட்ட வேணும் சரியான ரிஸ்க் எடுத்துத்தான் உம்மை வேலைக்கி எடுக்க வேணும். சம்பளம் ஆரம்பத்தில அறு நூறு
தரலாம் பிறகு உம்மட வேலையைப்பார்த்து கூட்டிடலாம்”
லீவு ?
“என்ன தம்பி வேலைக்கு சேர முன்னம் லீவு கேக்கிறீர் சரியான வேலைக்காரன் தான் போரும் என்கிறார். மஞ்சப்புறா அனுப்பின ஆள் எண்டபடியால் தான் வேலைக்கி எடுக்கிறன்”. சரி உம்மட இந்த பேக்க ஸ்டொருக்குள்ள வச்சுப்போட்டு வெளியால லீவரேசன் இருக்கிறாங்க அவங்களோட போய் வேலையை செய்யும் என்று கட்டளையிட்டார். துவக்கு வெடியாக திரும்பிப் பார்க்காமல் களஞ்சிய அறையைத்
தேடி ஓடினேன். உள்ளே சென்று என்னுடைய பையை வைத்துவிட்டு வேகமாக பார ஊர்தி நிறுத்தப்பட்டு இருக்கின்ற இடத்தை நோக்கிச்சென்றேன். குளிரூட்டி அடைக்கப்பட்ட மீன் பெட்டிகளை சிலர் உயரமான பெரிய ஊர்தியில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் தள்ளுவண்டிகளில் அதை பக்குவமாக அடுக்கிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த இடத்தை சரியாக அடைந்த போது யாரும் என்னை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வெளியில் புகைத்துக்கொண்டு நின்ற ஒல்லி மனிசன் என்னை நெருங்கி வந்து மற்றத்தொழிலாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பிரதானி ஒருவன் என்னிடம் சொன்னான். “அண்ணே மேலே இருங்கோ சட சுட எண்டு பெட்டிகளை தள்ளுங்க கவனம் பின்னாடி உள்ள பெரிய மீன் பெட்டி சரிஞ்சால் கால் போயிரும் கவனமா செய்யுங்கோ” என்று பொறுப்புடன் சொன்னான். நான் அவனது கட்டளைகளை நுணுக்கமாக செவிமடுத்து செயற்படுத்தினேன். இடுப்பு வலி எடுத்தது. நிமிரக்கூட முடியவில்லை. வலியை வெளிக்காட்டி எனது வேலை அனுபவத்தை பிடித்துக்கொடுக்க விரும்பவில்லை. வியர்வை நெற்றி வழியாக வழிந்து உடலை நனைத்தது. உள்ளாடை ஈரம் படித்து தொடை இடுக்குகள் வெட்டி வேதனையை ஏற்படுத்தத்தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக எனது தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதை தொட்டுப்பார்க்கக் கூட முடியவில்லை.
“அண்ணே வேல நேரத்தில ரெலிபோனோட பத்திரோன் கண்டால் பேசிப்போடுவேர் எல்லாம் சீ சீ டீ வி கமராவில் பாத்துக்கொண்டிருக்கும் ஆள்” என்று கண்டிப்புடன் சொல்ல நான் மாடு போல தலையாட்டினேன்.
யாராக இருக்கும் ? பிடிபடவில்லை. வேலையில் தீவிரமாக இயங்கினேன். நேரம் மதியம் பன்னிரண்டை எட்டிக்கொண்டிருந்தது. வயிற்றில் பசி எடுக்க மெல்ல தலை சுற்ற ஆரம்பித்தது. அப்போது
தெய்வாதீனமாக இன்னுமொருவன் மேலே ஏறி உதவிக்கு வந்தான். என்னுடைய சப்பாத்து குளிர் நீரில் நனைந்து காலுறைகள் குளிர ஆரம்பித்தன. ஒரு வழியாக ஊர்தியில் இருந்து மீன் பெட்டிகள்
அனைத்தும் தரையில் இறக்கப்பட்டு வண்டியை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். நான் கீழே இறங்கினேன். உடல் முழுவதும் வியர்த்துகொண்டியது. தலை சுற்றி வயிற்றைப் புரட்டிக்கொண்டு வந்தது. இப்பிடியே வீட்டுக்கு ஓடி விடுவோமா? என்று உள் மனம் சொன்னது. அப்போது மீண்டும் எனது தொலை பேசி சினுங்கியது.
நான் அங்கிருந்த மரக்கதிரையில் அமர்ந்து தொலைபேசியைத் திறந்தேன்.
ஹலோ
புலேந்திரனே ? ஓம் நீங்க ? நான் நேரியன்…. “சிவதாசு உம்மட நம்பர் தந்தவன். இப்ப எங்க நிக்கிறீர்”?
“டீ சொலி கொஞ்சம் லேட்டா போச்சு வேலை முடிஞ்சு வர வேற ஒரு அலுவல் வந்திற்று அதுதான் அங்க வர ஏலாமல் போச்சு சரி அங்க போனீரா” ?
“ஓம் அங்கதான் நிக்கிறன்” நெற்றியால் வடியும் நீரை துடைத்துக்கொண்டு சொன்னேன்.
“ஒண்டுக்கும் யோசியாதேயும் எல்லாம் வெல்லலாம் ம்ம்ம்ம்ம் விளங்குதே?”
ம்ம்ம்ம்ம்ம்
“சரி இன்னும் அரை மணிக்குள்ள நான் அங்க நிப்பன் வர இல்லை என்று கோவியாதேயும்.” என்று சொல்லி தொலைபேசியை துண்டித்த போது மனம் சற்று அமைதியடைந்து. அழைப்பில் வந்து பேசியது மஞ்சப்புறாதான் என்பதை உறுதி செய்தேன். “ம்ம்ம்ம்ம் அப்போ மஞ்சபுறாவுக்கு இன்னுமொரு பெயர் இருக்கு”. ஐஸ் தண்ணீர் கால்களை விறைப்பாக்கிவிட்டது. நகங்களின் இடுக்கில் ஊசியால் துளைத்தது போல விரல்கள் கடுத்தன. மெல்ல எழுந்து ஊர்தி நிற்குமிடத்துக்குப்போனேன். சற்று அமர்ந்துவிட்டெழுந்த பின்புதான் இடுப்பு வலியை உணர்ந்தேன். உடலைப் பாதியாக மடித்துக் கட்டி அவிழ்த்துவிட்டது போன்ற உணர்வு. என் வாழ் நாளில் இவ்வளவு வேகமாக வேலை செய்ததில்லை. அப்போது அந்த வயதான ஐயா தண்ணீர் போத்தலோடு என் முன்னால் தோன்றினார். ஐயாவிடம் நன்றி சொல்லி நீரைப்பருகினேன்.
“தம்பி ஊரில எந்த இடம்”?
புன்னாலைக்காட்டுவான்…
பிரான்சுக்கு வந்து வந்து கன நாளில்லை போல?
ஆறு மாசம்….
“நினைச்சன். தம்பி இந்த நாய் விழுவாருக்கு உப்பிடியெல்லாம் வேல செய்து காட்டாதேயும் பின்ன முறிச்சு எடுப்பானுகள் வேலைக்கி வந்திற்றிர் கொஞ்சம் புத்தியாய் நடந்து கொள்ளும்” என்கிறார்.
நான் சரிங்க ஐயா என்று சொன்னேன். பின் என்னுடைய அறியாமையை எண்ணி நொந்துகொண்டேன். ஒரு தொலைபேசி அழைப்பு. ஜீன்ஸ் பைக்குள் தொலைபேசி துடித்து அடங்கியது. அது மறுபடியும் மஞ்சபுறா. தலையை நிமிர்த்தி வீதியைப்பார்த்துக்கொண்டு தொலைபேசியின் தொடு திரையை அழுத்தினேன். எதிரே நாற்பது வயது மதிக்கத்தக்க மனிதர். பிதிங்கிய கண்கள். மூக்குக்கு அடியில் மசுக்குட்டிபோல ஒரு தடித்த
மீசை. திருத்தமாக சீவி விடப்பட்ட தலை முடியின் இடையிடையே வெள்ளிக்கம்பிகள் போல நரை முடிகள்
மினுங்கிக்கொண்டிருந்தன.சற்று உயரமான மனிதர். நடந்துவரும் போது எங்கள் ஊர் றாத்தலடிச்சந்தி வெட்டுக் குமார் எண்ணை தெறிக்கத்தெறிக்க வீச்சு ரொட்டி வீசுவதைப் போல மஞ்சப்புறா வலது காலைத் தூக்கி விசுக்கி விசுக்கி நடக்க அவரது கால்களுக்குள் இருந்து மெல்லிய தூசிப்படலங்கள் சுழன்றெழுந்தன.
சற்று நெருங்கி வந்து வெற்றிலைக்காவி படிந்த பற்களால் என்னைப் பார்த்துச்சிரித்தார்.
தோளில் தட்டி “ஒண்டுக்கும் யோசியாதேயும் அதோ லாபோஸ்ட். அதுக்கு பின்னாடி உள்ள ஒரு அப்பார்ட் மெண்டிலே தான் நான் இருக்கிறன் எப்பவும் நீர் வீட்டுக்கு வந்து போகலாம். இப்ப கடைக்குள்ள போயி வடிவா கதைச்சு விடுறேன். எல்லாம் வெல்லலாம்” என்று சொல்லி மீண்டும் கடைவாய்ப்பற்கள் தெரிய
ஒரு விலங்கு போல சிரித்தார். மஞ்சப்புறாவின் கடைவாய்ப்பற்களில் ஒன்று தங்கப் பல். அன்று வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேர கடிகாரம் நள்ளிரவை காட்டிற்று. தினமும் இவ்வாறு வேலைக்கு சென்று வருவது
சில்லெடுத்த வேலை. பற்களைக் கடித்துக்கொண்டு இரண்டு வாரங்கள் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் தொலைபேசியில் மஞ்சப்புறாவை அழைத்தேன்.
எனக்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்துக்கொடுக்க முடியுமா? என்று கேட்ட போது மஞ்சப் புறா
மறுப்பின்றி தனது வீட்டின் ஒரு அறையில் வந்து இருக்கும்படி சொன்னார். மஞ்சப் புறா ஊரிலிருந்து தனது மனைவி பிள்ளைகளை ஸ்பான்சர் செய்வதற்காக பிடித்த வாடகை வீடு அது. அவர்கள் ஊரில் இருந்து இங்கு வர குறைந்தது எட்டுப்பத்து மாதங்கள் ஆகும் என்று ஏற்கனவே அவர் எனக்குச் சொல்லியிருந்தார். அடுத்த நாளே
வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டு மஞ்சப்புறா வீட்டில் வந்தமர்ந்தேன். நான் காலையில் எட்டுமணிக்கு வேலைக்கு வந்துவிடுவேன். வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கியிருந்தார்கள். மஞ்சப்புறா மதியச்சாப்பாடுக்கு சோறோ கறியோ சமைத்து வைத்துவிட்டு சென்றுவிடுவார். தினமும் அவர் வேலை
அலுப்பென்ற பெயரில் ஒரு கெனிக்கன் பியரை வாங்கி அருந்திவிட்டு வருவார். வரும் வழியில் எங்களது கடையிலும் நின்று கொஞ்சம் தெளிவாக அலட்டிவிட்டு ஒரு பியர் போத்தலோடு அவர் நடையைக்கட்ட நானும் கடையை விட்டு வெளியில் வருவேன். தினமும் அங்கிருந்து ஏதாவது கதைத்துக்கொண்டு வீட்டுக்கு வர சின்ன ஆறுதலாக இருக்கும். சில மாதங்கள் கடக்க மஞ்சப்புறாவுக்கு அரசாங்கத்திடமிருந்து கடிதம் வந்திருப்பதாக
என்னிடம் கூறினார். உங்களது குடும்பத்தை பிரான்சுக்கு அழைத்துவருவதற்காக நீங்கள் அளித்த மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதுதான் கடிதத்தின் சாராம்சம். அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை. உடனடியாக மனைவிக்கு வாட்ஸாப்பில் அழைத்து விடயத்தைச் சொன்னபோது
“அத்தான் கட்டு நாயக்காவுக்கு பிளைட் ஏற வரேக்க சாறியே ரவுசரே போட்டுகொண்டு வாறது” என்று மனைவி கேக்க “புண்டவை ரெலிபோனை. பிறகு எடுக்கிறன்” என்று சினந்துகொண்டு தொலைபேசியை துண்டித்தார். நான் குபீரென்று சிரித்துவிட்டேன். “தம்பி பாத்தியே கதையட வடிவ இவளுகள் இப்பிடித்தான் இப்பதான்
மனுவே கிடைச்சு இருக்கு இனி அவனுகள் அக்சப் பண்ணி வர ம்ம்ம்ம்ம்ம்…. அதுக்குள்ள இவள் வேற ஜீன்சா சீலையா கடுப்புக்கதைவேற…. “தம்பி இரு வாறன்” ஒரு பெக் போட்டுவிட்டு என்று
அறைக்குள் போனவர் திரும்பி வரவில்லை. நான் குளித்துவிட்டு சோபாவில் அமர்ந்து சன்னல் வழியே இலக்கில்லாமல் எதையோ பார்த்துக்கொண்டிருந்தேன். அதிகாலை வழமைக்கு மாறாக எழுந்த மஞ்சப்புறா என்னிடம் வந்து “தம்பி இரவுக்கு இக்கியா ஸ்டோர் ரூமுக்கு போவோம் பெரிய கிங் கட்டில் வாங்கி அறையை தயார்படுத்த வேணும். பிள்ளைகள் வளர்ந்து பெரிய பெடியளாகிட்டாங்க கொஞ்சம் பிரைவேசி வேணும்
தானே? உந்த பிரிட்ஜ் இருக்கே அது அளவில்ல கொஞ்சம் பெருசா வாங்க வேணும் டீ பிரிசரோட சேர்த்து ரெண்டு மூண்டு கிலோ இறைச்சி வகையை போடவே நிறைந்து விடுகின்றது என்கிறார். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. பிரைவேசி யாருக்கு இவருக்கோ பிள்ளைகளுக்கோ? நான் தலையை ஆட்டிவிட்டு வேலைக்கு
கிளம்பிவிட்டேன். அடுத்த நாள். பிற்பகல் கட்டில் வாங்க இருவரும் கடைக்குப்போனோம். திட்டமிட்டபடி ரயிலேறி எதிரெதிரே இருக்கையில் அமர்ந்துகொண்டு நீண்ட நாட்கள் மனதுக்குள் போட்டுக்குடைந்து கொண்டிருந்த அந்த சந்தேகத்தை எப்படியாவது கேட்கலாம் என்று எண்ணி மெல்லப் பேச்சைக்கொடுத்தேன்.
“அண்ணே உங்கள மஞ்சப்புறா எண்டு கூப்பிடுறாங்கள் ஏன்” ? என்று தயக்கத்தோடு கேட்டுவிட்டு அவரது முகத்தைப்பார்த்தேன். அவர் நிமிர்ந்து கூட என்னைபார்க்கவில்லை. தனது தொலைபேசியில்
எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து கேசுவலாக முகத்தை நிமிர்த்தி தனது முரட்டுத்தாடியை விரல்களால் கோதிக்கொண்டு “அது புலனாய்வுப்பிரிவில் எனக்கு பொட்டர் வைச்ச ரகசிய குறியீட்டுப் பெயர் தம்பி. எப்பவோ பொட்டர் வச்ச பேர். இப்பவும் என்னோட ஒட்டிக்கொண்டே வருது”
என்றார். எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிய தொடர்ந்து பேச்சைக் கொடுத்தேன். நீண்ட நாட்களாக அவரும் நிறைய கதைகள் சொல்வதற்கு காதுகளை தேடிக்கொண்டு இருப்பது போல அவரது உடல்மொழி. மடிந்து கிடந்த சேட் கொலரை நிமிர்த்திவிட்டபடி தனது இயக்கக்கதையை சொல்ல ஆரம்பித்தார்.
“தம்பி ஆண்டு நினைவில்லை”. ஒரு டிசம்பர் மாதம் கிறிஸ்மசுக்கு அடுத்த நாள் என்று நினைக்கிறேன். இப்பவும் நினைவு இருக்கு வீட்டுக்கு சொல்லாமல் அய்யாவுடைய சேவிஸ் செய்த றழி சைக்கிளை எடுத்துக்கொண்டு மணியந்தோட்டத்தை நோக்கி வேகமாக சைக்கிளை மிதித்தேன். எதிர்க்காற்று நெஞ்சிலறைந்தது. கண்களில் இருந்து நீர் தெறித்துக்கொண்டிருந்தது. அது அழுகை இல்லை. கொழும்புத்துறையை அண்மித்த போது வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். ஏனென்றால் விடிகாலைப்பொழுது காவல் பணியில் இருந்த இயக்கபெடியங்கள் சந்தேகத்தில் சுட்டுத்தள்ளி விடுவார்கள் என்ற பயம். அந்த நேரம் நினையாப்பிரகாரம்
இயக்கப்பாட்டு ஒன்று சூழலுக்கு ஏற்ற மாதிரி வாய்க்குள் சிம்பிளாக நுழைந்தது.
கடலதை நாங்கள் வெல்லுவோம் கடற்புலி நாங்கள் ஆளுவோம்…… கடலுக்கு எதிர்ப்பக்கம். விதியின் மறு கரையில் முட்கம்பிகளாலும் தகரப் பேணிகளாலும் உருவாக்கப்பட்ட கடற்புலிகளின் பாதுகாப்பு அரண்கள் கொழும்புத்துறைச்சந்தியில் இருந்து மணியந்தோட்ட எல்லை வரை நீண்டிருந்தது. அரண்களுக்கு பின்னால் உயர்ந்து வளர்ந்த தென்னந்தோப்புக்கள். மண் மூட்டைகளின் இடைவெளிகளில் துவக்குகளின் குழாய்கள் தலைகாட்டின. காற்றில் மிதந்து மிதந்து தென்னோலைகள் இசை வழங்க உச்ச ஸ்தாயியில் பாடிக்கொண்டு பெடலை மிதித்தேன். யாரும் என்னுடைய பாடலைக்கேட்டு இருப்பார்களோ தெரியாது. தெருவில் காவல்
காத்துக்கொண்டிருந்த நாய்கள் கேட்டு அதற்கு எதிர்வினைகள் செய்தன. மணற் புதையல்களை கடந்து மணியந்தோட்டம் பன்னிரண்டாங்குறுக்கை அடைந்தேன். கடற்புலிகளின் பாதுகாப்பு அரண் மதிலை முட்டி ஐயாவுடைய சைக்கிள் முன்னால் நின்றது. உள்ளே இருந்து சில ரோர்ச் லைட் வெளிச்சம் முகத்தைப் பதம்
பார்த்தன. இந்த பேஸில்தான் சூசை இருப்பதாக ஒரு இயக்கப்பெடியன் முன்னர் சொன்னதாக நினைப்பு. துப்பாக்கிகளை சுமந்து உள்ளிருந்து வெளியே வந்த சில இயக்க உறுப்பினர்கள் விபரத்தை கேட்க
“நான் தமிழீழத்துக்காக போராட வந்திருக்கிறேன்” என்று சூசைக்கு கேட்கும் படியாக கத்தினேன். அதில் உயரமானவன். “நாங்க அருகில தானே நிக்கிறோம் ஏன் பேய் மாதிரி கத்தி சனத்த எழுப்புறீங்க” என்று சொல்லிக் கடிந்து கொண்டான். நாய் இயக்கத்துக்கு சேர்ந்த பின்பு சில மாதங்கள் வீட்டுக்காரர்
எல்லாரும் என்னைத்தேடினார்கள். நான் கிடைக்கவில்லை. ஏற்கனவே என்னைப்பற்றி எந்த விபரமும் என் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டாம் என்று தலைவர் மீது சத்தியமாக சொல்லி இருந்தேன். ஐயாவுடைய றழி சைக்கிளை காணவில்லை என ஐயா காவல் துறைப் பணிமனையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இச்செய்தி செய்தி ஊர் முழுவதும் தீயாய்ப் பரவியது. ரயிலில் எங்களது இருக்கைக்கு அருகில் சில பயணிகள்
வந்தமர்ந்தனர். பின்பு நான் அவரை இடை மறித்து “அப்ப அண்ணே வீட்டுக்காரர் உங்களைத்தேடயில்லையா?” என்றுகேட்டேன். புருவத்தை உயர்த்தி இல்லை. என்றார் ஓ……. அப்படியா என்று தொடர்ந்து அவரை பேச விட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். “நான் வாரக்கணக்கில் வீட்டுப்பக்கமே செல்லாமல் கோயிலாக்கண்டியில் தங்கி விடுவதுண்டு. அங்கதான் நான் விரும்பின பெட்டை சவுந்தலா சித்திக்காரியோட இருந்தாள். நான்
அவளை விரும்புவது ஐயாவுக்கு அது பிடிப்பில்லை. எங்களை விட குறைஞ்ச சாதிக்காரராம். பெட்டையோட இங்க வந்தால் இரண்டு பிணங்கள் வாசலுக்கு குறுக்கா கிடக்கும் என்று சொல்லிபோட்டேர். நான் அங்கதான் நிப்பன் என்று அவருக்கு தெரியும். அதால அவர் என்னைத்தேடவில்லை. ஆனால் ஐயா செய்த எழிய வேலை
இருக்கே வாழ் நாளில் என்னால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத கேடு கெட்ட வேலை” என்று சொல்லிவிட்டு பெருமூச்சொன்றை மெதுவாக விட்டு ஆறுதலாகினார். “றழி சைக்கிள் திருட்டுப்போய்விட்டதாக
காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் பின் மணியந்தோட்டத்தில் றழி சைக்கிள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதை இரவிரவாக திருடிச்சென்றது நான் தான் என்ற விடயத்தை காவல்துறை கண்டுபிடித்து ஐயாவிடம் சொல்ல கோபம் கொண்ட ஐயா என்னை வாயில் வந்த தூஷண வார்த்தைகளால் நிந்தித்தார். கேஸை வாபஸ் வாங்கவில்லை. காவல்துறையினர். இது தங்களது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விடயம் என்று சொல்லி சைக்கிளை ஐயாவிடம் ஒப்படைத்துவிட்டனர். பின்னர் இயக்கமும் என்னை
விசாரணைக்கு அழைத்து பொறுப்பாளராக இருந்த பால்றாஜ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியது.
“இயக்கத்தில் இணைய விரும்பினால் நேரடியாக சொன்னாலே எங்களது ஜீப் வந்து உம்மை ஏற்றிக்கொண்டு சேர்த்திருக்கும் ஏன் இப்படி நாய் வேலை செய்தனீர்?
என்று பால் ராஜ் கேட்ட போது கொட்டிலில் நெஞ்சளவு உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பஞ்சிங் மூட்டையில் தொங்கிக்கொண்டிருந்த மெலதிக துண்டுக் கயிற்றில் தூங்கிச் செத்துவிடலாம் என்று தோன்றியது. அப்போது தான் முதன் முதலாக எனது பெற்ற தந்தையை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டினேன். இந்தப்பிரச்சினைக்கு பின்னர் இயக்கத்தில் இருந்து வெளியேற எள்ளளவும் விருப்பமில்லை. அதற்குக்காரணம் ஊரிலுள்ளவர்களாலும், சொந்தங்களாலும் நான் அடைந்த அவமானம் தான். அந்த நிகழ்வுக்கு பின் ஒரு நாள் கூட ஊருக்கு ஊர் எல்லையை மிதித்ததில்லை. ஒரு முறை பாசையூருக்கு இயக்க
அலுவலகப் போன நேரம் அம்மா சின்னக்கடையில் முரல் மீன் வாங்கிக்கொண்டு நிமிர்ந்த மனிசி என்னைக்கண்டு மீனை வீதியிலே தூக்கி வீசி விட்டு கத்திக் குளறி “வீட்ட வாடா ஐயா பக்க வாதம்
வந்து கட்டிலில் படுத்த படுக்கையாக் கிடக்கிறேர் ஒருக்கா வந்து பார்த்துவிட்டுப்போடா” என்று பிடிவாதம் பிடிக்க எனது தோளில் இருந்த அம்மாவுடைய கையை நான் விலக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை முறுக்கிக்கொண்டு மறைந்துவிட்டேன். பின்னர் எனது திறமையையைக் கண்டு பிடித்து கடற்புலிப் பிரிவிலிருந்து புலனாய்வுப்பிரிவுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். கிளிநொச்சியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று முதன் முதலாக பொட்டம்மானை பார்க்க வாய்ப்புக்கிடைத்தது. ஆள் சரியான உயரமும் மீசையும், ஆளுக்கு வெள்ளை சேட்டு எடுப்பாக இருந்தது. நல்ல மா நிறம் அண்ணருக்கு. கொளுத்தும் வெயிலில் நல்ல கருப்புகண்ணாடி அணிந்து பிரிட்டிஷ் நடிகர் போல தோற்றமளித்தார். அப்போது நான்
புலனாய்வுப் பிரிவுக்குச் சேர்ந்த புதிய மாணவன்.
அண்ணர் எனக்கு கொடுத்த முதல் அசைமென்ட் நாச்சுக்குடா சந்தியில் இருந்து கிளிநோச்சிக்கு இயக்கத்துக்கு வந்து சேர வேண்டிய பன்றி வற்றல் திருட்டுப் பற்றிய அசைமெண்ட். நான் அதை நேர்த்தியாக செய்து முடித்துப் பாராட்டுப்பெற்றேன். நல்ல மன்னார் வெயிலில் காயவைத்த நாற்பது கிலோ பன்றி வற்றலை இயக்க பெடியன் எம்டி நைண்டி மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து நாச்சுக்குடா சந்தியில் நிறுத்தி தேநீரும், வாய்ப்பனும் உண்டு விட்டு சிறு நீர் கழிக்கச்சென்ற போது வற்றல் சாக்கு காணாமல் போயிருந்ததாக கொண்டு சென்ற இயக்கப்பெடியன் கிளிநோச்சி பணிமனையில் வைத்து வாக்குமூலம் கொடுத்திருந்தான். திருடியது யார் ? திருடப்பட்ட சூழல் அனைத்தையும் வைத்து விசாரணையை துரிதமாக முடுக்கி
விட்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட நான்கு நாட்களுள் விசாரணையின் முடிவை தலைமையகத்துக்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எனது அறிக்கையை படித்துவிட்டு வியந்து போனார்கள். பண்டி வற்றலை திருடியது இரண்டு சொறிப் பிடித்த தாய் நாய்கள் என்ற செய்தி அவர்களால் நம்ப முடியவில்லை. தடயங்களை படு கர்ச்சிதமாக சேகரித்தேன். நாய்கள் வற்றல் சாக்கை ஐம்பது மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் சென்று இருந்தன. அதன் தடையங்கள் ஆந்தை அடைகின்ற பட்ட பாலை மரத்தின் குழி வரை இருந்தன. இறுதி வற்றல் துணிக்கையையும் நக்கிக்கொண்டிருந்த சொறி நாய்களை துரத்திவிட்டு சாக்கை மீட்டோம். வற்றல் சாக்கு
சரமாரியாக கிழிக்கப்பட்டு எங்களது கைகளில் கிடந்தது.
“இந்த ஒட்டிப்போன இரண்டு சொறி நாய்களுடைய வயிற்றில் தலா இருபது கிலோ வற்றல் எப்படி அடக்க முடியும்? ஒவ்வொரு நாயும் தலா இருப்பது கிலோ வற்றலை முழுவதுமாக தின்றால் நாயின்
எடை எவ்வளவாக இருந்திருக்கும் ? என்று மூத்த பொறுப்பாளர் ஒருவர் தனது முற்றிய புலனாய்வு மூளையால் கேட்க. இந்த வினாவை நான் சற்றும் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எனக்கு இதற்கு விடையளிப்பதில் புதிய சிக்கல் எழுந்தது. ஆனால் மஞ்சப்புறா கொக்கா ? பொறுப்பாளருக்கு மண்டை காய்கின்ற அளவுக்கு என்னுடை புலனாய்வு அறிக்கையை சில தினங்களில் வெளியிட்டேன். என்று சொல்லி முடிக்கவும் நாங்கள் இறங்க வேண்டிய ரயில் தரிப்பிடம் வரவும் நேரம் சரியாக இருந்தது. தொடர்ந்து கதையை கேட்க வேண்டும் சில கேள்விகளை கேட்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டாலும் அவருக்கு சிறிய இடைவெளியை விட்டுவிட்டு கட்டில் வாங்க காட்சி அறைக்குள் சென்றோம். வழியிலே வைத்து “அண்ணய் அந்த சிக்கலான கேள்வியை எப்படி சமாளிச்சீங்க” என்று கேட்க அதை இரவுக்கு சொல்கிறேன் என்று சொல்லி எனது வாயை அடைத்தார். உள்ளே நுழைந்தவுடன் கடையில் வலப்பக்கத்தில் போர்வைகள், தலையணைகள், வண்ண வண்ண ஜன்னல் திரைச்சீலைகள்,கால் மிதிகள் என பல தரப் பட்டவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. நாங்கள் முதலில் விறு விறுவென்று கட்டில்கள், மெத்தைகள் விற்கப்படுகின்ற அறையை அடைந்தோம். மஞ்சப்புறா என்னை
விட்டு விட்டு சற்று வேகமாக கால்களை உதறியபடி நடந்து போய் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்ட கட்டிலின் மீது போடப்பட்டு இருந்த மெத்தையின் மீது தொப்பென்று விருந்தார். ஸ்பிரிங் மெத்தை மீது பல முறைகளில் படுத்து உருண்டுகொண்டிருந்தார்.
“ சிறப்பாக இருக்கு தம்பி இருந்து பாரு” என்கிறார். “சீ சீ உங்களுக்கு பிடிச்சால் சரி தானே” என்ற போது “நோ நோ மனிசிக்கும் பிடிக்க வேணுமல்லா” என்று சொல்லிக்கொண்டு நாய் மாதிரி கட்டிலில்
இருந்து விட்டு துள்ளிக்கொண்டார். அதற்கிடையில் இரண்டு உதவியாளர்கள் வந்துவிட்டார்கள். வெடுக்கென்று எழுந்து தனது சப்பாத்தை காலில் அணிந்துகொண்டார். “தம்பி இதை கொமண்ட்
பண்ணுவோம்” என்று விட்டு வந்தவர்களிடம் அரை குறை பிரெஞ்சில் பேசினார். அவர்கள் கட்டிலில் பொறிக்கப்பட்டு இருந்த அடையாள இலக்கங்களை பதிவு செய்துவிட்டு சென்றார்கள். பின்னர்
அங்கிருந்து சில தலையணைகளையும் வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் இடத்துக்குப்போய்ப் பணத்தைச் செலுத்திவிட்டு வந்தோம். “வாரும் ம்ம்ம்ம் இன்னும் ஒரு வாரத்துக்குள் ஓடர் செய்த
அத்தனை தளபாடங்களும் வந்து சேரும் வந்த அலுவல் முடிஞ்சு. எல்லாம் வெல்லலாம்” என்று சொல்லி கையை உதறியபடி சொன்னார்.
மாதங்கள் வேகமாக உருண்டோடின. என்னுடைய விசா முடிவடைந்து புதிய விசா பேப்பரும் கிடைத்தது. மஞ்சப்புறாவுடைய குடும்பம் பிரான்சுக்கு வந்தால் தொடர்ந்து நான் இங்கே இருப்பது சாத்தியமாகாது. அவருக்கு சொல்லாமலே புதிய வசிப்பிடம் தேட ஆரம்பித்தேன். மஞ்சப்புறா தனது மனைவியையும் இரண்டு
பிள்ளைகளையும் வரவேற்க படு உற்சாகமாக இருந்தார். “மஞ்ச புறா இருக்கிற சூட்டுக்கும் , வேகத்துக்கும் மூன்றாவது பிள்ளை அடுத்த வருடமே தாயார்படுத்திவிடுவார் போல கிடைக்கண்ணே”. என்று கடையில் நின்ற இளைஞன் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரது நடை உடை பாவனையில் பாரிய மாற்றங்கள்
நிகழ்ந்துகொண்டிருந்தன. அவற்றில் உச்சகட்டமாக தலை முடியை சீராக வெட்டி பொன் நிறத்தில் வர்ணம் தீட்டி இருந்தார். இரவில் நான் வீட்டுக்கு வரும் போது அறையை பூட்டி விட்டு உள்ளே இருந்து தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருப்பார். மாதங்கள் செல்லச்செல்ல அவரது நடவடிக்கையில் எதோ ஒரு மாற்றம். மனைவி பிள்ளைகள் வருகிறார்கள். அந்த சந்தோசத்தில் திரிகின்றார் என்று நானும் எதையும் கண்டுகொள்ளவில்லை. திடீரென்று ஒரு வாரத்தின் முதல் நாள் என்னை அழைத்து நாளைக்கு விமான நிலையம் செல்ல வேண்டும் மனிசி பிள்ளைகள் வருவதாகவும் அவர்களை அழைத்து வர வேண்டும் என்னையும்
வரும்படிக்கு அழைத்தார். நான் முதலாளியிடம் அரை நாள் லீவு வாங்கிவிட்டு அவருடன் விமான நிலையம் செல்வதற்காக ரயிலேறினேன். பொபினி ரயில் நிலையம் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
அருகில் அவித்த சோளனின் வாசம் மூக்கை துளைத்தது. ‘மையிஸ் மையிஸ்’ என்று அறிவித்தபடி மெட்ரொ நடைபாதையில் ஆபிரிக்கப்பெண் ஒருத்தி சோளன் விற்கின்றாள். என்பதை கண்கள் உறுதி செய்தன. பச்சை நிறத்தில் கைகள் இல்லாத மேல் சட்டையும் அதே நிறத்தில் மார்புப்பகுதியில் பூக்கள் வரைந்த
மஞ்சள் நிற லுங்கி போன்ற வடிவம் கொண்ட ஆடையையும் கீழே அணிந்திருந்தாள். சோடி மார்பிலும் அரைப்பங்கு மேல் நோக்கி பிதுங்கி வழிந்தது. தலையில் பொய்யான முடியை நுட்பமாக பிணைத்து அழகு படுத்தியிருந்தாள். நெற்றி மண்டையின் நடுப்பகுதிவரை வளர்ந்திருந்தது. அவள் என்னை நெருங்கி வந்ததும்
சோளனுடன் அவளது வியர்வை நாற்றத்துடன் ஆபிரிக்க மூலிகையால் செய்யப்பட்ட முகப்பூச்சின் வாசனையோடு சேர்ந்து இதுவரை நான் நுகராத புதிய வாசனையை நுகர்ந்தேன். என்னை நெருங்கி வந்து மையிஸ் மையிஸ்’ என்றாள். நான் வெடுக்கென்று தலையை தாழ்த்தி கைபேசியில் நேரத்தைப்பார்த்தேன். ஒரு
கையால் மையிஸ் வாளியையும் மறுகையை வீசி வீசி நடந்தாள். காலில் முனிவர்கள் அணிவது போன்று தோலில் செய்த விந்தையான பாதராட்சை. ஒரு கொங்கோ நாட்டு நாடக நடிகையான “குக்குளு எம்முவோவை” எனக்கு நினைவுபடுத்தியது. தலையில் மீது வண்ண வண்ணப் பூக்களால் செய்த அலிஸ்பான் ஒன்றை நேர்த்தியாக அணிந்திருந்தாள். நெருங்கி வந்ததும் அவளது ஒப்பனை, மேலே கூறிய நாடக நடிகையின் சாயலுடன் சரியாக ஒத்துபோகிறது என்பதை உறுதி செய்தேன். கொங்கோ நடிகை என்னைக்கடந்த பின் கண்களை நிமிர்த்தி அவளது பருத்த புட்டத்தைப்பார்த்தேன். இடுப்பில் கட்டப்பட்டு
இருந்த துணியுள் குழந்தை நத்தையைப்போல உறங்கிக்கொண்டிருந்தது. குழந்தையின் கால்கள் இரண்டும்
புட்டத்தை உரசிக்கொண்டிருக்க சற்றுக்கூன் விழுந்த முதுகை மெல்ல அசைத்து நடந்துசென்றாள். ஒலிபெருக்கி இரைச்சலுக்குள் சலனமின்றி குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. கண்ணில் தெரியும் வரை யாரும் மையிஸ் வாங்கவில்லை. அவள் ‘மையிஸ் மையிஸ்’ என்று கூவிக்கொண்டு வளைவுகளால்
வெளியேறும் வரை அவளைப் பார்த்துக்கொண்டே நின்றேன். அதிகாலை ஆறுமணிக்கு அவரது மனைவி பிள்ளைகள் வரும் விமானம் பிரான்ஸ் ‘சால் துகளே த்துவால்’ விமான நிலையத்தை வந்தடைகின்றது. பதட்டத்தோடு நகங்களைக் கடித்துக்கொண்டு மகப்பேற்று நிலையத்தின் விறாந்தையில் நடந்து திரியும் இளம்
கணவனைப்போல அங்கிமிங்கும் பதட்டத்தோடு திரிந்தார். ஆகாயத்தில் பறந்து இறங்கும் எல்லா விமானத்தையும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தார். இறுதியாக விமானமும் வந்தது.
பயணிகள் எல்லாரும் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்க திடிரென்று எதையோ மறந்துவிட்டு வந்தாக சொல்லிவிட்டு விமான நிலையப்பூக்கடைக்கு சென்று அங்கிருந்து பொழுத்தீன் பைகளில்
டைக்கப்பட்ட மலர்கொத்துக்களை வாங்கி வந்து கொண்டிருந்தார். நான் அவர் வருவதற்குள் அருகில் இருந்த கழிவறைக்குச்சென்று சிறு நீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். கையில் அழகான மனைவிக்குப் பிடித்த சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூங்கொத்து. நீர் தெளித்து விடப்பட்ட பூக்கொத்தில் பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தன. விமானத்தில் இருந்து பயணிகள் வருகை மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருக்க தடித்த கண்ணாடி தடுப்புக்களால் எட்டி நுனிக்கால்களை ஊன்றி மிக உன்னிப்பாகப்
பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் வரவில்லை. தொலை பேசியில் அழைப்புகள் ஏதும் வந்துள்ளனவா? என பலமுறை சரிபார்த்தார்.
ஏமாற்றத்துடன் தான் வழமையாக அழைக்கும் இலக்கத்துக்கு வாஞ்சையோடு அழைத்தார். இல்லை …. தோல்வியோடு எழுந்து தலை முடியை விரல்களால் கோதியபடி நெற்றியில் முளைத்த வியர்வையை துடைத்துக்கொண்டார். பதட்டம் அதிகரிக்க விறு விறுவென்று அங்கு நின்ற விமான நிலைய உதவியாளர்களை
அணுகி கையில் இருந்த சிறிய காகிதத் துண்டைக்காண்பித்து பதட்டத்துடன் அவர்களிடம் எதையோ கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து என்னிடம் வந்து cest pas possible…. என்று
சொல்லி தலையில் கையை வைத்து தேய்த்துக்கொண்டு நின்றார். நான் “என்ன அண்ணே ஏதும் பிசகா? என்று பொறுமையாகக் கேட்டேன். “பிளைட் நேரத்துக்கு வந்து லாண்ட் ஆகிச்சாம்”…. அப்ப ? ரெலிபோன் அடிக்கவுமில்லையே எங்க போச்சினம்? அவரைப்பார்க்க பரிதாபமாக இருந்தது. “பொறுமையாக இருங்க அண்ணே அக்கா ரெலிபோன் அடிப்பா ஒண்டுக்கும் யோசியாதேங்கோ” என்றேன். அவர் தலையில் கையை வைத்து தேய்த்துக்கொண்டிருந்தார். நேரம் நண்பகலை நெருங்கி விட்டது. விமான நிலையம் முழுவதும் தேடி
உடல் சோர்ந்துவிட்டோம். அப்போது என்னுடைய மூளையில் ஒரு பொறி தட்டியது.
“அண்ணே உங்கட வீட்டுக்கு அக்கா நேரடியா சப்ரைஸ் கொடுக்கிறதுக்காக போய் நிக்கிறாவோ தெரியல வாங்க போய் பார்க்கலாம்” என்ற போது படக்கென்று அவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார். போகும் வழியில் வாயில் எதையோ முணுமுணுத்துக்கொண்டு வந்தார். அங்கு போய் வாசலைபார்த்தோம் அங்குமில்லை.
சந்தேகத்தில் வீட்டுக்கதவையும் திறந்து பார்த்தார் மஞ்சப்புறா. அங்குமில்லை. ஊரில் மனைவி புறப்படும் போது ஒரு குறுந்தகவல் மாத்திரம் இவருக்கு வந்ததாகச் சொன்னார். இரண்டு நாட்கள் கழிந்தன. மஞ்சப்புறா வேலைக்குப்போகாமல் அங்குமிங்கும் மனைவியைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். ஊரில்தொடர்புகொண்டு விசாரித்த போது விமான நிலையத்துக்கு இரண்டு இளம் பெடியள் கயஸ் வேனில் கட்டு நாயக்க விமான நிலையத்துக்கு ஏற்றிக்கொண்டு போனதாகவும் அவர்களில் ஒருவன் அடிக்கடி வெல்வேறு அளவுகளில் பரிசுப் பொதிகளை சகுந்தலா வீட்டுக்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போவதாகவும் குறித்த
நாள் மென் இருட்டில் சில மனிதக்குரல்கள் கேட்டதாகவும் வெளியில் வந்து பார்த்த போது இருவர் கயஸ் வானில் ஏற்றிக்கொண்டு போனதாகவும் முதியவர் ஒருவர் மஞ்சப்புறாவுக்கு விபரம் கொடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் உடனடியாகப் பிரெஞ்சுப் போலீஸ் நிலையத்துக்கு சென்று விபரத்தை
கூறப்போவதாக சொன்னார். நானும் அதுதான் சரியான யோசனை என்றேன்.
“பார்த்தியே தம்பி நானே ஒரு புலனாய்வுக்காரன் கடைசியா வேற நாட்டு போலீசிட்ட உதவிக்கு கையேந்தி நிக்க வேண்டியதா போச்சு” என்று சொல்லி சினந்து கொண்டார். பின் எதோ நினைப்பு வந்தவுடன் மனைவியின் முக நூலைத்திறக்க முயற்சி செய்தார். அது ‘dectivate’ செய்து இருப்பதாக தகவல் வந்தது. “வேசை என்னத்துக்கு இதையும் நிப்பாட்டி வச்சு இருக்கிறாள்” என்று கத்தினார். அடுத்த நாள் போலீஸ் நிலையத்துக்குச்சென்றோம். விடயத்தைக் கூறிவிட்டு தாய் பிள்ளைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய கோப்பு
ஒன்றையும் புகைப்படங்களுடன் இணைத்து சமர்ப்பித்து விட்டு வந்தோம். சில நாட்கள் கழித்து போலீஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு. உடனடியாக அங்கு போன போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் இருவரும் ஒரு சிறிய திரைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருந்தோம். விமான
நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் காணொளி திரையிடப்பட்டு இருந்தது. அங்கே மஞ்சப்புறாவின் பிள்ளைகளுடன் மனைவி கருப்பு நிற லெகிங் அதே நிறத்தில் சேர்ட் அணிந்து வருவதைக் கண்ட அவர் துள்ளி “elle les la” என்று கத்தினார். அதிகாரி பொறுமையாக இருக்கும் படி கையை காட்டினார். காட்சிகள்
ஓடிக்கொண்டிருந்தன. திடீரென எங்கிருந்தோ ஒரு முப்பத்து ஐந்து வயது மதிக்கத்தக்க தமிழ் பெடியன் வேகமாக நடந்து வந்து அவர்கள் மூவரை நெருங்கி கைகள் நிறைந்த சிவப்பு நிற ரோசா
பூச்செண்டுகளைக்கொடுத்து வேகமாக அழைத்துக்கொண்டு சென்றான். அருகில் நின்ற வெள்ளைப்புறாவின் நடு மண்டையில் சம்மட்டி அடி விழுந்தது போல அலறினார்.
கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு அப்படியே அறிவுகெட்டுப் பக்கத்தில் இருந்த கதிரையில் சரிந்தார். அவரது கண்களில் உயிர் இல்லை. அதன் பின்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் “இனி இங்கு நின்று
கத்தினால் உன்னை பிடித்து கம்பி எண்ண வைப்பேன்” என்று அதிகாரி ஒருவன் மஞ்சபுறாவின் காதில் சொல்ல
“ பீத்தா மேர்து தொட்டுப்பாப்பியே நான் பொட்டற்ற ஆள்” என்று சொல்லிப் பற்களை நறும்பிக்கொண்டு சண்டைக்கு அங்கே மல்லுக்கட்டிக்கொண்டு நின்றார். நான் அவரது தோளைபிடித்து இழுத்தேன். “படு வேசை….. அவவும் அவட உடுப்பும் என்று கொக்கரித்தார்”. அப்போது அங்கு வந்த அதிகாரி தே மலாத் என்று கேட்டு திட்டிவிட்டுப்போனான். நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். நான் அவரை ஆறுதற்படுத்த
வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருந்தேன். வீட்டுக்கு வந்தும் உண்ணாமல் குடித்துக்கொண்டு பழைய கதைகளைச் சொல்லி மும் மொழிகளில் தூசணத்தால் கொட்டிப் புலம்பிக்கொண்டிருந்தார்.
சில மாதங்கள் கழிந்தன. போர்தோ நகரின் புற நகரில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான இலங்கைப்பெண் கழுத்து கைகளில் கிழிக்கப்பட்ட நிலையில் உடல்
ஆற்று நீரில் கரை ஒதுங்கியதாக பிரெஞ்சு தேசிய தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்துக்காட்டியது. குழந்தைகள் இரண்டும் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் செய்தி வெளியிட்டது. உடல் நீரில் உப்பி மிதந்துகொண்டிருந்தவரது அங்க அடையாளங்களை பார்த்து இறந்தது தனது மனைவிதான் என்று
மஞ்சப்புறா உறுதியாகச்சொன்னார். காணொளியை திரும்பத்திரும்ப பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
“கள்ள ராஸ்கலுகள் மனிசி போட்டு இருந்த பவுண் நகைகளுக்காக எயாபோர்ட்டில வைத்து கடத்தி இருக்கிறாங்கள். எல்லாம் அரசாங்கத்தட வேலைதான். என்ர மனிசியை வைச்சு என்னத் தூக்கப்போட்ட பிளான் கழுத்தோட போயிருக்கு மனிசி என்னைக்காட்டிக்குடுத்து இருக்க மாட்டாள் தம்பி. அதுதான் நாய்கள்
இப்பிடி செய்திருக்குதுகள்” என்று சொல்லி கண்கள் கலங்க பெருமூச்சு விட்டார். அப்போது என் மூளையில் பொறி தட்டியது. இனி நான் வேறு வீடு பார்க்க வேண்டிய அவசியமில்லை. கதிரையில் சாய்ந்திருந்த என் தோள்களை உலுப்பி “தம்பி நாளைக்கி காலம போர்தோ போவோம் லீவு போடு” என்றார்.
டானியல் ஜெயந்தன்
நன்றி- மணல்வீடு