மல்கோவா

சிறுகதை

அறை முழுவதும் இருள் மண்டிக்கிடந்தது. நான்கு பேர் மட்டும் உயிர் வாழக்கூடிய நான்கு சுவருக்குள் ஒன்பது பேர் உயிர்வாழ்கின்றோம். சுவாசிக்கத் தேவையான பிராண வாயு துண்டிக்கப்படும் போதெல்லாம் ஓங்கி சன்னல் கதவைத்தட்டுத் திறந்து நான் உயிர் வாழக் கற்றுக்கொண்டுள்ளேன். எவருக்கும் நிரந்தரமான படுக்கை இல்லை. ஆறு பேர் படுத்தால் மூன்றுபேர் சமையலறைக்கு  எதிரே அழுக்காகிக் கிடக்கும் சோபாவில் அவரவருக்கான இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். அதிகாலை எவன் எழும்பி வேலைக்கு ஓடுவான்? அந்த இடத்தில் கொடியை நாட்டலாம் என யுத்தவீரனின் மன நிலையோடு தருணம் பார்த்துக்கிடப்போம் . யாரும் எதையும் உரிமை கொண்டாட முடியாது. நான்கு சுவருக்குள்ளும் ஒரு பெரிய பொது உடமை சித்தார்ந்தமே குடி கொண்டிருக்கும். அத்தோடு கிண்டல் கேலிக்குப் பஞ்சமிருக்காது. எப்போதாவது கிடைக்கும்  ஓய்வு நாள். அந் நாளில் மட்டும் போர்வைக்குள் அட்டைபோல் சுருண்டு கிடப்போம். இல்லாவிட்டால் மலாத்தடித்து தமிழ் சினிமா ஒன்றைப் பார்தவாறே நேரத்தைப்போக்குவோம். எங்கள் ஒன்பது பேரில் ஒரே ஒரு சமையல்க்காரன். அவனிடம் முதலாளி வாடகைக்காசு வாங்குவதில்லை. அவன் கடும் உழைப்பாளியாகவும் திறமானதொரு வீட்டுப் பணிவிடைக்காரனைப் போலவும் எம்மோடு நடந்துகொள்வான். 

நான் அதிகாலையே எழுந்து தொலைபேசியில் தரவிறக்கிவைத்திருந்த வேதாகமத்தைத் தட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். சில வேத வசங்கள் என்னோடு பேசின, அப்போது இறுதியாக அம்மா அனுப்பிவைத்த கடிதத்தின் இறுதி வரிகள் நினைவுக்கு வந்தன. அதை மீண்டும் நினைவு படுத்திய அவை மனதுக்குள் தேவபயத்தை உண்டு பண்ணின. 

“தம்பி ஆண்டவரோட விளையாடாத கோயிலுக்குப் போ அவற்ர பிரசன்னம் இல்லாமல் எதுவும் செய்ய ஏலாது ”  

சென்ற ஞாயிறும் ஆராதனையில் பங்கெடுத்தேன். போதகர் ஆராதனையின் போது வாசித்த வேத வசனத்தை தவறாமல் குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு வந்திருந்தேன். அது இவ்வாறு சொல்லப்பட்டது.

“இதோ தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான் ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும் அவர் காயப்படுத்தி காயம் கட்டுகிறார். அவர் அடிக்கிறார். அவருடைய கை ஆற்றுகிறது” 

மீண்டும் குறித்த வசனங்களை மனதில் நிறுத்தித் தியானித்துக்கொண்டு இருந்தேன். அவை அநாதி தேவன் எவ்வளவு நல்லவர். அவரது வார்த்தைகள் என்னை ஆறுதற்படுத்தியது. என்னையறியாமல் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்தது. இதயத்தை முழுதும் ஆராய்ந்து சரிப்படுத்திக்கொள்ள முயற்சித்தேன். கடன் பிரச்சனை மண்டையில் சம்மட்டிகாக அடித்தது. வேறு சிந்தனைகளும் மண்டையில் தட்டிக்கொண்டன.

 “அந்த வவுனியா எம்பிக்கு இன்னும் மூன்று லட்சம் குடுக்கவேணும். சென்ற வாரம் ஒரு லட்சம் அனுப்பியிருந்தேன். இந்த வாரத்துக்குள் இன்னுமொரு இலட்சம் எப்படி அனுப்புவது” என்ற கேள்விய என்னை நானே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக என்னால் முடியாத காரியம் ஆனால் அவரால் முடியாத காரியம் எதுவுமில்லை! கண்ணீர் விட்டு உருக்கமாக செபித்தேன். 

யாரிடமாவது கடன் கேட்டுப்பார்ப்போமா?   

இல்லை உபவாசம் இருந்து செபிப்போமா ?

 ம்ம்ம் .. கேட்டாலும் யார் தரப்போகிறார்கள் “நிச்சயமாக தர வாய்ப்பேயில்லை .நம்மிடம் ஒரு விசா, வேலை இருந்தால் தமிழாக்கள் நம்பித்தருவாங்கள். இப்ப தின்னக்கூட வழி இல்லாமல் இருக்கிறன். எப்படி வட்டிக்கு கடன் தருவாங்க? சரி பாப்போம். முடிஞ்ச அளவு கிடைக்கிற எந்த வேலை எண்டாலும் செய்வோம். ஏது கஸ்ரம் எண்டாலும் ஒரு கைபார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பசி, தாகம் என்ற உணர்வெல்லாம் கொழும்பு விமான நிலையத்தோடு நின்று விட்டன. ஊரில் வேளைக்கு வேளை தட்டாமல் சத்துணவு உண்டு ஜிம் செய்து மெருகேற்றி வைத்த தேகம் தளர்ச்சியடைந்து செல்கிறது. இப்போது சரியான உணவில்லை. கிடைத்தாலும் ஒழுங்கான நேரத்துக்கு  உண்பதில்லை. உடல் கொஞ்சம் கொஞ்சம் தளர்ச்சி அடைந்து கொண்டு செல்கிறது. இப்படி வாழ்ந்தால் கடைசியாக எல்லாம் இருக்கும் உடம்பில ஆரோக்கியம் இருக்காது. செத்துத்தான் போவோம் என்னதான் செய்றது? மழையில் நனைந்து தடிமல் பிடித்துப்போனது. மூக்குத் துவாரங்களில் சளி முட்டிக்கிடந்தது.

மூச்சை இழுத்து விடப் பிரயத்தனம் செய்தேன். போர்வையை அகற்றி இடுப்பிலிருந்து வழுகிச்சென்ற சாரத்தை எங்கோ மூலையில் தேடி எடுத்து சரிப்படுத்திக்கொண்டேன். கண்களை விரிவாகத்திறந்து சன்னல் கண்ணாடியை ஊடுருவிப்பார்த்தேன். வெளிக்கண்ணாடி முழுவதும் குளிரில் உறைந்து கிடந்தது. வீட்டின் உட்பகுதி வெப்பத்தால் வேர்த்து விறுவிறுத்தது . கட்டிலின் குட்டி ஏணிப் படிகளை பிடித்து பூனையைப்போல சலசலப்பின்றி மெதுவாய் கீழ் நோக்கி இறங்கினேன்.

“ பூ ஆரடா இது? கால நேரம் தெரியாமல்  சே நிம்மதியா இந்த வீட்டில ஒரு நேர நித்திர கொள்ள ஏலாது . 

யாரோ? எவர் எந்தத்தட்டு ? என்று சரியாக என்னால் ஊகிக்க முடியவில்லை. தலை சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக தரையில் காலை ஊன்றி நடந்தேன். மறுபடி யாருடைய காலையோ தவறி மிதித்துவிட்டேன். ஆனால் இம்முறை அந்த உடலில் இருந்து மூச்சுப்பேச்சு இல்லை. விறாந்தை மின் குமிழ் அணைந்து கிடந்தது. அறை மூலையில் மாதா சொரூபத்தில் இருந்து மஞ்சள் மென் ஒளி அறையை ஆக்கிரமித்தது. கட்டில் கம்பியை பிடித்து சன்னலை நோக்கி அரக்கி அரக்கிச்சென்றேன். பனி படிந்திருந்த கண்ணாடியூடே கூர்ந்து பார்த்தேன்.  சாம்பல் புறா ஒன்று ஒற்றைக்காலில் நடுங்கிக்கொண்டு நின்றது. ஆனாலும் நிலம் இன்னும் முற்றாக வெழுக்கவில்லை. கட்டிடத்தில் வெளியே அழகாய் நீண்டு ஓங்கி வளர்ந்து நின்ற மரங்களின் கிளைகளெல்லாம் துண்டாக்கப்பட்டு வெறும் மொட்டையாய் கொடிக்கம்பம் போல நிமிர்ந்து நின்றன. குளிரில் இறுகிக்கிடந்த சன்னலைத்திறந்தேன். “கிறீச்” என்ற மெல்லிய சத்தத்தோடு சன்னல் திறந்தது. தூரத்து வீதிகளில் மின்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டு இருந்தன. பனித்தூறல்கள் மின் ஒளியில் கலந்து தங்கத்துகள்களை அள்ளி வீசியது. ஏழாம் மாடியில் இருந்து தரையைப்பார்த்தேன். கீழே இருந்த சிறுவர் பூங்கா மீது பனி மூடிக்கிடந்தது. மனித நடமாட்டமில்லை பனித்தூறலும் ஓயவில்லை.

பார்வையை திருப்பி கண்களை கடிகாரத்தில் ஊர விட்டேன். நேரம் காலை ஐந்து மணியை கடந்துவிட்டது . ரயில் சேவை ஆரம்பமானது. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியினூடாக விரைவு ரயில் புறப்பட்டது. மின்னல் வேகத்தில் அதன் அதிர்வு பலரின் தூக்கத்தை முறித்துப்போட்டது. இரண்டு மூன்று நிமிடங்கள் பூமி அதிர்ந்தது போல் உணர்வு வெடியோசையை கேட்ட தேவாலயப் புறாக்களைப் போல தூக்கத்தில் கிடந்த செல்வத்தாரும் நாகேசரும் எழும்பியடித்து வேலைக்கு ஆயத்தமாகினர்.  அறையில்  நான் மட்டும்தான் எதுவித வேலையுமில்லாமல் வெட்டியாய் அறையில் முடங்கிக்கிடக்கிறேன். இதை அறையில் உள்ள பலர் காரணமாக வைத்து கிண்டல் அடித்திருக்கின்றார்கள். சில நேரங்களில் நான் வேலைக்கு போவது போல நாடகமாடுவேன். இது இரண்டாவது மாதம் நினைத்தாலே வெறுப்புத்தான் வருகின்றது. வேலை கிடைத்தாலும் முதலாளிகள் சக மனிதனை மிருகத்தைப்போல் நடத்துறானுகள்.பணம் மட்டும்தானே இந்த முதலாளி வர்க்கத்துக்கு முக்கியம். எங்களப்போல அப்பாவியளிடம் எவ்வளவு சுரண்ட முடியுமோ சுரண்டிவிட்டு கடைசியா பேப்பர் ,மட்டை இல்லை என்று துரத்தி விடுகிறார்கள்.

ஒரு  உழைப்பாளிக்கு ஒரு மணித்தியாலத்துக்கு குறைந்தது பத்து யூரோக்களையாவது  ஊதியமாக கொடுக்கவேண்டும். இதுதான் பிரெஞ்சு சட்டம் என்று தமிழ் கடைக்கார அண்ணன் சொன்ன ஞாபகம். வதிவிடப் பத்திரம் இல்லாத தொழிலாளி யென்றால் மனிதாபிமான முறையில் சற்றுக்குறைந்த தொகையாவது கொடுக்கலாம். ஆனால் தமிழ் கடை வைத்து இருக்கும் முதலாளிகள் மாதம் கூடிய தொகையாக அய்நூறு தொடக்கம் அறு நூறு யூரோக்கள் வரை கொடுக்கிறார்கள். அதிலும்  சுத்து மாற்று வேலை. சம்பளத்தொகையை குறித்த நாளில் கொடுப்பதில்லை. சராசரியாக வேலை 12 மணித்தியாலத்துக்கு மேல் வேலை வாங்குகின்றார்கள். தொழிலாளிகள் மயங்கிவிழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இந்த விடயத்தில் வேற்று நாட்டவர் பராவாயில்லை என்று குணத்தார் லொத்தர் கடையில் நின்று லொத்தர் சீட்டை நாணயக்குற்றியால் சுரண்டியபடி சொன்னது நினைவு.

பிரான்சுக்கு வந்து மூன்றாம் நாளில் வேலை தேட இரண்டு கிலோ வாழைப்பழமும் தண்ணீர்ப்போத்தலும் ஒரு தோல்ப்பைக்குள் போட்டுக்கொண்டு லாச்சப்பல் கடைத்தெருவுக்கு இறங்கினேன்.  முடிந்த வரை ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களின் பின்புதான் ஒரு  வேலை கிடைத்தது .நாள் முழுவதும் ரெலிக்காட் விளம்பர கம்பனியின் விளம்பர பேப்பரை வருகிற போகிறவர்களிடம் கால் கடுக்க நின்று கொடுத்துக்கொண்டு நின்றேன். 

விசா இல்லாட்டால் இப்டித்தான் தம்பி சமாளிச்சு உழைக்க கற்றுக்கொள்”

வயசான வெயிட்டர் ஐயாவை ஒரு நாள் கூறியதை நினைவு கூர்ந்தேன். எப்போதும் பிரான்ஸ் வாழ்க்கையை நினைக்க நினைக்க அழுகைதான் வருது என்ன செய்யிறது வெளி நாட்டு ஆசையில சூட் கேசை தூக்கிக்கண்டு வந்திறோம். பாரச் சிலுவையை சுமந்து முடிக்கத்தானே வேண்டும்

 அட சீ என்ன வாழ்க்கை இது?

“கொஞ்சக்காலம் பல்லக்கடிச்சுக்கண்டு இரும்” 

“எத்தின பேர் இப்பிடி சொல்லிட்டினம் ஒரு பிரியோசனமும் இல்லை விசா இல்லையண்டால் நாயவிட கேவலமா பார்க்கிறாங்க.

“டேய் ஜன்னல பூட்டடா” வீட்டுக்காரனின் எடு பிடி கத்தினான். நான் எதும் பேசாமல் சன்னலை மூட முயற்சித்தேன். அது கிறீச் என்ற ஓசையுடன் மூட அடம்பிடித்தது. மழை நீரை உறுஞ்சிய சன்னல் பலகைகள்  வீங்கி முட்டிக்கிடந்தன . சுவர்கடிகாரத்தின் முட்களின் மெல்லிய சப்தம் நுணுக்கமாக எனது காதுகளில் வந்து சேர வெடுக்கென நிமிர்ந்து கடிகாரத்தை பார்த்தேன். நேரம் காலை 6.30 மணியை கடந்து முட்கள் நகர்ந்தன. ம்ம்ம் சிகரட் புகைத்து பல மணிகள் ஆகிவிட்டன உதடுகள் அதன் தேவையை உணர்த்தியது. லாச்சியை சல சலப்பின்றி மெதுவாய் இழுத்தேன். பெட்டியில் இரண்டு சிகரட் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து சாரத்துக்குள் செருகிக்கொண்டு கிச்சன் அறையை நோக்கி நடந்தேன். மாதா சொரூபத்தின் கீழ்த்தட்டில் கிடந்த லைட்டரை தட்டி சிகரட்டை பற்ற வைத்தேன். புகையை சன்னலின் நீக்கலால் ஊதிவிட்டேன் குளிரோடு அது அடங்கிப்போனது.  தலை இன்னும் கிறுத்தது. பிரான்சுக்குள் வந்து இரண்டு வருடங்கள் இதுவரை எந்தப்பேப்பரும் கிடைக்கவில்லை. ஒப்பிறா விசா கோரிக்கையைத்தள்ளு படி செய்துவிட்டது; கொமிசன் காரனும் கைய விட்டுட்டான். இப்போ லோயர்காரி றீ அப்பீல் போட இரண்டாயிரம் யூரோ கேக்கிறாள். 

“ஒகே  செய்வோம் எண்டால் காச வையடா ! என்று ஒத்தக்காலில நிக்கிறாள் அந்த அம்மாச்சி. காசு கிடந்தால் குடுக்காமலா இருப்பன். பேசாம ஊருக்கு போய் களங்கண்டி பாஞ்சாலும் நிம்பதியா இருக்கலாம் போல கிடக்கு தண்ணீரை விட்டு கேத்தலை தட்டினேன். அது தன்பாட்டில் கொதித்துக்கொண்டிருக்க ஒரு குவளையில் சாயப்பையை போட்டுவிட்டு சீனிப்போத்தலை பார்த்தேன். காய்ந்து போய் கிடந்தது. ஒரு கரண்டியை எடுத்து போத்தலின் உள்ளே ஒட்டி இருந்த சீனித்துணிக்கைகளை சுரண்டினேன். “ கிறீச் கிறீச்” என்ற சத்தம் உறங்கிக்கிடந்தவர்களை எழுப்பி எரிச்சலேற்றியது.  சூடேறிய கேத்தல் நீரின் கொப்பளிப்பும் சீனிப் போத்தலினுள் எழுந்த இரைச்சலும் அக் கணப்பொழுதின் நிசப்தத்தை உடைத்தெறிந்தது.

“பீத்தா மார்து எவண்டா பூனா மகன் குசினிக்க தேய்க்கிறது. சத்தம் போட்டுக்கொண்டு குசினை தேடி பாய்ந்து வந்தான் ஒருவன். நான் பயந்து ஒடிங்கிப்போய் கேத்திலில் இருந்து வெளியேறும் நீராவியை விறைந்துப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

“ஓ தம்பியே ! சீதேவிக்கு சீனி தேவப்படுதோ கெட்ட கேட்டுக்கு ?

அவன் தன் நாறல் மூஞ்சியோட என் முகத்துக்கு முன் வந்து பல்லைக்காட்டினான். நான் அவனை அசிங்கமாய்ப்பார்த்தேன். இரவு குடித்த சாராய நாற்றம் அவனது தேகத்திலிருந்து போகவேயில்லை. என் வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. சுவர்ப்பக்கம் திரும்பினேன். சிகரட் புகையை ஊதுவதற்காக திறந்த சன்னல் துவாரத்தை பெரிதாக்கினேன். காற்று இரைந்துகொண்டு குளிரை முகத்தில் வீசி எறிந்தது.

“தம்பி இண்டைக்கி 27 ந் திகதி றூம் காசு இன்னும் தரயிலை எப்ப தரப்போறீர்?  

போனமாசம் வவுனியாக்கு அனுப்போணும் தங்கச்சியட புருசன சிறையில இருந்து வெளிய எடுக்கோணும் எண்டீராம் ஓகே. இந்த மாசம் ஆர ராசா வெளிய எடுக்கப்போறீர்? நீர் ஏதும் ஒட்டுக்குழுவில் இருக்கிறீரா? எதிலாவது இரும். இந்த மாசம் ஆரை எடுக்கப்போறீர் காசு தர தாமதமாகுது. நீர் என்னண்டாலும் செய்யும் முதல் சமறிக்காசை தந்திரும் இல்லாட்டால் வீட்ட விட்டு இறங்கு மோனே வேற பெடியள் வரிசையில நிக்கிறானுகள். என பல்லை இழித்தபடி கொக்கரித்தான். பிரடியில் யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது.  ஜீரணிக்க முடியவில்லை. இந்த விசியம் இவனுக்கு எப்பிடி தெரியும்? பிடரி மண்டையில் அறைந்தது போல இருந்தது. என் நரம்புகள் புடைத்துக் கொண்டன. பற்களை நறும்பிக்கொண்டேன். அவன்ர முகத்தில ஓங்கி குத்தவேணும் போல இருந்தது .அந்த நாய்ப்பயலுக்கு கதைக்க பேசத்தெரியாது எண்டு பொடியள் சொன்னது உண்மைதான் என நினைத்துக்கொண்டேன்.

“மாதர் சூத்” காலங்காலத்தால ஊரக்கூட்டி இப்படி அவமானப்படுத்துகிறான். வீட்டில் கிடக்கும் எட்டுப்பேருக்கும் தெரிந்துவிட்டது போல சே.. லஞ்சம் குடுத்தால்தான் தான் உயிர் தப்பலாம் என்றால் குடுப்பது தப்பாக தெரியவில்லை எனக்கு. ஆமா இவனுக்கென்ன நான் குடுத்தால். வீட்டுக்காசு தாறன் எண்டு தானே சொன்னான் பிறகென்ன சனியன் கத்துறான். மண்டை கிறு கிறுத்தது. அக்காட புருசன் ஒரு புலிப்போராளி. முள்ளிவாய்க்கால் கடைசி சண்டையில் ஆமியிடம் சரண்டர் ஆகினவர். அரசாங்கம் புனர் வாழ்வு எனச்சொல்லி ஆளை கொண்டு போய் வவுனியா தடுப்பு முகாமுக்கு அனுப்பிவிட்டாங்க இன்னும் வெளியில் வரவில்லை. எவ்வளவோ முயற்சி எடுத்துப்பார்த்தோம். கிராம சேவையாளர் கடிதம், கத்தோலிக்க விசப்பின் கடிதம் எதுவுமே கை கூடவில்லை. இப்பொது மன்னாரில் உள்ள ஒரு வவுனியா எம்பீயை வைத்து அத்தார வெளியில் எடுக்க வேலை பாக்கிறோம். மூன்று லட்சம் கேட்கிறார் எம் பீ . பிரச்சனைக்கு பிறகு அக்காவும் அம்மாவும் வவுனியா பூந்தோட்டத்தில் தங்கி இருக்கிறாங்க இன்னும் சரியான கஸ்ரப்படுகிறார்கள். அங்கு நடப்பவற்றை நினைத்தாலே கண்ணீர் அருவியாக கொட்டும். இவன் வேற அசிங்கப்படுத்திறான்.

நிமிர்ந்து சுவர் மூலையை பார்த்தேன். எங்கோ இருந்து சில கரப்பான் பூச்சிகள் வேகமாக ஊர்ந்து குப்பை கழிவு கொழுவிக்கிடந்த பொலுத்தீன் பையை நோக்கி படையெடுத்து வந்தன. அவன் இயந்திரமாய் தனது செருப்பை கழற்றி கரப்பான் பூச்சியை ஓங்கி அடித்து தரையில் நசுக்கியபடியே.. பூ ஆரட்ட ஓட்டங்காட்டுறாய்! ஒரடியா செத்துப்போ சனியனே என்றார். நான் நிமிர்வதற்குள்ளே மீண்டும்.

“தம்பி இந்த மாசத்துக்குள்ள காசு வைக்கவேணும் இல்லையண்டால் வீட்ட விட்டு இறக்க வேண்டிவரும் இப்பவே சொல்லீட்டன் 

அதனை மறுத்து அவரை என்வசப்படுத்த வார்த்தைகள் அந்த நொடியில் எனக்கு கிடைக்கவில்லை. மௌனம் மட்டுமே மறுமொழியாய் தொக்கி நின்றது. 

அவன் சாரத்துக்குள் கையைவிட்டு எதையோ சொறிந்தபடி தனக்குள்ளே எதையோ முறுமுறுத்துக்கொண்டு குசினியை விட்டு வெளியேறினான். அவமானப்பட்டவனாய் நிலத்தில் அடித்துப்போட்ட கரப்பான் பூச்சியை வெறித்துப்பார்த்தேன். அது அரை உயிருடன் கால்களை அசைத்து போராடிக்கொண்டு கிடந்தது. இந்த அடி பூச்சிக்கல்ல எனக்கானது என்பதை திட்டவட்டமாக புரிந்து கொண்டேன். கையில் இருந்த சிகரட் விரலில் சுட வெடுக்கென எடுத்து சிகரட் கட்டையை நீரில் அமிழ்த்திவிட்டேன். குளியலறையில் ஆவிபடிந்து இருந்த சவரக்கண்ணாடியை கைகளால் அழுத்திவிட்டு முகத்தைப்பார்த்தேன். கண்கள் சிவந்து கொவ்வம்பழத்தைப்போல் வீங்கி விகாரமடைந்து இருந்தன. இந்தச்சமயம் குளிக்க முடியாது. வீட்டுக்காரன் இதுக்கும் ஒரு கதை சொல்லுவான். முகத்தை நீரால் அடித்து கழுவினேன். கண்கள் எரிவெடுத்தன. கொஞ்சம் கிறீமை முகத்தில் தடவினேன். ஜீன்ஸ் அடுக்குகளுக்குள் ஒழித்து வைத்த சென்ற் போத்தலை எடுத்து உடல் முழுவது விசிறியடித்தேன். பையில் இருந்து பணிஸ் துண்டொன்றை எடுத்து நைசாக வாய்க்குள் திணித்துக்கொண்டு பனடொல் ஒன்றை எடுக்கும் முயற்சியில் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த குளிரங்கியினுள் கையைவிட்டு துலாவினேன். எதுவும் அகப்படவில்லை. இறுதியில் மெல்லிய வெளிர் நீல நிற காகிதத்துண்டொன்று கிடைத்தது. சென்ற வாரம் தொடரூந்து பரிசோதகரிடம் பிடிபட்ட நினைவு வந்தது. இந்த பயண ரிக்கட் எடுக்காத குற்றத்துக்கு ரயில்வே திணைக்களம் க நான் இருக்கிற வீட்டுக்கு தண்டம் அடித்து அனுப்புவான். இதை வீட்டுக்காரன் அறிந்தால் இன்னும் பிரச்சனை செய்வான். சில வேளை தூக்கிலே தொங்குவான். இருக்கிற பிரச்சனையில இது வேற. சொல்லி வைத்தாற் போல வீட்டுக்காரன் மறுபடி எனக்கு முன்னால் தோன்றி ஒரு லெட்டரை கண்முன்னே நீட்டினான். திகைத்துப்போனேன்.

ஒரு வேளை நான் நினைத்த தண்டப்பணம் கட்டாத லெட்டர் தானோ பயத்தில் கைகால் உதற ஆரம்பித்தது . அவரது கையில் இருந்த லெட்டரை சாதுவாக வாங்கிப்பார்த்தேன். முகப்பில் இலங்கை முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அது என்னுடைய அக்கா வவுனியாவில் இருந்து அனுப்பி இருக்கிறாள். ஆவலோடு உடைத்துப்பார்த்தேன். கடிதம் வழமைக்கு மாறாக சற்று நீண்டு இருந்தது.

அன்புள்ள தம்பி சயந்தா! எப்பிடி நலமா நாங்கள் நலம் அம்மாவுக்குத்தான் சரியான சுகமில்லை. நேற்று காலம வவுனிய ஆஸ்பத்திரிக்கு போற்று வந்தனாங்க இதயத்தில சத்திர சிகிச்சை பண்ணவேணுமாம்.  தம்பி எம்பீயோட கதைச்சனியா? இன்னும் காசு வர இல்லை முழுசா எண்டு சொன்னவனாம் காசு போட இல்லையா?அத்தான் பாவமடா பழைய காயங்களைப் பார்த்து ஒரே அடி சித்திரவதையாம் ஆள் ஒடிஞ்சு போற்றேர் உன்ன விசாரித்ததா சொன்னார்.நீ ஒண்டையும் யோசிக்காத ஆண்டவர பாதத்தில வைச்சு செபி church க்கு போறனியா? அம்மா ஒரே செபம் உபவாசம் எடுக்கிறா. நமக்கு செபம் மட்டும்தான். பைபிள் படி ! ஆண்டவரோட விளையாடாத வசனத்துக்கு செவி சாய் ! வேற ஒரு முக்கியமான விசயம். ஒரு கலியாணம் கேட்டு வந்து இருக்கு அம்மா உன்னட்ட முடிவு கேக்க வேணும் எண்டு சொல்லிற்றா..  “என்னவா இருக்கும் யார் அந்த பொட்ட என்ற கேள்வி மனசுக்குள்ள கிளர்ந்தெழ ஆர்வத்தோடு மேலும் படிக்க மற்ற பக்கத்தை வேகமாய் புரட்டினேன். 

சரிதா யாரு கேட்ட பெயராக இருக்கு சரிதா அவளுக்கு என்ன ஆச்சு ? பெயரையும் விடயத்தையும் வாசித்தபோது தூக்கி வாரிப்போட்டது. அட கடவுளே இது உண்மையாக இருக்குமா ? இல்லை நம்ப முடியாது. அவள் எப்படி என்ன ஒகே எண்டவள் எனக்கும் செல்விக்கும் இடைல நடந்த எல்லா சம்பவத்தையும் முழுசா அறிஞ்ச ஒருத்தி சரிதா மட்டும்தான் இவளா? என்னை கலியாணம் செய்ய விரும்புறாள். முடியாது வாய்ப்பே இல்லை. கைகள் நடுங்கின. நினைவுகள் அலைக்கழித்தது. பள்ளிக்காலம் நினைவுக்கு வந்து பாடுபடுத்தியது . சில நிமிடங்கள் மனம் கலவரப்பட்டவனாக சுவரோடு சாய்ந்துகொண்டு கடிதத்தின் மீது கண்களை படர விட்டேன். 

“தம்பி உன்னொட படிச்ச பொட்டதான் சரிதா புஸ்பம் அன்ரியட மகள் இப்ப நேர்ஸா வேலை செய்யிறாள். சரிதா வவுனியா பெரிய ஆஸ்பத்திரியில. நீள முடியும் ஆளும் இருந்தத விட வடிவுடா இப்ப பதினைஞ்சு லெட்சம் சீதணமாம் வீடு ஒண்டு பட்டி வெளியில் கிடக்காம் ஒரே ஒரு புள்ளயாம் சொத்து எல்லாம் அவளுக்குத்தானாம். உன்ர விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம் எண்டு அம்மா சொல்லி அனுப்பிட்டா உன்ர விருப்பத்த சொல்லு! வேற என்ன உன்ர போட்டோ கிடைச்சது. தாடி சேவ எடு ! அம்மா கவலைப்படுறா பார்த்துவிட்டு என்வலப்புக்குள்ள அம்பது யூரோ அம்மாட பிறந்த நாளுக்கு அனுப்பி இருந்தாய் அத எடுத்து ஒரு சாறி வாங்கி குடுத்தன். அப்பாவட பத்தவது வருசம் வருது வேற என்ன தம்பி ?

 வெளி நாட்டுக்கு உன்ன அனுப்பின காசுக்கு அப்பா கட்டின வீட்ட வித்ததுக்கு எல்லாரும் பேச்சு அவியளுக்கு என்ன தெரியும் இல்லாட்டியா எங்க போறது அந்த காச ஏஜென்சிக்கு குடுக்க எல்லாரும் ஏமாத்திட்டாங்க வா தாறம் எண்டவனுகள் கடைசியில கை விரிச்சிட்டாங்க இப்ப வந்து வீட ஏன் வித்தனீங்க?கேள்வி நியாயம் விட்டுத்தள்ளு !

வேற என்ன ஒண்டையும் யோசிக்காத தம்பி நல்லா ஜெபி பைபிள் வாசி ஆண்டவர் உதவி செய்வேர் லெட்டர் கிடைச்ச உடன் பதில் போடு ஒரு ரெலிபோன் அனுப்பி விடு சிம் போட்டு உன்னோட குரல கேக்க வேணுமாம் அம்மா ஒரே புலம்பல் சரி கலியாண அலுவல பாரு உனக்கு புடிச்சா சொல்லு அவியள் வாற வாரம் வருவினம் வீட்டுக்கு பதில் போடு!

இப்படிக்கு 

அக்கா

(02)

இனியும் றூமில் நிற்க முடியாது. வீட்டுக்காரன் காரணமே இல்லாமல் குத்துக்கதை போடுவான். எங்காவது வேலை தேடி போவது மேல் துரித கதியில் லெதர் ஜக்கட்டை சொருகினேன். லிப்டைத்தேடி நடந்தேன். குளிர் கழுத்தினூடாக உள்ளேற ஜக்கட்டை சரிப்படுத்தினேன். பச்சை நிற பட்டனை அழுத்த லிப்ட் சில நொடிகளில் காலடியில் வந்து கதவைத்திறந்தது.  ஞாயிறு தினங்களில் ஆராதனைக்கு என்னை அழைத்துச்செல்லும் மேல் வீட்டு புஷ்பம் அன்ரி பல்லைக்காட்டிய படி உள்ளே

தம்பி ஆண்டவருக்கு தோத்திரம் சவா ? 

போன வாரம் ஆரதன எப்பிடி சவாவே ?  

 சவா சவா..அன்ரி

சரியான அலட்டல் மேலும் கதையை வளர்க்க விரும்பவில்லை மனமும் சரியில்லை! சட சடவென்று நடையை வேகப்படுத்தினேன். இன்னும் ஏழு நிமிசம் கிடக்கு ரெயினுக்கு பனி தாராளமாய் கொட்டிக்கொண்டு இருந்தது. வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். வானம் இருண்டு போய்க்கிடந்தது. மரங்களில் கிளைகள் எதுவுமில்லை வெறும் தண்டுகள் மட்டுமே காட்சி தந்தன. என் உடலைத்திருத்தமாக மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். நிலத்தில் மஞ்சள் இலைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பயணிகள் முகம் தெரியாமக் உடலை மூடிக்கொண்டு நடக்கின்றனர். நீண்ட கறுப்புக்கோட் அணிந்த ஒரு அழகான வாலிபன் கையில் தோல் பையோடு வேகமாக நடந்து செல்கின்றான். ஒரு சாம்பல் நிற நாயொன்றின் கழுத்துப்பட்டியை பார்வை இழந்த ஒரு பெண்மணி இறுக்கமாக பிடித்து இருந்தாள். அந்த நாய் மூச்சை இழுத்தபடி அவளை இழுத்துச்செல்கிறது. 

வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளின் முன்னால் சில மனிதர்கள் காப்பியை உறுஞ்சியபடி சிகரட்டை புகைத்துக்கொண்டிருந்தனர். பரவசமூட்டக்கூடிய அதிகாலை  என்னால் வேகமாக நடக்க முடியவில்லை. பனி வழுக்கிக்கொண்டு இருந்தது. கண்களில் எரிச்சல். தலையை சுற்றியது. சிகரட்டைத் தேடினேன்.  குளிர் கோட்டின் மேல் பையில் மடிந்து போய்கிடந்த சிகரட் ஒன்றையும் பற்றவைத்தேன். ஸ்டேசன் மறைவில் நின்று சுதந்திரமாக புகையை ஊதினேன். குளிரில் கைகள் குறண்டிக்கொண்டன.

இப்போது ஒரு கப் காப்பி யாராவது தருவார்களா? கிடைத்தால் எவ்வளது நன்மையாக இருக்கும். ஜீன்ஸ் பையினுள் கையை விட்டேன். உள்ளே கிடந்த இரண்டு யூரோக்களை எடுத்து பரிஸ் சிட்டிக்கு செல்லும் பயண ரிக்கட்டை வாங்கினேன். பரிஸ் செல்வதற்கான விரைவு ரயில் அங்கே வந்து ஆயத்தமாய் நின்றது. விரைந்து ஜன்னல் ஓரம் சௌகரியமான ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன். தலைச்சுற்று அடங்கவில்லை . கண்ணாடியால் எதையும் பார்க்கமுடியவில்லை பனி முட்டிப்போய் கிடந்தது. இருக்கையில் சரிந்து படுத்தேன். நினைவு செக்குமாடு மாதிரி சுற்றி வந்தது. சரிதா என்னை எப்படி?நம்ப முடியவில்லை. ஒரு வேளை அவளுக்கு தெரியாமல் அவளது தாய் தேப்பன் கலியாணம் கேட்கிறார்களோ?

எனக்கும் செல்விக்கும் உயர் தரம் படிக்கும் போது காதல் தூது போனவள் சரிதா தானே எங்கள் காதலுக்கு துணை போனவளா? என்னுடைய மனைவி நோ நோ இது சாத்தியப்படுமா? சரிதா வீட்டில் வைத்துத்தானே எங்கள் காதல்  நாடகம் பிடிபட்டது . நல்ல வேளை சரிதாவுடைய தாய் தேப்பன் அறியவில்லை. இதில் சரிதாவட தலை தான் உருண்டது. செல்வியட அண்ணனிடம் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவத்தை நினைத்தால் இன்றும் வெட்கமும் அவமானமும் வரும். வாழ்க்கையில் முதன் முதல் அசிங்கப்பட்ட நாள். செல்வியை என்னுடைய நினைவில் இருந்து அகற்ற முடியாமல் நான் பட்ட பாடு இருக்கே சொல்லி மாளாது . சரிதா என்னுடைய நண்பி அவள் எப்படி என் மனைவியாக கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஒரு வேளை ஏதும் பழிவாங்கல் இருக்குமோ நோ நோ வாய்ப்பே இல்லை!

ரயில் ஒலிபெருக்கியில் சில அறிவித்தல் பிரெஞ்சு மொழியில் செவியில் விழுந்தது. பின்பு ரயில் புறப்பட்டது. சில நிமிடங்களில் அடுத்த தரிப்பிடத்தில் பயணிகள் சிலர் ஏறினர். அவர்களில் பெரும்பான்மையினர் கருப்பு இனத்தவர் சில பிரெஞ்சுக்காரர் நாகரீகமாக உடையணிந்து இருந்தனர். பார்ப்பதற்கு அரச உத்தியோகம் செய்பவர்கள் என எண்ணத்தோன்றியது

 “எக்ஸ் கீயூஸ் முவா “ 

என்ற படி ஒரு எடுப்பான குரலில் ஒரு இளம் பெண். எனது அருகில் காலியாக இருந்த ஆசனத்தில் வந்தமர்ந்தாள்.  சற்று சரிந்து இருந்த தோள்கள் தானாகவே நிமிர்ந்தன. “மெர்சீ மிஸ்யூ “ என்றாள். அவளது குரலில் பணிவும் மதிப்பும் கலந்திருந்தது. தனது லூவித்தன் பையை திறந்து ஒரு புத்தகத்தை எழுத்து படிக்க திறந்தாள். fifty shade of gray என்று அதன் அட்டைப்படத்தில் எழுதப்பட்டு இருந்தது. இந்த சனவரி மாதத்தில் இருந்து ரயில் மெட்றோ வாயில் என எல்லா இடங்களிலும் இப்பெயரை படித்த நினைவு அரும்பியது. இந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு நெட்பிலிக்ஸ் ஒரு திரைப்படத்தைத்தயாரித்ததாக சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவன் கூறி இருந்தான். அவள் அளவான உயரமும்   தேகத்தின் நிறத்திலே தொடை வரை நீண்ட சொக்கிங்ஸ் அணிந்திருந்தாள். அத்திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலவே இவளும் தோற்றமளித்தாள். உதட்டில் சிவப்பு சாயமும் நகங்கள் முழுவதும் அதே வர்ணத்திலே பூசி இருந்தாள். அரசு பணி ஒன்றில் வேலை பார்க்கும் மேல் தட்டுப் பிரென்சுப் பெண் போல தோற்றமளித்தாள். இடுப்பில் அணிந்திருந்த கருப்பு நிற இடைக்கச்சை அவளின் உடலின் பருமனை அழகாக வெட்டிக்காட்டியது. தனது நீண்ட வழுவழுப்பான காலை மற்றக்காலின் மீது பின்னிப்போட்டாள். தொடைகளின் செழுமை அவளின் மீது மேலும் ஈர்ப்பை ஏற்படுத்த வல்லது. ஒரு நடிகையாகவோ அல்லது ஒரு பிரெஞ்சு விளம்பர அழகியாகவோ இருக்க வாய்ப்புண்டென என் நுண்ணறிவு சொல்லிற்று. சைபிரீய ஹாஸ்கி நாயின் கண்களைப்போல் அவளது கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன.  மார்புகள் செழிமை மிகு அல்ஸ் மலைகளைப்போல குத்தி நின்றன. எந்தச்சலனமும் இல்லை. புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் போது மட்டும் மெல்லிய சத்தம். அவளை மரியாதையோடு பார்த்தேன் கொள்ளையழகு. எனது நெற்றியின் வியர்வை கன்னங்கள் வழியாக வடிந்தோடியது. திடீரென வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. அட கடவுளே வாந்தி எடுக்க இதுவா நேரம். அதை தடுக்க வழி எதுவும் உண்டா உடலை அடைந்து உமிழ் நீரை விழுங்கி பல முயற்சிகள் செய்து பார்த்தேன்? வாந்தி தொண்டைவரை எட்டிப்பார்த்தது. நாவில் புளிப்புச்சுவையை உணர்ந்தேன். பரிசுக்குச் செல்லும் விரைவு ரயில் ஒரு சில இடத்தில் மட்டும் நிறுத்தப்படும் மீண்டும் நகர ஆரம்பித்தது. வெளியே போக முடியவில்லை. வாந்தி எடுக்கக்கூடாது என மன்றாடிக்கொண்டிருந்தேன். அச்சத்தில் இதயம் படபடத்தது.

குளிர்காலத்தில்  ஜன்னல் திறக்க முடியாது. கழிவறை வேறு திறந்து விட்டு இருக்க மாட்டார்கள். சன நெரிசலில் நகர முடியவில்லை. நான் இயலாமையால் உழன்றுகொண்டு இருப்பதை அப்பெண் கடைக்கண்ணால் பார்த்து விட்டு புத்தகத்தின் மீது தனது கண்ணை ஊர விட்டாள் . அவளது பொன் நிற கூந்தல் நெற்றி மீது வழிந்துவிட எடுத்து காது அருகில் செருகி சரிப்படுத்தினாள். என் அடி வயிற்றுக்குள் மாபெரும் பிரளயம் ஏற்பட்டது. முடியவில்லை ஓங்காளித்தேன். வெறும் தண்ணீரில் உப்பிய பணிஸ் கரைந்து போய் குமட்டிக்கொண்டு வெளியே வந்தது. எந்த சலனமுமின்றி இயந்திரமாய் தன்னுடைய கைக்குட்டையை எடுத்து “டொனே மிஸ்யூ” எனக்கூறி என்னிடம் திணித்தாள். ஏக்கத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்தேன். என்னுடைய கண்களில் ஈரக்கசிவை அந்த நொடியில் உணர்ந்தேன். அவளது ஈரப்பதமான கைகள் என் பிரடியையும் நெற்றியையும் தாங்கிக்கொண்டது .

நம்ப முடியவில்லை. ஒருவரின் தோலின் நிறத்தைப்பார்த்தாலே அருகில் அமர மறுக்கும் மேலைத்தேய நாட்டவர்களுக்கு மத்தியில் மரியாதைக்குரிய இப்பெண் என்னை இப்படி தாங்கி உதவி செய்கிறாள் என்பதை நினைத்தால் ஆச்சரியமும் மறுபுறம் கூச்ச உணர்வும் தலைப்பட்டன.

“ ça va monsieur? Ça va aller என்றாள்”

நான் அவளை நிமிர்ந்து பார்க்காமலே எரிந்த தொண்டையால் merci என்றேன். சற்றுத்தலையை நிமிர்த்திப்பார்த்தேன். உதட்டுச்சாயத்தின் நிறத்தில் ஒரு பிறா தோள்பட்டையில் நெளிந்தது. அவள் என் மீது  மெல்லிய புன்னைகையை படர விட்டாள். பூசி இருந்த நறுமணத்தைலத்தின்  வாசத்தில் அவளது ஸ்பரிசத்தை உணர்ந்தேன். கூச்சத்தோடு பார்வையை விலக்க முயற்சித்தேன். சில வெண்மையான ரிசியூ பேப்பர் சிலவற்றை எடுத்து எனது கைகளுக்குள் திணித்தாள். Merci என்றேன். ஒரு நிறைந்த தண்ணீர்க்குவளை அவளது கையில் இருந்து என் கைகளுக்கு மாறியது . சற்று தயங்கிய படி உறுஞ்சிக் குடித்தேன். தொண்டை சற்று எரிச்சலை குறைத்தது. நன்றி சொன்னேன் பரவாயில்லை என்றாள். ஒரு சொற்ப நேரத்தில் பிரெஞ்சு தேசப்பெண்கள்  மீது இருந்த எதிர்மறையான எண்ணம் உடைந்து போனது.

எனக்குள்ளே நம்பிக்கை என்னும் வெளிச்சம் எரியத்தொடங்கியது. களைத்துச்சோர்ந்து போயிருந்த உடலில் புத்துணர்வையடைந்தேன். அவள் பரிசுக்கு செல்லும் வழியில் “ ரோசா பார்க்” என்ற பேருந்துத்தரிப்பில்  இறங்கப்போகிறாள். என்பதை ஊகித்துக்கொண்டேன். படித்துக்கொண்டிருந்த நூலை மூடிவிட்டு தன்னுடைய பொருட்கள் மற்றும் உடை அனைத்தையும்  சரிப்படுத்தினாள். பின் இறங்கும் போது மெல்லிய புன்முறுவல் பூத்த படியே 

  “டேக் கார் மிஸ்டர்” என்றாள் 

அந்த வார்த்தையில் பரிதாபமும் சக மனிதன் மீது கொண்ட அக்கறையும் கலந்திருப்பதை உணர்ந்தேன்.  நான் அடைத்த குரலில் “தேங்ஸ் “என்றேன் அவள் வேகமாக நடந்து மறைந்து போகும்வரை அவளைப்பார்த்துக்கொண்டே இருந்தேன். ரயில் மெதுவாய் பாரிஸ் நகரை நோக்கி முன் நகர்ந்தது. அவள் பின்னால் செல் !  என்றது உள்ளிருந்து ஒரு குரல். தொண்டை காய்ந்து போய் வயிறு எரிந்து கொண்டு இருந்தது. கைகளால் பக்கத்து இருக்கையை தடவிப்பார்த்தேன். இருக்கையில் அவளது தேகச்சூடு இன்னும் அடங்கவில்லை . அவளது கைகள் என் தேகத்தை தீண்டியதை எண்ணி பரவசமடைந்தேன். எனக்குள்ளே தவிப்பு அவளுடன் இன்னும் இரண்டு வார்த்தை பேசவேண்டும்,  மீண்டுமொரு முறை சந்திக்கமுடியாதா ? அவள் மடியில் குழந்தை போல என்னைக் கற்பனை செய்து பார்த்தேன். உடல் மீது மெல்லிய காம நோய் தொற்றிக் கொண்டதை உணர்ந்தேன்.

இது என் தகுதிக்கு மீறிய எண்ணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரவு தூங்க முடியவில்லை. அந்தப்பெண்மீது கொண்ட காமம் மெல்ல மெல்ல உடல் மீது பரவத்தொடங்கியது. நாளை எப்படியாவது சந்தித்து பேச முடிவு செய்தேன். அதிகாலை நேர்த்தியான உடையணிந்துகொண்டு வீதியில் இறங்கினேன். வீதிகள் பனியால் மூடிக்கிடந்தன. மனித நடமாட்டம் குறைவு. பனித்திவலைகளும் கொட்டி ஓயவில்லை.

இனம் தெரியாத வெள்ளைக்காரப்பெண்னிடன் இருந்து என் நினைவுகளை பிரித்தெடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தேன். இதை படிப்பவருக்கு ஒரு வேளை வேடிக்கையாகத்தான் இருக்கும் சுய நினைவுகளை இழந்து அந்தப்பெண்ணை காண்பதற்காக ரயிலேறி எல்லா ஸ்டேசனிலும் அலைந்து திரிந்து இருக்கின்றேன்.

அவள் உடல் மீது நான் கொண்டது. காம இச்சையா ?அல்லது அவள் மீது நான் செலுத்தும் மரியாதையா? சரியாக பகுத்தாய்வு செய்யத்தெரியவில்லை. ஆனால் தவறாமல் அவளது நினைவுலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தேன். சில நாட்களில் தூக்கத்தை தொலைத்து அலைய ஆரம்பித்தேன் . காதல் இதுவும் ஒரு மாதிரியான இன்பத்தை வாரி வழங்கியது. மீண்டும் ஓர் நாள் காலை அதே நேரம் ரயில் எடுத்தேன். தயக்கத்தோடு அதே ரயில் பெட்டியில் அவளது வரவுக்காக காத்திருந்தேன். நான் நினைத்தது போல அவள் அதே ரயிலினுள் இம்முறை அவளுக்கு அருகில் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தரிப்பிடம் வர அவளைப்பின் தொடர்ந்தேன். நீண்ட குதிக்கால் கொண்ட சப்பாத்தில் இருந்து “டொக் டொக்” என்ற சத்தம் அராபிக்குதிரையை நினைவு படுத்தியது . 

அண்மையில் ஒரு தரிப்பிடத்தில் நீல நிற பீ எம் டப்ள் யூ கார் அவளுக்காக காத்து நின்றது. அதில் ஏறி மின்னல் வேகத்தில் என்னைக்கடந்து போனாள். மனம் அவள் பின்னால் பின் தொடர்ந்து போனது. அடுத்த நாள் ரயிலில் அவள் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றாள். என்னுடைய ஆசனத்தைக்கொடுத்து உதவினேன். என்னை நினைவு வைத்திருப்பாளா? என்ற சந்தேகம் தயக்கத்துடன் என்னை அறிமுகம் செய்தேன் . நம்ப முடியவில்லை இனிமையாக பேச ஆரம்பித்தாள்.நான் பிரெஞ்சு மொழியில் தடக்கினேன். மொழி தெரியாமல் திணறினேன். 

அவள் நிலைமையை புரிந்து கொண்டாள்.

ஆங்கிலம் தெரியுமா? 

 ஆம் என்றேன்.

 

ஆங்கிலம் அவளது நுனி நாவில் தவழ்ந்தது. ரசித்துக்கொண்டே இருந்தேன் அவளது பெயர் மல்கோவா லூச்நிக் ரஷியாவின் சன் பீற்றர்ஸ்பேக் நகரைச் சேர்ந்தவள். ஆறு வருடங்களாக பரிசில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிவதாக தன்னை அறிமுகம் செய்திருந்தாள். ரயிலில் எங்களுடைய சந்திப்பு தொடர்ந்தது .தான் பார்த்த திரைப்படங்களைப் பற்றி பேசுவாள். தற்போது panthan ல் வசிப்பதாக கூறி இருந்தாள் . நான் நினையா பிரகாரம் என்னை ஒரு நாள் தன்னுடன் வீட்டில் வைன் அருந்தும்படி அழைத்தாள். அது ஒரு ஞாயிறு தினமாக இருந்தது. பனி சரமாரியாக கொட்டிக்கொண்டு இருந்தது. ஆடம்பரமாக உடை உடுத்திக்கொண்டு அவளது முகவரியில் உள்ள அடுக்குமாடிக்கு போனேன். ஆறாவது மாடியில் இலக்கம் நான்கு என்று இலக்கமிட்ட அறைக்கதவில் அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளிருந்து கதவு திறக்கப்பட்டது. தயக்கத்துடன் உள் நுழைந்தேன். வரவேற்பறை முழுதும் சிவப்புக் கம்பளம். உயரமான கூசாக்கள் மற்றும் ஓவியங்களால் வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

சப்பாத்தை கழற்றி ஒரு பக்கம் வைத்தேன். கழுத்து வழியே வியர்வை வழிந்தது . ஒரு வகையான பதட்டம் தலையெடுத்தது. கடிகார முள் ஆறுமணியைக்காட்டியது. பார்வையை சுவர் மீது படரவிட்டேன் சுவரில் ஒரு புகைப்படம் ஐந்தடியில் தொங்கிக்கொண்டு இருந்தது. மேலாடையின்றி ஒரு பெண் கைகளால் மார்பை மறைத்து போஸ் கொடுத்த படி நின்றாள். மெதுவாக அடியெடுத்து வைத்தேன். படத்தை நோக்கி கூர்ந்து பார்த்தேன். வேறு யாருமில்லை அது  நான் பிரியப்படும் மல்கோவா லூச் நிக். திகைப்பிலிருந்து மீள முடியவில்லை. யார் இவள் ? மொடலிங் என்ற ஆபாசம் காட்டுகிறாள். உண்மையாக என்ன தொழில்தான் செய்கிறாள். என் எண்ணம் தப்பாகிவிட்டதோ? ஒரு வேளை.? தவறான இடத்துக்கு வந்து விட்டேனோ? என்னை அறியாமலே மனசுக்குள் செபிக்கத் தொடங்கினேன்.உதடுகள் துடித்தன. உடல் முழுதும் வேர்த்து விறுவிறுத்தது.

 ஒரு குரல் உயரத்தில் இருந்து 

 ஹேய் சவா?

 ஹெய் கம் அப்ஸ்ரெயர்.

தயங்கித்தயங்கி கம்பளம் விரித்த படிவழியே மேலேறினேன். மேல் அறையில் சிவப்பு நிற சோபாக்கள் சதுரமாக சுற்றி அடுக்கப்பட்டு இருந்தன. மூலையில் நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது. என்னுடைய கண்கள் சுற்றும் முற்றும் அவளைத்தேடி அலைகின்றது. இன்னும் கண்ணில் அவள் படவில்லை. மேசையில் கிடந்த ஒரு புத்தகத்தை பதட்டத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். எதிரே குளிர் காய்வதற்காக நெருப்பு சுடர் விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அதன் மஞ்சள் நிற சுவாலையில் வீட்டு வரவேற்பறை முழுவதும் சூடு பரவி இருந்தது. கையிடாத  வெள்ளை நிற மெல்லிய நீளக் கவுண் ஒன்றை அணிந்த படி கையில் இரு மதுக்கோப்பையை அவள் ஏந்தி வந்தாள். தொண்டை அடைத்தது. வாயில் உமிழ் நீர் சுரந்தது. இது புதுவித உணர்வு. தயக்கத்துடன் அவள் முன் எழுந்து நின்றேன்.

நேராக வந்து கன்னத்தில் முத்தமிட்டு எனக்கெதிரே அமர்ந்தாள். பேச வார்த்தை வரவில்லை. எங்கிருந்து தொடர்வது என்ன பேசுவது தலை கிறு கிறுத்தது. வெளியே ஒடுவோமா என்று மனசு சொன்னது. அது மரியாதை ஆகாது எதுவென்றாலும் எதிர்கொள்வோம்.கையில் இருந்த வயின் குவளையை நீட்டினாள். தயக்கத்துடன் வாங்கி சியர்ஸ் சொன்னேன். அவள் எதோ பேச ஆரம்பித்தாள் அதை என் புலனுக்குள் அடக்க முடியவில்லை. வரவவேற்பறையில் அந்த புகைப்படம் என்னைத்திந்தரவு செய்ய தொடங்கியது . மனம் தடுமாற ஆரம்பித்தது. நிலை குலைந்து நின்றேன். அவளிடம் அதைப் பற்றி கேட்க மனம் இடங்கொடுக்கவில்லை.

இரு மணித்தியாலத்துக்குள் என்னைப்பற்றி எல்லாவற்றையும் போட்டு வாங்கி விட்டாள். பரிஸ் நகரில் இன்னும் வாழலாம் அதற்கான அவளிடமிருந்து நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் அவளிடமிருந்து தெறித்தன நேரத்தைப்பார்த்தேன். ஏழு மணியை தாண்டி முள் நகர்ந்து கொண்டு இருந்தது. சிகரட் பெட்டியை என்னிடம் நீட்டினாள். ஒன்றை எடுத்துக்கொண்டேன். சிகரட்டை   பற்றவைக்கும் முயற்சியில் நெருங்கினாள். உடல் வாசனை எல்லாவற்றையும் மறக்கச்செய்தது. சற்று நேரம் தங்கிச்செல்வதாக உத்தேசம்  மீண்டும் மதுக்கோப்பை நிரம்பி வழியும் சத்தம். போதை தலைக்கேறியது. அங்கிருந்து தயக்கத்துடன் விடைபெற முயற்சித்தேன். கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தேன் இன்னும் சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தை அடைந்தால் ரயிலை பிடித்துவிடலாம் .எழுந்து  நன்றி கூறி விடைபெற்றேன். கட்டித்தழுவிய படி கன்னங்களில் முத்தமிட்டு  வாயில் வரை வந்து வழி அனுப்பினாள்.

இரவு வீட்டுக்கு வந்து தூக்கமின்றி உழன்றுகொண்டிருந்தேன். கண்கள் முன்னால் அரை நிர்வாண ஒளிப்படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. அவளை அவமதித்துவிட்டு வந்தது போன்ற உணர்வு. நீண்ட யோசனையின் பின்பு எனது தொலைபேசியை எடுத்து மல்கோவா கொடுத்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். அழைக்கும் இலக்கம் பாவனையில் இல்லை அல்லது நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது. குரல் செய்தி அனுப்ப ரீக் என்ற ஒலியின் பின்பு இலக்கம் ஒன்றை அழுத்தும்படி அறிவுறுத்தல் வர, வெளியில் இருந்து என் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம். ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் வீட்டுக்காரனின் பற்கள் பிரமாண்டமாக தெரிந்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *