சமீபத்தில் வாசித்துக் கொண்டு இருக்கும் புத்தகம் டானியல் ஜெயந்தனின் வயல் மாதா .
இன்னும் முழுமையாக வாசிக்க இயலவில்லை. முதல் மூன்று கதைகள் , மற்றும் சமீபத்தில் அவர் பலரின் எதிர்ப்பை சந்தித்த வயல்மாதா என்ற கதையை வாசித்து முடித்தேன். இந்த கதைக்கு இத்தனை எதிர்ப்பா? என்று தோன்றியது.
.
வாசித்த மூன்று கதையிலும் சமூகத்தில் இருக்கும் விளிம்பு நிலை மாந்தர்கள் பார்வையில், அடிமட்ட மக்கள் மொழியில் எழுதி உள்ளார்.
வயல் மாதா கதையில் கூட இரு நண்பர்கள், வேலை விட்டு போகும் போது பயணத்தில் பேசும் ஊர் கதை தொனியில் தான் இருந்தது.
.
உலகு எங்கும் விரவி இருக்கும் குறிப்பாக பிரான்ஸ் கத்தோலிக்கர் உணர்வை துன்புறுத்துவதாக ஒரு சிலர் எழுதி இருந்தது இன்னும் நகைப்பிற்கு உரியதாக இருந்தது. ஒரு நாவல் கூட அல்ல, ஒரு புத்தகத்தில் இடம்பெற்று இருந்த சிறிய சிறுகதை.
இதில் சிஸ்டறை கடத்த உதவின, இவர் நண்பர்கள் இருவரை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பார்கள். எழுத்தாளர் பார்வையும் பரிவும், துறவி தனது காதலரிடம் போய் சேர உதவின இரு இளைஞர்கள் மேலுள்ள அக்கறையாகவே இருந்தது. அவர் இன்னும் ஆழமாக தகவல்கள் அறிந்து, ஒரு கிறிஸ்தவ பெண் துறவி மன நிலையில் சமூக சிக்கல்களையும் சேர்த்து எழுதி இருக்க வேண்டும். மற்றபடி சிஸ்டர் மேல் அவதூறும் இல்லை..அண்ணனின் தங்கை மேலுள்ள பொறுப்பின்மையை குறிப்பிடுகிறார்
ஒரு பெண் பிள்ளை 12 வயதுகளில் வகுப்புப் தோழன் ஒருவனுடன் பழகுகிறது. அறிந்த பெற்றோர் விடுதியில் சேர்த்து, பிற்பாடு கன்னியாஸ்திரி ஆக்கி விடுகின்றனர். அந்த பையன் இத்தாலியில் கப்பல் வேலைக்கு போய் விடுகிறான். 30 வயதுகளில் சிஸ்டர் , தனது கனடாவில் இருக்கும் சகோதரனிடம் தனக்கு மடம் பிடிக்கவில்லை . அழைத்து போக கேட்கிறார். அண்ணனும் கண்டு கொள்ளவில்லை, பெற்றோர்களும் கண்டு கொள்ளவில்லை. காதலனிடம் தெரிவித்து மடத்தில் இருந்து அவனுடன் போய் விடுகிறார். இவ்வளவு தான் கதை.
பெண் பெயர் மரியா கொராட்டி, தகப்பன் தெய்வேந்திரன். சிலுவையார் என்ற கள்ள பாதிரிக்கு கன்யாஸ்திரி மடத்தில் இருந்து போனது பிடிக்க வில்லை. அவருக்கு கன்யாஸ்திரி மேல் கண் இருந்தது போல கதையில் உள்ளது. இந்த கடத்தல் செட்டிகுளம் என்ற ஊரில் நடந்ததாக குறிப்பிடுகிறார்.
இந்த கதைக்காக பிராஸ்ஸில் உள்ள தமிழ் கத்தோலிக்கர்கள் கொதித்து எழுகிறார்கள். என்ன ஒரு அறிவு. கத்தோலிக்கத்தை பொறுத்தவரை எந்த வயதிலும் துறவி ஆகலாம். எந்த வயதிலும் துறவி நிலையை விட்டு வெளியேறவும் செய்யலாம். அதை சபை தடுக்க போவது இல்லை. அது தனிமனிதர்கள் உரிமையும் கூட என்று சபைக்கு தெரியும்.
துறவி நிலையில் இருந்து வெளியேறும் பெண்கள் பல சிக்கல்களை, சமூக அங்கீகாரத்தை பெறாது ஒதுக்கப்படுவதில் குடும்பம் காரணமாக உள்ளது. ஆனால் துறவி கல்வி கற்று வேலையுடன்,’ பிடித்தாலும் புளியம் கொம்பு’ என வெளியேறியவர்கள் நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். சபை சட்டப்படி அதில் ஒரு குற்றமும் இல்லை. துறவி என்ற பெயரில், கள்ள உறவில் இருப்பவர்களை சபை அறிந்தால் தண்டிக்கும்.
ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களாக 90 சதவீதம் உள்ள நாடுகளில் டாவின்சி கோட், the conversation with God, போன்ற படங்கள் வந்துள்ளது. The two Pop போன்ற திரைப்படங்கள், பல web series, பல புத்ககங்கள் நவீன காலத்தில் பல கணினி விளையாட்டுகள் கூட கத்தோலிக்க கிறிஸ்தவ சபையை பகுந்தாயும்/ விமர்சிக்கும் விதமாக வருகிறது.
பல குற்றசாட்டுகள், பல காரணங்களால், பலர் வைத்து இருந்தாலும் கத்தோலிக்கம் சட்ட திட்டங்கள் அடங்கிய கிறிஸ்தவ சபைப்பிரிவு . அதை போன்றே பல முற்போக்கு கருத்துக்கள் அடங்கிய பிரிவும் கூட. அடிமைகளை உருவாக்காது உண்மையான கருத்தாக்கமுள்ள மனிதர்களை உருவாக்குவதில் எல்லா கிறிஸ்தவ பிரிவுகளை விட கத்தோலிக்கம் முன்னே தான் நிற்கிறது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதும் அல்ல சபைகள்
தமிழகத்தில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் நாவல் கொற்கை நேரடியாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தை, பாதிரியார்களை சாடி இருந்தது. அவருக்கு கத்தோலிக்க சபை சார்ந்து, பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டு இருந்தது. கத்தோலிக்க சபை சார்ந்த கல்லூரிகள் சாதனை கிறிஸ்தவ எழுத்தாளர் என்று விருது வழங்கி பாராட்டியது. கேரளாவை சேர்ந்த, மடத்தை விட்டு வெளியேறிய பெண் துறவி ஜெஸ்மியின் ஆமென் நாவல் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்தகம் தான். சபை, துறவிக்கு எதிராக நேரடியாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை
சமீபத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று சமூக வலைத்தளத்தில் பிரகடன படுத்திய லூயிஸ் நிவேதா என்பவர் தமிழக கிறிஸ்தவம் சார்ந்து ஒரு புத்தகம் வெளியிட்ட போது கிறிஸ்தவ சபைகள், கத்தோலிக்கம் மட்டுமல்ல புரட்டஸ்டன்றும் ஆதரித்து அவர் புத்தகத்திற்கு பல உதவிகள் செய்தது.
இலங்கை தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் குடி பெயர்ந்தாலும் எழுத்து வாசிப்பு என்கிற போது கற்கால மனிதர்கள் ஆகி விடுகின்றனர்.
சில ஆசிய கிறிஸ்தவர்கள் தாங்கள் தான் சபையின் மொத்த வியாபாரி என்ற மனநிலையில் விடும் ஊளை சத்தம் கேலிக்குறியதாக உள்ளது.
சொல்லப்போனால், கிறிஸ்துவே தான் , சார்ந்த யூத மதத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் தானே.
ஜெயந்தன் போன்ற எழுத்தாளர் எழுத்தை . கதை மாந்தர்களை உருவாக்கும் பாணியை, விமர்சிக்கலாம். ஆனால் சபையை, மாதா பெயரை பற்றி எழுதக் கூடாது என்பது முரட்டுத் தனமான முட்டாள்தனம். அதில் பெண்கள் முன் நிற்கிறார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்.
பெண் துறவியோ ஆண் துறவியோ அவரவர் விருப்பம் துறவறத்தை ஏற்பதும் விடுவதும். அதில் என்ன அவதூறு, அவமானம் உண்டு என்று தான் விளங்கவில்லை. சபையில் இல்லாத சட்டத்தை இந்த அற்ப மனிதர்கள் யாருக்காக நிறுவ பார்க்கிறார்கள்.
இலக்கிய வாசிப்பு என்பது ஒரு தளம். வாசிப்பு அறியாதவர்கள் 17 பக்கம் கெட்ட வார்த்தைகளை மட்டும் மாறி மாறி பகிர்ந்து ஒரு புத்தகத்தை எதிர்ப்பது ஜெயந்தன் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஒரு இலவச விளம்பரம் தான். நானும் இந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் உள்ளது என்று அவசர அவசரமாக பனுவேலில் வாங்கினேன். வாசித்துக் கொண்டு இருக்கிறேன். சுவாரசியமாக நகர்கிறது.
நன்றி- jp josephine baba
thank You