
தனது காதலை கடவுளுக்கு மட்டும் கொடுப்பதாக சபதமிட்டு கன்னியாஸ்திரி மடம் புகல்கிறார். இது கத்தோலிக்க சமய வழக்கு. அது போலவே பாதிரியும் காதல் பண்ணவோ கல்யாணம் செய்யவோ முடியாது.
இந்த சட்டத்தினால் நூற்றாண்டுகாலங்களாக பாலியல் துன்புறுத்தல்களும் சிறுவர் துஸ்பிரயோகங்களும் தொடர்கின்றன.
ஒருவர் மனம் விரும்பி காதலை கடவுளுக்கு கொடுக்கலாம். பின்னர் மனம் மாறி திருமணமோ காதலுறவோ வைத்திருந்தால் திருச்சபை அவரை வெளியேற்றும்.
இன்னொரு புறம் பெற்றோர் ஒரு பிள்ளையை திருச்சபைக்கு தானம் செய்யும் வழமையும் உண்டு . அது அந்த பிள்ளையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது.
ஒட்டு மொத்தமாக கத்தோலிக்க திருச்சபையின் இந்த சட்டம் மனித இயல்புகளுக்கு முரணானது.
வயல் மாதா சிறுகதையின் அடிப்படை
இளவயதில் காதலுற்ற ஒரு பெண்ணின் விருப்பத்திற்கெதிராக தந்தை அவரை திருச்சபையில் கன்னியாஸ்திரியாக்குகிறார். நீண்ட கால த்தின் பின் அவர் தனது காதலனைசென்றடைய முயற்சிக்கிறார். அவர் காணாமல் போய்விட்டார் கடத்தப்பட்டார் என்ற பொய் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது தான் கதையின் மையப்புள்ளி . இவ்வகையில் கத்தோலிக்க சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்ல , ஒரு பெண் தான் விரும்பியவரை தேர்ந்தெடுப்பதற்கு எதிராக சமூகத்தில் உள்ள ஒரு சிலரால் இச்சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் கதை சொல்கிறது.
இந்த கதையை வாசித்த வெளியார் எவருக்கும் இது ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நிகழ்ந்த கதை என தெரிந்திராது. ஆனால் ஒரு சிலர் தொப்பி அளவாயிருப்பதால் தங்கள் கிராமத்து கதை என எடுத்ததால் வந்த வினை புத்தகம் கொளுத்தப்பட்டது. இக்கதையை அக்கிராமத்தில் உள்ள அனைவரும் படிப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால் ஓரிருவர் படித்துவிட்டு இது தங்களைப்பற்றிய கதை என அடித்துக்கூறியது தான் இந்த விடயம் இவ்வளவு விஸ்வரூபம் எடுப்பதற்கான காரணம்.
அதிருக்க ஒரு சில இலக்கிய வாதிகள் தாங்கள் ‘நடு நிலை’ பேணுவதாக நடித்து கதை சொல்லும் உரிமைக்கும் கதையை எரிக்கும் உரிமைக்குமான ஒரு சம நிலையை பேண கோருகின்றனர்.
இந்த ‘ சம நிலை’ பேணும் நிலை நாளை எந்த இலக்கியத்தையும் எரிப்பதற்கான நியாயப்பாட்டை வழங்கு வது மட்டுமல்ல சல்மான் ருஸ்டிக்கு நிகழ்ந்த கொலைத்தீர்ப்புக்கும் வழி சமைக்கும்.