நூல் எரிக்கும் சுதந்திரத்திற்காக எழுத்தாளர்களும், பதிப்பாளர்களுமே குரல் கொடுக்கும் நம்முடைய பாழாய்ப்போன தமிழ்ச் சூழலில், நூலை எரிக்கும் சங்கிகள், சங்கங்கள், சாதி அமைப்புகள் போன்றவற்றைக் குற்றம் சொல்லி யாது பயன்?
அண்மையில், எழுத்தாளர் அருண்மொழிவர்மன் ‘நூலைக் காசுகொடுத்து வாங்கி எரிக்கும் சுதந்திரத்திற்காக’ முகநூலில் குரல் கொடுக்க, சிலபல எழுத்தாளர்களும், அறிஞர்களும் லைக்கிட்டு எரியும் புத்தகத்தில் எண்ணெய் ஊற்றினார்கள்.
ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு, காலச்சுவடு கண்ணன் ‘நூல் எரிக்கும் சுதந்திரம்’ என ‘தமிழ் இந்து’ பத்திரிகையில் கட்டுரையே எழுதியிருக்கிறார். <‘சத்தியசோதனை’ பிரதியை எரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, ஒரு வாசகர் அப்படிச் செய்தால், அது அவரது வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்றே பார்க்கப்பட வேண்டும், பாசிசச் செயல்பாடாக அல்ல.> என்றெல்லாம் கண்ணன் எழுதியிருப்பது, தோழர் பெருமாள் முருகனின் நூல் சாதிச் சங்கத்தினரால் எரிக்கப்பட முன்பா, பின்பா எனத் தெரியவில்லை. ஆனாலும், பெருமாள் முருகனின் நூலை எரித்த சாதிச் சங்கத்தினரின் எரிப்புச் சுதந்திரத்திற்காக, பெருமாள் முருகனின் பதிப்பாளர் என்ற முறையில் கண்ணன் ஆதரவுக் குரல் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.
கண்ணனும் சரி, அருண்மொழிவர்மனும் சரி சொல்லிவைத்தது போல ஒரு விஷயத்தை, கிட்டத்தட்ட வார்த்தைகள் மாறாமலேயே சொல்கின்றனர். மனுசாத்திரம் ,அரசியல் சாசனம் ஆகியவற்றை அம்பேத்கரும், பெரியாரும் எரித்ததால்; இலக்கிய நூல்களை எரிப்பதிலும் தவறில்லை எனச் சொல்லி இலக்கிய நூல்களை எரிப்பவர்களை ஒரே விநாடியில் அம்பேத்கருடனும் பெரியாருடனும் இணைவைத்துவிடுகிறார்கள்.
மதநூல்கள், மனுசாத்திரம், அரசியல் சாசனம் இவையெல்லாம் அதிகாரசக்திகளால் சட்டமாக்கப்படுகின்றன. மனுசாத்திரத்தையும், மதத்தையும், அரசியல் சாசனத்தையும் ஆதாரங்களாக வைத்து நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும், கடமைகளிலும், இறப்பிலும் பிறப்பிலும், திருமண உறவுகளிலும் விதிகளும் சட்டங்களும் வன்முறையாகத் திணிக்கப்படுகின்றன. இந்தச் சட்டங்களை மீறுபவர்களுக்கு உறுப்புகளைத் துண்டித்தல், சிறை, தூக்குக் கயிறு வரை தண்டனைகள் சட்டமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அதிகாரசக்திகளின், ஆட்சியாளர்களின் சட்டப்புத்தகங்களை, அவற்றுக்கு ஆதாரமான மத நூல்களை எரிப்பதும், இலக்கியப் பிரதிகளை எரிப்பதும் ஒரே வகையான செயல்தானா? அரசியல் சாசனத்தை எரித்ததற்காகச் சிறை செல்ல வேண்டியிருந்தது. இலக்கியப் புத்தகத்தை எரித்தால் எங்கேயும் போகத் தேவையில்லை. வலிந்து ஆதரவு கொடுக்க எழுத்தாளர்களே இருக்க ஏது கவலை.
நூலை எரிப்பது ஓர் எதிர்ப்பு வடிவமென்றால், அது நியாயமென்றால் கலைஞரின் ஒட்டுமொத்த நூல்களையும் வாங்கி அதிமுகவினர் எரிக்கலாம். அம்பேத்கரின் நூல்களை விலைகொடுத்து வாங்கி சங்கிகள் கொளுத்தலாம். தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்களின் இலக்கிய நூல்களை வாங்கி நாம் தமிழர் கட்சியினர் எரிக்கலாம். இடதுசாரிகளின் இலக்கிய நூல்களை வலதுசாரிகளும் வலதுசாரிகளின் இலக்கிய நூல்களை இடதுசாரிகளும் எரித்து இன்புறலாம். நல்ல வேளையாக இந்த விஷயத்தில், எரிப்புச் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்கும் இலக்கியவாதிகள் அளவுக்கு இன்னும் அரசியல்வாதிகள் சீரழியவில்லை.
எரிப்புத்தான் விமர்சன வடிவமென்றால் எதற்கு இலக்கிய விமர்சனப் பத்திரிகைகள்? எதற்கு இலக்கிய விமர்சனக் கூட்டங்கள்? எதற்கு இலக்கிய விமர்சகர்கள்? ஒரு தீப்பெட்டியுடன் விமர்சனத்தை முடித்துக்கொள்ளலாமே! ‘கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்’ என ஒட்டுமொத்த இலக்கியத்தளமுமே தவளை போல இதுவரை கத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஒரு நெருப்புக் குச்சிக்கு முன்னால் நாசமாகியதா? ‘உன்னுடைய கருத்தை நான் முற்று முழுதாக நிராகரிக்கிறேன், ஆனால் அதைச் சொல்வதற்கான உனது உரிமைக்காக நான் எனது உயிரைக் கொடுத்தும் போராடுவேன்’ என்ற வால்டேயரின் வாக்கியங்களை ஏற்று ஒழுகுவது போல இதுவரை நீங்கள் நாடகம்தானா ஆடிக்கொண்டிருந்தீர்கள்?
தமிழ் இலக்கியச் சூழலில் இலக்கிய எழுத்தாளர்கள் எந்த அதிகாரமும் அற்ற எளிய பிறவிகள். அடித்துப்போட்டாலும், எரித்துப்போட்டாலும் கேள்வி கேட்க எவனுமே வரமாட்டான். எழுத்தாளர்களே நமக்கு நாமே திட்டம்போல ஒருவருக்கொருவர் ஆதரவும் தைரியமும் கொடுத்தால்தான் உண்டு. உலகமொழிகளில் பிரபலமான, இலக்கியத்தளத்தில் நன்கு அறியப்பட்ட, மூத்தவரான பெருமாள் முருகனே ‘எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன், பெருமாள் முருகன் செத்துவிட்டான்’ என்று சுய மரண அறிவித்தலை வெளியிடும் நிலையில், இளைய, அறிமுக எழுத்தாளர்களின் நிலை என்ன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
படைப்பாளியின் இலக்கியப் பிரதியை எரிப்பது படைப்பாளியையே எரிப்பதற்குச் சமம் என்பது தானே பெருமாள் முருகனின் அறிக்கையின் பொருள். தன்னுடைய எழுத்தை, தனது உயிராகக் கருதும் ஒவ்வொரு படைப்பாளியும் அவ்வாறே கருதுவார். இலக்கிய நூலொன்றை எரிப்பது கருத்து அல்லது விமர்சனச் சுதந்திரம் அல்ல! படைப்பாளி மீதான மிரட்டல், அச்சுறுத்தல், பொருண்மையான வன்முறை!