இரண்டு கிழமைகள் ஆகிறது; தன் முதலாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிட்ட காரணத்தால் ஊரார்,உறவுகள்,ஃபேஸ்புக் நட்புகள்,எழுத்தாளர்கள் இன்னும் அறிந்தவர் அறியாதவர்கள் பலராலும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் டானியல் ஜெயந்தன்.இதில் எத்தனைபேர் வயல் மாதா தொகுப்பைப் படித்தார்கள்? வயல் மாதா கதையை வாய்வழி அரைகுறையாகப் புரிந்துகொண்டு அல்லது எரிக்கப்பட்டது -கிழிக்கப்பட்டது-அச்சுறுத்தப்பட்டது என்பவற்றை அறிந்து கொண்டு அந்தப் பரபரப்பில் பதிவுகளை எழுதியவர்கள் பலர்.
இரு நுால்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற அறிவிப்பு பொதுவாகவே விடுக்கப்பட்டது. இலக்கிய நிகழ்வில் விரும்பியவர்கள் கலந்துகொண்டிருக்கலாம். அது தனிப்பட்ட விழா அல்ல. தான் வாழும் நகரத்தில் தன் நுாலுக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார் எழுத்தாளர். அங்கே வாழும் மக்கள் கலந்து கொண்டனர். யாரோ ஒருவர் எழுதியிருந்தாராம் அது தேவாலயத்தில் நடைபெற்றதாக, அப்படி இல்லை. பழைய சிறு கூடமான அது, நகரசபைக்கானதோ ஆலயமொன்றின் பராமரிப்பின் கீழ் வருவதோ எதுவாகவும் இருக்கட்டும். ஃபிரான்ஸில் நானறிந்தவரை இலக்கியச் சந்திப்புகள், கூட்டங்கள் என்று அதிகமாக இவ்வாறான மண்டபங்களில் எளிமையாகவே தான் நடக்கும்.
வயல் மாதா எனும் தலைப்பிலான இச்சிறுகதை புத்தகத்தின் இறுதியில் இருக்கிறது. அப்பெயரைப் பார்த்தவர்கள் கதையைப் பக்தி மயமாக அணுகியிருப்பார்கள்போல. கதை எதிர்பார்ப்பிற்கு மாறாக, கன்னியாஸ்திரி என்று இவர்கள் அழைக்கும் கத்தோலிக்கப் பெண்துறவு நிலைக்குத் தயார்ப்படுத்தும் கற்கைநெறிக்குச் சென்ற பெண் அதில் ஈடுபடத் தனக்கு விருப்பமில்லை,அங்கிருந்து தன்னைக் கூட்டிச் செல்லுங்கள் எனக் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதுகிறார்,பதில் இல்லாத நிலையில் வெளியே வந்துவிடுகிறார். கதையின் தொடக்கத்தில் இங்கு வாழும் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தைச் சேர்ந்த ஒருவரின் பக்திமான் பாவனைகள் எழுதப்படுகிறது. மரியகொரட்டி என்னும் பெயருடைய பெண் ,இத்துறவு வாழ்வை ஏற்க மனமின்றி வெளியேறிய பின்பு,சுயதேர்வற்ற அத்துறவு தொடர்பாகக் கேள்வி எழுப்பி தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் காணொலி வெளியானதாகக் கதை. ஒரு சிறுகதையை நகர்த்தும் விதமாக உரையாடல்கள், வசனங்கள் இடம்பெறுகின்றன. புத்தகத்தில் துாசணம் எழுதப்பட்டிருப்பதாகக் குமுறும் ‘சுத்தமான சூசைப்பிள்ளைகள்’,வயல் மாதா என்ற பெயரை வைக்க அதிகாரம் தந்தது யார் என்பவர்கள், ஊரில் நடந்த அவலத்தைக் கதையாக்கி விட்டதாக பெருங்கோபம் கொண்டவர்கள் …இப்படி ஊரவர்கள்.உண்மையான ஊரும் பெயரும் போட்டு எழுதியது பிழை, துாசணங்கள் கூடிப்போச்சு என்று ஜெயந்தனுக்கு எதிராகக் கொந்தளித்து, அப்புத்தகத்தை எரித்ததில் என்ன பிழை என்று கேட்கும் நிலை வரை இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் சிலர். விவாதங்கள் அவரவர் தெளிவின்படி-புரிதலின்படி நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு கதைக்கான விமர்சனத்தை முன் வைப்பது தான் ஆரோக்கியமானது. ‘இனிமேல் புத்தகம் வெளியிடக்கூடாது’ என்பதும் நடைபெற்ற சம்பவத்தைத் தழுவி எதுவும் எழுதக்கூடாதென்பதும் எழுத்தை முடக்கும் செயல்,குரல்வளையை நெரிக்கும் அராஜகம். ஓர் எழுத்தாளரோ கலைஞரோ தன்னைச் சுற்றி நடப்பவற்றை தன் படைப்பில் வெளிப்படுத்துவதும் விமர்சனத்துக்குட்படுத்துவதும் செய்யக்கூடியதே. இதை விட்டு, திட்டமிட்டு பெயரில் ஓர் எழுத்தை மாற்றிப்போட்டு கேலியும் பொறாமையும் பொச்சரிப்புமாக எதையாவது கதையுமில்லாமல் கருவுமில்லாமல் எழுதுவதெல்லாம் இவ்வகைக்குள் வராது. ஆனால் வயல் மாதா கதையில் ஊரோ பெயரோ கற்பனை தான் என்கிறார் எழுத்தாளர். நடைபெற்றதாக அறிந்த சம்பவத்தை முன்னிட்டு தனது பாத்திரங்களை ஆக்கியிருக்கிறார்.
இன்னார் எனக் குறிப்பிட்டு கட்டுரையாக இதை எழுதியிருப்பின் தங்கள் மனங்களைப் புண்படுத்தியதாக -சமூகத்தில் அடையாளங்காட்டி விட்டதாகக் கோபிக்கலாம். ஆனால் இது புனைவெனும் போது போலிப்புனிதங்களை விமர்சிப்பதாகவே ஒரு வாசகர் அணுகியிருப்பார். அதுவல்லாமல் நம் எழுத்தாள நட்புகளே இது உண்மையான விசயம், புலத்தில் ஊருக்குள் நடந்தது இதை எப்படி எழுதலாமென்கிறார்கள். ஒரு பெண் காதல் வாழ்வு மறுக்கப்பட்டவளாக துறவு நிலைக்கு அனுப்பப்படும் மத நம்பிக்கையில் கேள்வியை எழுப்புவது நியாயமில்லையா, நம் பொதுப்புத்திகளின் மூடத்தனங்களை விமர்சிப்பது இலக்கியத்தின் வேலையல்லவா, சரி, அப்படி உண்மையாக நடந்ததை கதைவழி கடத்தியிருந்தால் அது சுயவிமர்சனத்துக்குரியதல்லவா,இப்படியெல்லாம் எழுதியதை நட்பின் அடிப்படையில் பாதிரியாரிடமும் ஊரவர்களிடமும் கையளித்து நேருக்குநேர் நின்றது ஜெயந்தனின் நேர்மை அல்லவா, உண்மையை, ஊரை, நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தக்கூடாதென்று இலக்கியத்திற்கு முட்டுக்கட்டை போடமுடியாது.
பொதுவாகவே கத்தோலிக்கக் குடும்பங்களில் ஒருவராவது துறவு நிலைக்குப் போவது பெருமிதமாகவும் தம் பக்தியைக்காட்டும் வழியாகவும் இருக்கிறது. பிள்ளைகளின் பதின்பருவத்தில் சமுதாயத்தில்-வழிபாட்டிடங்களில்-கல்வி நிலையங்களில் மரியாதைக்குரியவராகக் கருதப்படும் துறவிகள் நாயக பிம்பங்களாக அவர்களுக்குத் தெரிவார்கள். சூழலின் தாக்கம் தாங்களும் அவ்வாறு ஆவதில் விரும்புவதும் நடக்கும். கூடவே சிறுபராயத்திலிருந்து ‘நீ சிஸ்ரராகப்போகவேணும் ,நீ ஃபாதராகப் போகவேணும்’ என்று சொல்லிச் சொல்லி வளர்த்து பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே துறவறத்திற்கு என்று ஒப்புக்கொடுத்து அனுப்பிவிடுவார்கள். இடையில் மனம்மாறி ‘மாட்டேன்’ எனும் துணிந்த பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்டு துன்புறுபவர்களும் விலகி வருவார்கள். துறவுநிலை பெற்று பணிபுரிந்தவர்களும்; காதலால், சபையில் கருத்து வேறுபாடுகளால் விலகுவது மிக அருந்தலாக நடைபெறுவதுண்டு.
பல ஆண்டுகள் இதற்காகப் படித்து, பட்டம் பெற்றுவிட்டால், தமது குடும்பம் ஆன்மிகப்பணிக்கு ஒப்புக்கொடுத்ததை பெற்றாரும் உற்றாரும் அதைப் பெருங்கொண்டாட்டமாகச் செய்வார்கள். இப்படியான நிலையுள்ள சமுதாயத்தினை, மடத்தை விட்டு விலகி வருமொருவர் எதிர்கொள்வது பெரும் பிரச்சினைதான். குடும்பத்தினர் அது தமக்குத் தலைகுனிவு என்று நினைக்கிறார்கள். இளவயதின் களிப்புகளைத் தவிர்த்து, இயல்பான உணர்வுகளை ஒடுக்கி ஒரு பிள்ளை துறவியாகி விடுவது இவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தனி மனித உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அந்த விலகலை மகிழ்வோடு ஏற்காத உறவுகள், ஊரவர்கள் பற்றிய விமர்சனமே இக்கதை என்பதே இவ்வளவு துாரம் எதிர்ப்புகளுக்குக் காரணம். அதுவன்றி,துாசணம், ஊர்க்கதை,உண்மைச் சம்பவம்,அறிந்த நபர்கள் என்பதெல்லாம் இவர்கள் சொல்லும் சாட்டுகள் என்றால், எழுத்தாளர்கள் சிலரும் கூட அதையே பிடித்துக் கொண்டு ஜெயந்தனின் கதையை இலக்கியமாக அணுகாமல் ,வாசிக்காமல் தனி நபர்களை அடையாளங்காண்பது மாதிரி எழுதிவிட்டதாகத் தாக்குகிறார்கள்.
தான் சார்ந்த மத -சமூகப்பிரச்சினையை விமர்சிப்பது எழுத்தாளருக்கான ஓர்மம். நேரடியாகவே மனிதர்களை இழிவுபடுத்தி, அவதுாறுகளை வாரிக்கொட்டும் ஆட்கள் கூட… சிறுகதையில் இப்படி ஐயையோ! மனம் புண்படும் ஐயையோ!! என்பது தான் சிரிப்பு.
நன்றி . தர்மினி