
எழுத்தாளர் டானியல் ஜெயந்தன் (Daniel Jeyanthan) அவர்களின் ‘வயல் மாதா’ என்னும் சிறுகதைத் தொகுதி, பிரான்ஸ் நாட்டில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த நூலை எதிர்க்கும் வகையில், ஜெயந்தன் வசிக்கும் வீட்டின் அருகிலே சிலர் கூடிநின்று, அதனை எரிக்கும் இழிசெயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அந்த நூல் தொடர்பிலே எதிர்ப்புணர்வையோ மாற்றுக் கருத்துகளையோ கொண்டிருப்பவர்கள், அவற்றைப் பகிரங்கமாக வெளியிட்டிருக்கலாம். நூலாசிரியருடன் கண்ணியமாக உரையாடியிருக்கலாம். நூலை எரித்த தடித்தனம் கண்டனத்திற்குரியது. அற உணர்வு, கருத்துரிமைப் பண்பு கொண்டவர்களால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழிசெயல் இது. (‘கொடும்பாவி’ எரிக்கும் தமிழ்ச் சமூக வழக்கத்தின் நீட்சியாகவும் நூல் எரிப்பைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.)
அரசியல் மற்றும் மத ரீதியில் அடிப்படைவாத நிலைப்பாடுகளைக் கொண்டவர்களின் அடாவடித்தனங்களை, ‘எதிர்ப்பரசியல்’ நடவடிக்கைகளாக யாரும் மடைமாற்றிவிட முடியாது.
தமிழ்ச் சமூகத்தினர் சிலர், புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு இத்தகைய அடாவடித்தனங்களிலும் இழிசெயல்களிலும் அவ்வப்போது ஈடுபடுவது எந்த வகையிலும் ஆரோக்கியமானதாக அமையாது. இத்தகைய மோசமான நடவடிக்கைகளில், உதிரிகளாகவும் கும்பலாகவும் ஈடுபடுபடக்கூடிய மனவிரிவற்ற அடிப்படைவாதிகள் அனைவரும் அம்பலப்படுத்தப்படவேண்டியவர்கள். இத்தகைய விசமிகள் வசிக்கக்கூடிய நாடுகளின் நடைமுறைகளுக்கு அமைவாகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகக்கூடும்.
எதன் பொருட்டும் ஒரு நூலை எரிக்கத் துணியும் ‘உசார் மடையர்கள்’, அந்த நூலின் ஆசிரியரை எரிக்கத் துணியமாட்டார்கள் என்பதற்கு எத்தகைய உத்தரவாதங்களும் இல்லை.
2023-06-22
குறிப்பு: ‘வயல் மாதா’ என்னும் சிறுகதையானது, உண்மைச் சம்பவங்களை முறைகேடாக வெளிப்படுத்துவதாகவும் பாலியல் ரீதியான சொல்லாடல்களை மிகையாகக் கொண்டிருப்பதாகவும் கத்தோலிக்க மத நடைமுறைகளுக்கு விரோதமாக இருப்பதாகவும் நம்பக்கூடிய சிலரே, பிரான்ஸ் நாட்டில் ஜெயந்தனின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள ஒரு தேவாலய வளாகத்திற் கூடிநின்று ‘வயல் மாதா’ நூல் எரிப்பில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் கண்ணியமாக முன்வந்து கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதே ஆரோக்கியமானது. கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் அனைவருக்கும் இருக்க வேண்டியது. எது எப்படியிருந்தாலும், நூலை எரிப்பது போன்ற வன்மம் கொழிக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட முடியாதவை
நன்றி- Amarthas artist