பேய்க்குப் படித்துத் தாயில் ஏவிப் பார்க்கிறதெனச் சொல்வது ;
இன்றைய எழுத்தியக்கத்தில் இச் சொல்வழக்கிற்குப் பெரும் பொருளுண்டு.
சர்ச்சைகளை எப்போதும் காமுற்று அதே சர்ச்சைகளின் வழிகாட்டலில் மேலும் மேலும் சர்ச்சைகளிற்காகவும் பரபரப்பின் உச்ச உணர்வு நிலை தரும் சுவாரஸ்யத்திற்காகவும் வாசிப்பைக் கைக்கொள்வோர் பலருண்டு.
கருத்து பேச்சு எழுத்துச் சுதந்திரம் எனச் சொல்லிக்கொண்டுதான் இன்றைய ஏகாதிபத்திய வல்லாண்மை நாடுகள் நமது கொடும் போர்களையும் அழிவுகளையும் கொண்டு நடாத்துகின்றன.
இடம் பொருள் ஏவல் என சூழ் நிலைகளுக்குப் பொருத்தமான நிலைகளில் முடிவுகளைக் கொண்டிருப்பதற்கு ஓர் அனுபவமும் பாத்தியமும் வேண்டும்.
ஒரு சல்மான் ருஸ்டி இருந்தால் புரிந்துகொள்ளலாம் , எல்லோரும் சல்மான் ருஸ்டிகளாக ஆக விருப்பின் சல்மான் ருஸ்டிபோல எடுப்பார் கைப்பிள்ளைகளாக பொலிஸ் பாதுகாப்பில் நிரந்தரமாக வாழவேண்டியதுதான். பாதுகாப்பிற்கும் கைவிடலுக்கும் ஏகாதிபத்தியங்களின் கைகள் வஞ்சகம் கொண்ட தளத்தில் இயங்குபவை.அசைபவை.
வயல்மாதா விவகாரத்தில் ஏன் கருத்துச் சுதந்திர விவகாரத்தைக் கொண்டுபோய்ப் பொருத்தமுடியாதெனில் இது உள்ளூர் மட்டத்திலான ஒரு பிணக்கு .
மேலும் இது பரஸ்பர நம்பிக்கையில் இணக்கப்பாட்டில் பேசித் தீர்க்கப்படவேண்டிய எதிர்பாரா விபத்து. இங்கே ஒரு இணக்கத்திற்கான வாய்ப்புகள் உண்டு.
இல்லை நான் எழுதியது சரி ! நான் எழுத்தாளன் ! நான் இப்படித்தான் எழுதுவேன்! என்றால் அதற்கான விலையையும் கொடுத்தாகவேண்டும்.
நீல .பத்மநாபன் தனது ஒரு படைப்பில் அவருடன் வேலை செய்த ஒருவரின் அந்தரங்க வாழ்வை எழுதி அந்த வாழ்விற்குரியவர் அதைப்படித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி நீல.பத்மநாபனை அடிபின்னி எடுத்து நீல.பத்மநாபன் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவேண்டியதாயிற்று. எல்லோருக்கும் பிரதியில் வாசிப்புச் சுவை காணல் சாத்தியமானதல்ல.
கி.ராஜ் நாராயனனுக்கு இப்படி ஒரு நிலை வந்தபோது “காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன் , என்னை விட்டிருங்க ! ” என அறிக்கை விட்டு அவ் விவகாரத்தைக் கடந்துபோனார்.
இது பக்குவம் .வாழ்வனுபவம் .
பெருமாள் முருகனுக்கு இப்படி ஒரு நிலை வந்தபோது ஒரு சமரசத்திற்கு இரு தரப்பும் தயார் நிலைக்கு வந்தபோது மூன்றாம் தரப்பான காலச்சுவடு சமரசத்திற்கு வாய்ப்பளிக்காமல் தனக்கான லாபங்களைப் பெற்றுக்கொண்டது.
கடைசியில் மிகப் பரிதாபத்திற்குரிய வகையில் “பெருமாள் முருகன் இறந்துவிட்டான் ! ” என அறிக்கையிடவேண்டியதாயிற்று.
எழுத்தாளர்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவு முரண்பாடான ஒன்றல்ல. விட்டேற்றிகளும் தற்குறிகளும் தம் பாவலாக்களை பெருமையாக அறிக்கையிட்டு தம்மை நான் நான் என விளம்பரப்படுத்தலாம்.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருகப் பாயும் எனச் சொல்வர்.
கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் ஒரு நாள் கூத்தல்ல. கறுப்பு வெள்ளை யானதுமல்ல ,எரிந்தகட்சி எரியாத கட்சி வகையல்ல.
அது ஒரு ஞானத்தேடல்.
ஞானமாகி வந்ததே எழுத்து !
