புறாக்கூடு

சிறுகதை

நாளை பள்ளிக்கூட விடுமுறை.  வழமையான பள்ளி விடுமுறை நாட்களை எதிர்நோக்கிய  உற்சாகம் அவனிடம் சுத்தமாக இல்லை. இனம் புரியாத சோகத்தின் ரேகை அவனது முகத்தில் படர்ந்திருந்தது. அன்று பாட நேரங்களில் பெரும் பகுதி நேரத்தை பறவைகளை வரைவதிலும், ஒட்டு வேலைகளிலும்  பொழுதைக்கழித்தான். இடை வேளை நேரமானபோது அவன் கூட்டமாகச்சேர்ந்து தன்னை நிந்தனை செய்யும் சக மாணவர்களின் கண்களில் அகப்படாமல் பள்ளி வளாகத்தில் நீண்டு கிளை பரப்பியிருந்த கத்தாப்பு மரத்தின் மீது பாய்ந்து தொங்கியும் ,கீழ் வீழ்ந்து காய்ந்து போன கொட்டைகளைக் கூரிய கற்களால் உடைத்து உள்ளிருக்கும் மஞ்சள் நிறப்பருப்புக்களை சுவைத்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கூட இறுதி மணி அடித்தவுடன் அவன் தன்னிடம் இருந்த  வண்ண வண்ண வானிஸ் பேப்பர்கள் வேறு சில வெண் நிறக் காகிதங்களையும் விறு விறு என்று சுருட்டித் தன் மொத்தமான கணித புத்தகத்தினுள் பக்குவமாக  வைத்தான். செபம் ஆரம்பித்தது.

இறுதிச்செபத்தை பயபக்தியின்றி வடவட வென்று தன்போக்கில் சொல்லி முடித்துவிட்டு வெடுக்கென்று தனக்கெதிரே வரிசையாக அடுக்கிக் கிடந்த  சில கதிரைகளைத் தாண்டி வகுப்பறையை விட்டு வெளியே ஓடினான். பிரதான வாயிலை நெருங்கியவன் அடிக்கடி தன் செவியில் வீழ்ந்த சினிமாப் பாடல் ஒன்றை தன் வாயில் வந்த போக்கில் சுருதி பிழையின்றி முணுமுணுத்த படியே பாடசாலையின் பிரதான வாயிலால் வெளியேறினான். வீதியின் இரு  மருங்கிலும் தள்ளுவண்டியில் அன்னாசித்துண்டுகளும், உப்புடன் தூள் கலந்த மாங்காய் வியாபாரத்தில் ரஷீத்து காக்கா படு உற்சாகமாக இருந்தார். காக்காவைச் சுற்றி இலையான் போல மக்கள் கூட்டம் நின்றது. சிறுவனின் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்த போது வீட்டு நினைப்பு அவனோடு மெல்ல ஒட்டிக்கொண்டது. வீதி கொதித்துக்கொண்டு இருந்தது . வெற்றுக்கால்களோடு  துரிதமாக நடக்க ஆரம்பித்தான். அவனது உடல் வியர்த்து அக்குளை  மூடி இருக்கும் சேட் பகுதி  கரி நிறத்தில் பாணியாக இருந்தது.  அவன் பிரதான வீதியை கடந்து  மணல் ஊரி வீதியில் கால்களை எட்டித் தொடைகள் விரிய வேகமாக நடந்தான். வெளுத்த நீல நிறக் காற்சட்டையில் பொத்தானுக்கு பதிலீடாக பொருத்தப்பட்டு இருந்த  அலுப்பினாத்தி ஒன்று இடுப்பு இறுக்கத்தினால் நெளிந்து பிரிந்து பின் அவனையறியாலே தெறித்துப்பறந்து போனது.  அவனது களுசானின் நீக்கலினால் ஒரு குஞ்செலி எட்டிப்பார்த்தது. அவன் அதை கவனிக்காதது போல் ஒவ்வொரு வீட்டு கூரைகளிலும் நின்ற புறாக்களை கூர்மையான கண்களினால் நோட்டமிட்டபடியே பிரதான வீதியை கடந்தான்.  மணல் மேடைகளை தாண்டி  அவன் தனது வீடு சென்றடைய இன்னும் பத்து வீடுகளுடன் வாசகசாலை, மாதா கெபியையும் கடக்க வேண்டி இருந்தது. வறண்ட மணல் அடிப்பாதங்களை சுட்டெரிக்க இடுப்பில் இருந்து காற்சட்டை வழுக்கி செல்லாமல் ஒரு கையால் அழுத்தமாக பிடித்துக்கொண்டான். மறுகையினால் புத்தகக்கட்டை அணைத்துப்பிடித்துக்கொண்டான்.

முன்பை விட இன்னும் வேகமாக  ஓட ஆரம்பித்தான். கடற்கரையோரம் உரப்பையில்  பரப்பிவைத்திருக்கும் கருவாட்டு நாற்றமும், கண்டல் பட்டையில் அவித்த வலைகளின் நாற்றமும் காற்றோடு கலந்து கிராமத்தின் அத்தனை தெருக்களையும் ஊடறுத்துச்சென்றது. ஊரை நெருங்கி விட்டோம் என்ற உற்சாகத்தை அவனுக்குள் தெளித்து விட்டது. அவன் வெண்சிற்பிகள், உலர்ந்த நத்தைகள், குறுணிக்கற்கள் புதைந்து கிடந்த மணல் மேடைகளின் மீது தவிப்பாய்ந்து  செல்கின்றான். கையில் புத்தகக் கட்டு சற்றும் தளர்ந்து போகவில்லை. கடற்கரையில் அமைக்கப்பட்ட வாடிகளில் இருந்து கடல் தொழிலாளிகள் வருவதும் போவதுமாக அவனைக் கடந்து செல்கின்றனர் . தினந்தோறும் காண்கின்ற காட்சிகள் அத்தனையும் அன்று புதிதாக நடப்பது போன்ற உணர்வு.

சிறுவன் இந்த ஊரில் பிறக்கவில்லை. அவன் இந்த ஊருக்கு சொந்தமானவனுமில்லை.  அவன் பச்சிளங்குழந்தையாக இருக்கும்போது அவனை பெற்றவர்கள் எங்கோ ரயில் விபத்தில் இறந்து போயினர். அதிஸ்ர வசமாக சிறுவன் தப்பினான். பொன்ராசருக்கும் 36 வயது ஆகியும் மனிசிக்கும் குழந்தைகள் இல்லை. நீண்ட நாட்களாக நேத்தி வைக்காத கோயில்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை. ஒரு முறை பொன்ராசர் புத்தளத்துக்கு உதைபந்தாட்டம் ஆடப்போகின்றேன் என்ற  சாட்டில் சில வருடங்கள் புத்தளத்தில் தங்கி இருந்து சில வைத்தியங்கள் செய்து பார்த்தார் எதுவும் சரிவரவில்லை. அங்கே ஒரு முஸ்லீம் நண்பர் மூலம்  வைத்தியர் ஒருவரைக் காண நேர்ந்தபோது அவர் மூலம் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். சட்ட முறைப்படி சில வருடங்களின் பின்பு பொன்ராசார் குழந்தையை யாழ்ப்பாணம் கொண்டு வந்தார். பார்த்தால் கிட்டத் தட்ட தாயின் சாயல். அதே உருண்டை விழிகள். நீண்ட சுருள் முடி. குழந்தையைப் பார்த்தால் பொன்ராசாருக்கு பிறந்தது என்று மாதா மீது சாட்சியாக  அடித்து கூறுவர். சிறுவன் முஸ்லீம் பெற்றோருக்கு பிறந்தவன் என்ற தகவலோ அல்லது பொன்ராசாருக்கு குழந்தை குட்டிகள் இல்லை என்ற செய்தியோ இதுவரை வெளியில் வந்ததில்லை.  அவன் நல்ல புத்தி சாலி. குழந்தை மீது பெற்றோர் மிகுந்த அன்பு வைத்து இருந்தனர். வருடங்கள் உருண்டோடின.  சிறுவன் பாடசாலையிப் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. பள்ளியில் இருந்து முறைப்பாடுகள் அடுக்கடுக்காக வீட்டு வாசலுக்கு வந்தன. சில நேரங்களில் காரணம் இல்லாமல் சிறுவன் மீது தகப்பன் எரித்து விழ ஆரம்பித்தார். ஆனால் தாய் தன் பாசத்தை குறைக்கவில்லை. சில வருடங்களில் மீசை முடி அரும்பும் நிலையை அடைந்தான். அவனுக்கிருந்த ஒரே ஆறுதல் அவனது தாய் மட்டுமே என்று உறுதியாய் நம்பினான்.

அவன் கண்ணேந்தி மாதா சொரூபத்தை வந்தடைந்த போது சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். சொரூபத்தின் எதிரே இருந்த மதிலில்  காகம் ஒன்று வெற்று நண்டுக்கோதொன்றை அழுத்தித் தன் கால்களால் உருட்டி பரிசோதனை செய்து கொண்டு இருந்தது. அவன் அதைப்பார்த்த போது வழமையாக தன் சோற்றுப் பீங்கானில் இருக்கும் மீன் குஞ்சுகளை தட்டிப்பறிக்கும் அதே காகம் என்பதை ஊகித்துக்கொண்டான்.

 

உஸ்ஸ்ஸ்…. என்று துரத்தினான். அது பறந்து அவன் எதிர் வீட்டு படலையில் நின்று கரைந்தது. எதோ நினைப்பு வந்தது போல திடிரென்று பறந்து மீண்டும் பழைய இடத்திலமர்ந்து கரைந்தது. சிறுவனின் கொட்டிற் குசினிக் கூரை வழியாக புகை மேலெழுந்து தென்னை ஓலையை தடவிச்செல்கிறது. தன் தோளினால் இரும்புக்கதவை தள்ளித் திறந்தான். கீரிச் என்ற சத்தத்தோடு உக்கிய கார் கதவு திறக்க உள் நுழைந்து மீண்டும் அதை தூக்கி அதே இடத்தில் வைக்க பொன்ராசர் வரவேண்டும். அவனுக்குப் பொறுமை இல்லை.

இறுக்கமான பிடியில் இருந்த புத்தகக்கட்டுக்கட்டை பக்குவமாக கொட்டில் வரை கொண்டுவந்து சேர்த்தான். சூரிய ஒளியில் நடந்து வந்தவனுக்கு கொட்டிலுள் குனிந்து நுழைந்த சடுதியில் கண்கள் இருண்டு போயின. சற்றுத்தடுமாறியவன் மீண்டும் சுதாரித்துக்கொண்டு சமைத்துக்கொண்டு நின்ற தாயுடன் எதுவித பேச்சையும் கொடுக்காமல் வேகமாக அறையை அடைந்தான். வேர்த்துப் பிசுபிசுத்த சேட்டை இயந்திரமாகக் கழற்றித் தூக்கி எறிந்தான். அது அங்கே கிடந்த உடுப்புக் கும்பலுடன் கலந்தது. கருக்கு மட்டை தட்டியில்  தொங்கிக்கொண்டிருந்த ஓலைப்பாயை வலிமையாக இழுத்தான். நீங்கியிருந்த பாயொன்று இழுபட்டு வந்து தொப்பென்று அவனது காலடியில் விழுந்தது. மாட்டுச்சாணமும், களி மண்ணும் சேர்த்து மெழுகி சில வாரங்களே ஆன நிலத்தின் வாடை அறை முழுதும் வீசிக் கொண்டிருந்தது. தரையில் பாயை  சத்தமில்லாமல் உருட்டி விட்டான். பின் செத்தையில் செருகிவைத்த வெண்ணிற வெற்று காகிதத்தை இழுத்தெடுத்து மடிப்பு விழாமல் பாயின் மீது பக்குவமாக விரித்தான். பின்னர் மெல்லிய பென்சில் கோடுகளால் தூரத்தில் பரலோக மாதா கோவில் முகப்பை நேர்த்தியாக வரைந்தான்.

கோவில்முகப்பில் கோழிமுட்டை எழுத்துக்களால் ‘கடவுளால் ஆகாதது எதுவுமில்லை’ என்ற வாசகத்தை நேர் கோட்டில் எழுதிப்பார்த்தான். பின்னர் நீண்டு வளர்ந்து பிணைந்து போன இரு தென்னைகளுக்குச் சற்று தாழ்வான உயரத்தில் செட்டை அடித்து பறக்கும் அழகான சில வர்ணப் புறாக்களை தன் கொட்டிலில் இருந்து வானை நோக்கி எழும்பவது போல வரைந்தான். பின் ஆரெஞ்ச் நிற பருப்புகளை எடுத்து அவற்றில் மஞ்சள் நிறக்கண்களை சோற்றுப் பருக்கைகளால் ஒட்டி அழகுபடுத்தினான். அவனது ஓவியத்தில் சில புறாக்கள் கரணமடிப்பது போலவும் அவை தரையை நோக்கி வேகமாக  வருவது போலவும் வரைந்திருந்தான். பின் வேகமாக எழுந்து கோடிப்பக்கம் ஓடிச் சென்றவன் உடைந்து போன ரெஜிபோம் பெட்யொன்றை படக்கென திறந்து அதன் உள்ளே இருந்த பழுதடைந்த தங்கூசி வலையை அப்புறப்படுத்திவிட்டு கட்டுக்கட்டாகச் சுற்றி ரப்பர் நாடாக்கள் இட்ட பல வர்ணப் புறாச் செட்டைகளை எடுத்துக்கொண்டு தன் கண்களை உருட்டி அங்குமிங்கும் நோட்டமிட்டான். யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின் குசினியை கடந்து அறையை தேடி ஓடிவந்தான். அதைப் பக்குவமாக எடுத்து வந்து தான் வரைந்த புறாக்களின் உடற்பாகங்களுக்கு பொருத்தமான வர்ண இறகுகளைப்பார்த்து  ஒட்டினான். சோற்றுப்பசை காகிதத்தின் மீது பற்றிப்பிடிக்கும் படி புறாக்கள் மீது தன் உலர்ந்து போன உள்ளங்கையால் மெல்ல அழுத்தினான்.

‘கிரீச் கிரீச்’ வெளியே தகரக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பயந்து போன சிறுவன் தான் செய்த ஒட்டு வேலைகளையும், வர்ண கடதாசிகள், புறாச் செட்டைகள் அனைத்தையும் வேக வேகமாக வழித்தள்ளி அவற்றை மறைத்து வைக்க ஓடினான். கைகளில் புறாச் செட்டைகளோடு கருக்கு மட்டை நீக்கலூடாக நோக்கினான். அங்கே வந்திருப்பது அவனுக்குப் பரீட்சயமான முகம்தான்.  அயல் வீட்டு ஓணாஸ் வருவதைக்கண்டு ஆசுவாசம் அடைந்தான். மூச்சு வாங்க ஓடிவந்த ஓணாஸ் சிறுவனின் கண்கள் விரிய காதுக்குள் எதையோ  குசுகுசுத்தான். அவனது உருண்டை விழிகள் பிதுங்கின. ஓனாஸ் கூறிய செய்திகள் அவனைப் பரவசமூட்டின. சிறுவனின் கால்கள் துடித்தன. தரையில் கிடந்த பாயை இயந்திரமாய் சுருட்டினான். கையில் அகப்பட்ட சட்டையொன்றை எடுத்து படக்கென்று தேகத்தில் மாட்டிக்கொண்டான். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். அரிசிச் சாக்கு அவனது கண்ணில் படவில்லை. அது அவனுக்குப் பெருத்த ஏமாற்றம். காற்றைக்  கிழித்துக்கொண்டு சிட்டாய் பறந்தான். அவன் கொட்டில் வாசலை அடைவதுக்குள் தாய்

 ‘’அடேய் சோறு சாப்பிட்டுட்டு போடா… இப்பதான் சனியன் பள்ளிகூடத்தால வந்தவன் அதுக்குள்ள எங்கயோ புறா புடிக்க ஓடுறான் பாரு! அப்பன் வந்த தெரியும் ..

தாயின் நச்சரிப்பின் ஆரம்ப வார்த்தைகள் மட்டும் சிறுவனின் காதுக்குள் வீழ்ந்தது. எதையும் அவன் பொருட்படுத்தவில்லை. குசினிக்குள் மிருகமாக புகுந்தவன் அரிசிப்பையை தேடினான். கொஞ்சம் அரிசி எங்கோ பையில் அகப்பட்டது. வெடுக்கென்று காற்சட்டைப் பைக்குள் வலு பக்குவமாய் கொட்டினான்.

‘டேய் கெதியா வாடா அவங்க இறங்க போறாங்கடா என்று ஓனஸ் எச்சரித்தான்.  திரும்பவும் தாய் ‘டேய் சாப்பிட்டு போடா ….

‘எனக்கு பசிக்கேல போனை’ என்று ஒற்றை வரியில் பதில் கூறிவிட்டு கோடிப்புறம் ஓடினான். பறிக்கூடுகள் மீது சாற்றி வைக்கப்பட்டிருந்த பெரிய அத்தாங்கு வலையை தோளில் சுமந்துகொண்டு கால்களைத் தரையில் உதைத்த படி  கோயிலைத்தேடி ஓடினான். பின்னால் ஓனாஸ் அவன் சுவடுகளை பிடித்து பாய்ந்து சென்றான். பனை வடலிகளையும், பற்றைகளையும் கடந்து தெருவை இருவரும் வேகமாக அடைந்தார்கள். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அவ்வூரின் உள்ள மரியன்னை ஆலயத் திரு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிக் கொண்டாடி மகிழ்வார்கள்.  திருவிழா சோடனை ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. திருப்பலி நிறைவேற்றும் பகுதியில் விசேட அலங்காரங்கார சோடனைகள் வெள்ளை தங்க நிறங்களில் ஜொலித்தன. எங்கும் மனிதர்களின் நடமாட்டம். சிரிப்புக்கும், ஆரவரத்துக்கும் பஞ்சமில்லை. கோயிலைச் சுற்றிய   நீண்ட தார் வீதியில் இரு மருங்கிலும் வெள்ளை மற்றும் நீல நிறங்களில் நட்டப்பட்ட கொடிகள் காற்றுக்கு பட படத்துக்கொண்டு இருந்தன. கோயில் வளாகத்துக்குள் சிறுவர் பெரியவர் என பால் வேறுபாடின்றி தமக்கு கொடுத்த சிறிய பெரிய வேலைகளை மகிழ்ச்சியோடு செய்து கொண்டு இருந்தனர். வண்ண மயமான மின்குமிழ்கள் கோவிலைச் சுற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்தன. சிலர் கோவில் முகப்பை இரு பிரத்தியேக வர்ணங்களால் பூசி அழகுபடுத்திக்கொண்டிருந்தனர்.

இளம் ஆண்கள் மரங்களில் சிலர் மரங்களைத் தறித்துக்கொண்டு இருந்தனர். மரத்தில் இருந்து விழும் காகத்தின் முட்டைகளை பிடி எடுத்து  பரிகாசத்துடன்  காகத்தை நோக்கி  எறிந்து விளையாடிக்கொண்டிருந்தனர் அவர்களில்சிலர். காகங்கள் மனிதர்களை கடும் கோபத்தோடு துரத்தித் தலைகளின் மீது வட்டமிட்டு குட்டிக்கொண்டு திரிந்தன. இச்செயலை சில வயதானவர்கள் கண்டித்துக் கொண்டு நின்றனர். இவற்றையெல்லாம் தன் கண்களால் நோட்டமிட்டபடியே சிறுவன் கடந்து சென்றுகொண்டிருந்தான். அவர்கள் கைக்கோயிற் பக்கம் திரும்பிய வேகத்தில் அங்கு நின்ற சிறுவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டனர். ஒவ்வொரு சிறுவர்ளின் கைகளிலும் புறாக்குஞ்சுகளையோ அல்லது பெரிய புறாக்களையோ கைகளில் பிடித்து வைத்திருந்தனர்.

எதுவும் கிடைக்காத சிறுவர்கள் சோர்வோடு கோவில் முகட்டில் இருந்து புறாக்களை அப்புறப்படுத்தும் அந்த மனிதர்களைப் பார்த்துக்கொண்டு நின்றனர். புறாக்குஞ்சுகள் கைகளுக்கு வந்தவுடன் சிறுவர்கள் அடையும் களிப்புக்கு அளவே இல்லை. சிலர் அதை வேகமாக வீடு எடுத்துச்செல்கின்றனர். ஒவ்வொரு முறையும் புறாக்குஞ்சுகள் தரையை தொடும் போதும் ஓணாசும் சிறுவனும் அவளோடு அந்த  மனிதர்களைப்பார்த்து தமக்குத்தெரிந்த எல்லா முறைகளாலும் அழைத்துப் புறாக்களைக் கேட்டுப் பார்த்தார்கள். யாரும் கொடுக்கவில்லை.

இறுதி வரை சிறுவனுக்கு நம்பிக்கை இருந்தது. தன்னுடைய  தகப்பன் வழி நெருங்கிய உறவுக்காரன் அங்கே புறாப் பிடிப்பதில் பிரதான பங்கை வகிக்கின்றான். அவன் நிச்சயம்  தனக்கு ஒரு புறா அல்லது ஒரு புறாக்குஞ்சையாவது தருவான். என்று நம்பினான்.  நேரம் சென்று கொண்டு இருந்தது. புறாக்குஞ்சு கிடைத்தவர்கள் மீண்டும் வந்து கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் இவர்களைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டு நின்றனர். இதை ஓணாசாலும் சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவர்கள் முகத்தில் கடும் சீற்றம் வெளிப்பட்டது. கண்கள் பனித்தன. அவமானம் மெல்ல வேர்விட தொடங்கியது.

அவர்கள் பொறுமையை இழக்க விரும்பவில்லை. இறுதியாக ஒரு உரப்பை நிறைந்த  புறாக்குஞ்சுகள் தரையை நோக்கி கயிற்றில் வந்து இறங்கின. அங்கு குழுமி நின்ற அனைவரும் ஆர்ப்பரித்தார்கள். எல்லாருடைய முகத்திலும் சந்தோசம். இந்த  முறை தமக்கும் கிடைத்துவிடும் என்று நூறு வீதம் நம்பிக்கையோடு கால் கடுக்க காத்திருந்தனர் . சிறுவர்கள் அனைவரும் முண்டியடித்து தத்தமது உறவுக்காரரை முறை கூறி அழைத்து புறாக்குஞ்சுகளை கேட்டார்கள். சிலருக்கு உடனடியாக கிடைத்தன. சிறுவனும் அழைத்துப்பார்த்தான். எவரும் சிறுவனது அழைப்பை செவி சாய்த்ததாக தெரியவில்லை. ஏமாற்றம். மேலே நின்ற ஒருவன் அவனை வசை வைத்துத் திட்டிய அந்த ஒரு வார்த்தை அவனது நெஞ்சை சுக்கு நூறாக கிழித்துப்போட்டது. கண் கலங்கிப்போனான்.  ஒரு புறாக் குஞ்சையேனும் இவன் பெற வில்லை என சிலர் பரிகாசம் செய்தனர்.

சிறுவனின் பின்னால் நின்று யாரோ தோளை பற்றி குழிக்குள் தள்ளிவிட்டு ஏளனமாக சிரித்தது போல உணர்ந்தான். பின்னால் திரும்பிப்பார்த்தான். அவனது வகுப்பு மாணவன் ‘அடே உனக்கு உனக்கு புறாக் கிடைக்காது வேணுமெண்டால் புறாச் செட்டை மட்டும்தான் என்று சொல்லிப்பல்லைகாட்டினான்.  இதைக்கேட்டதும் சிறுவன் மூர்க்கமாக அவன் மீது பாய்ந்து அவனைத் தரையில் விழுத்தி காட்டுத்தனமாக தாக்க ஆரம்பித்தான். இதை எங்கிருந்தோ கவனித்த பங்குப்பாதிரியார் ஸ்தலத்துக்கு வந்து சிறுவர்கள் இருவரையும் பிரித்து விட்டு அவர்களது விபரங்களை அருகில் நின்ற ஒரு நீண்ட காதுடைய வாலிபனிடம் கேட்டு அறிந்துகொண்டார். அடிபட்டு அவமானப்பட்டுப் போன  சிறுவனும் ஓணாசும் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர். கற்களையும், முட்களையும் மிதித்து கடும் கோபத்தோடு இருண்டு போன தம் கண்களை இன்னும் இறுக மூடியபடி தமக்கு பரிச்சயமான குறுக்கு வீதிகளை கடந்து இருவரும் தத்தமது வீட்டுக்கு சென்றடைந்தனர்.  சிறுவன் கண்களை விரிவாகத்திறந்து  வானத்தைப் பார்த்தான். வானம் இருண்டு கிடந்தது.

வீட்டை அடைந்த சிறுவன் வீட்டுப்படலை  திறந்து கிடந்ததை பார்த்த போதுதான் நேரம் ஆறுமணியை கடந்துவிட்டதை நினைத்துக்கொண்டான். பொன் றாசர் கொட்டிலுக்குள் நெருப்பெடுத்துக்கொண்டு நின்றார். மாலை ஐந்து மணிக்கு பின்னர் பொன்ராசர் நிற வெறியில் வீட்டுக்கு வருவார். சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையில் எதோ தகராறு. அதற்கு காரணம் அவனோடு தொழில் செய்யும் சீமான். மனைவியின் சாதியை இழுத்து பேசியது தான் காரணமாம். இளம் வயதில் பொன்ராசர் பறிக்கூடு பின்னி நண்டு பிடிப்பதில் கெட்டிக்காரன் அதை போகும் இடமெல்லாம் செய்து நல்ல பலன் அடைந்து வந்தார். அவ்வாறு எங்கோ தீவுப்பகுதியில் நண்டு பிடிக்க போனவர் வரும்போது  மனைவியையும் பறி கூட்டோடு  சைக்கிளில் ஏற்றி வந்துவிட்டார்.

இதைப் பலர் அவருக்கு முன்னாலே கிண்டல் அடிப்பார்கள். அதோடு மனைவியின் சாதியை வலிந்து நக்கல் செய்வது பொன்ராசாருக்கு கடும் சீற்றத்தை எழுப்பியது. தினம் தினம் வீட்டில் சண்டை. கோவில் திருவிழா நன்கொடைக்கு ஒரு வாரம் தொழில் அடிபட்டுப்போனது. இன்னும் அதன் மீது வெறுப்பு கிடைக்கின்ற கொஞ்ச பணத்தில் குடும்பம் நடத்துவதில் அல்லோல கல்லோலப்படும் பொன்ராசார் அடிக்கடி பங்குத்தந்தையை  தூஷண வார்த்தையால் திட்டிக்கொண்டு இருப்பார் .

வாயிலில் தகப்பனின் சத்தம் விழித்துக்கொண்ட சிறுவன்   தகப்பன் கையால் இன்று பூசை உண்டு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். மெல்ல அடியெடுத்து வைத்தான். வேலிச்சருகுகள் சப்தம் எழுப்பாமல் கையில் இருந்தபுறாப்பிடிக்கும் அத்தாங்கை வேலி அருகோடு சாத்தி வைத்தான். கோடிப்பக்கம் ஒளிந்துகொண்டு செத்தை வழியே கொட்டிலுக்குள் நடப்பதை கூர்ந்து கவனித்தான்.

பொன்ராசர் மனைவியோடு நெருப்பெடுத்துக்கொண்டு இருந்தார். “ஊரில் போடுகின்ற சண்டையில் முக்கால் வாசி புறா வளர்ப்பவர்களினால் தான் தினம் ஒரு வெட்டுக்குத்து கேசு இவனும் அதுக்குத்தான் தயார் ஆகிறானாக்கும் இந்த புறா வளர்க்கிறன் மயிர் புடுங்கிறான் எண்டு இந்த படலைக்குள்ள புறா வந்திச்சு அதுக்கு பிறகு நான் மனுசனா இருக்க மாட்டன் பூ மகன் வந்த அவன புடிச்சு வை என்ர மானத்த வாங்க வந்திருக்கிறான் தூ….

தொழில் முடிஞ்சு கரக்கடையால வரும்போது யாரோ கோயிலடியில் நடந்த புறாப்பிரச்சனையை பொன்ராசாவின் காதுக்குள் போட்டிருக்கவேண்டும். அதனால் வழமைக்கு மாறாக பொன்ராசார் அதிகமாக குடித்து விட்டு வந்திருக்க வேணும்  நிலைமையைபுரிந்துகொண்ட சிறுவன் உள்ளே உடனே போவது என்ற எண்ணத்தை முற்றாக நிறுத்திக்கொண்டான். ‘ஒரு ரெண்டு புறா சோடிய அவனுக்கு வாங்கிக் குடுத்தால் புள்ள எங்க போகப்போறான்?. என்று சொல்லி முடிப்பதுக்குள் “பறத்தோரை” என்ற சொல் மட்டும் பெரிதாக சிறுவனின் காதுக்குள் கேட்டது. மிச்சம் தாயின் கன்னத்தில் இருந்து சடார் படார் என்ற  பொன்ராசாரின்  உள்ளங்கையடிச்சத்தம் ஏங்கிப்போன அவன் குளிரில் நடுங்கும் புறாக்குஞ்சுபோல நடுங்க ஆரம்பித்தான். வெளியில் புறப்பட கொட்டிலின் முன் வாசலில் நடுவே இறால் பைவரை மரக்கல் தடியில்  கொழுவிக்கொண்டு படலையை திறந்து விறு விறு என்று சம்மாட்டியார் காந்தியின் மீன் வாடிக்கு புறப்பட்டார்.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த சிறுவன் பூனை போல நசிந்து பதுங்கிப்பதுங்கி கொட்டிலுக்குள் புகுந்தான். தாயை கண்டவன் தாமதிக்காமல் மடியில் வீழ்ந்து விம்மி விம்மி அழத்தொடங்கினான். தம்பி ராசா என்னடா கோயில் வளவுக்குள்ள நடந்தது? என்று கேட்க பதில் கூற முடியாமல் கண்களை உருட்டி உருட்டி சத்தமாக அழத்தொடங்கினான். ‘புறா வேணாமடா ராசா அப்பாவுக்குப் புடிக்காது நீ முதல் நல்லா படி அது வீட்டுக்கு தரித்திரமடா இருக்கிற கஸ்ரத்துக்கு புறாவுக்கு கூடு சாப்பாடு வேணாமடா முதல் படி அப்பாவை சந்தோசப்படுத்த பாரு பள்ளிக்கூட களுசான் கூட கழட்ட இல்லை பாரு அப்பா கண்டால் சரி என்று கூறி  அவன் தலையால் வழியும் வியர்வையை சேலை தலைப்பால் துடைத்தெடுத்தாள்.

 “போ எழும்பு அப்போத போட்டு வைச்ச சோறு ஆறிப்போய் மூடி வைச்சு இருக்கிறன் சாப்பிடு ராசா உனக்கு நல்ல சோடிப் புறா நான் வாங்கித்தாறன். சிறுவன் திரும்பி தாயை மடியில் கிடந்த படி பார்த்தான் தாயின் கண்களில் இருந்து ஓரிரு நீர்த்துளிகள் தப்பித்து கன்னங்கள் வழியே வழிந்து வருவதை சிறுவன் கண்டான். அவனால் பார்க்க சகிக்க முடியவில்லை. டபக் என்று எழுந்து அறையை நோக்கி   வேகமாக ஓடினான். தாய் எழுந்து குசினிக்குள் குனிந்து போக

அம்மா நான் கடக்கரைக்கு போச்சு வாறன் வயித்துக்க குத்துது  என்று கூறிவிட்டு படலையை திறந்து எதிர்க்காற்றை கிழித்துக்கொண்டு  சிட்டாய் பறந்தான். கடற்காற்று குளிரோடு வீசிக்கொண்டு இருந்தது. கடற்கரையோரம் கிடந்த சிற்பிகளை தோண்டி எடுத்து காற்றின் எதிர் திசையை நோக்கி எறிந்தான்.

அது ‘விண் விண்’  என்ற சத்தத்தோடு கடலுக்குள் வீழ்ந்து நொளுக் என்ற சத்தத்தை ஏற்படுத்தியது. சிறுவன் மெல்ல கடலுக்குள் சிறிய அகைகளை எதிர்த்து நடக்க ஆரம்பித்தான். பின் கரையில் இருந்து சற்று தொலைவில் கட்டிவைக்கப்பட்டு இருந்த ஒரு வள்ளத்தில் பாய்ந்து ஏறினான்.

அவனின் பாரத்தில் மிதந்து கொண்டு இருந்த வள்ளம் சற்று இரு பக்கமும் மெல்ல அசைந்து பின் நிலையாய் நின்றது. வெடுக்கென்று காற் சட்டையை கீழ் நோக்கி உருவி தன் வசதிக்கு ஏற்ற மாதிரி வள்ளத்தின் நுனியில் இருந்து மலம் கழித்தான். ‘பளக் புளக்’ என்ற சத்தத்தோடு வீழ்ந்தன. மலத்தின் சத்தத்தை கேட்ட  வள்ளத்தின் அடியில் கிடந்த கெளுத்தி மீன் கூட்டம் ‘ப்ளக் பளக்’ என்ற சத்தத்தோடு மேலெழுந்து நீர் மட்டத்தை எட்டிப்பார்த்து கழிவுகளை தின்ன ஆரம்பித்தன. வள்ளத்தில் இருந்தபடியே வானத்தை பார்த்தான். புறாக்கள் தன் தலைக்கு மேல் வட்டமடித்து மேலெழுந்து  கரணம் அடித்துக்கொண்டு மீண்டும் கீழ் நோக்கி வந்துகொண்டு இருந்தன.  அதன் திறனை சுழலும் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டான். அதன் அழகை ரசித்துக்கொண்டு வள்ளத்திலே மூழ்கி இருந்தான். தன்னிடம் ஒரு சோடி புறா இருப்பதை கற்பனை செய்து பார்த்தான். அது அவனுக்கு இன்பமாக இருந்தது. எப்படி புறா வாங்குவது என்று சிந்திக்க தொடங்கினான்.

 தனது பெற்றோர் இதற்கு அனுமதி கொடுக்க  மாட்டார்கள். பொன்ராசார் அடிச்சே கொன்று போட்டு விடுவார் எரிச்சலோடு வள்ளத்தை விட்டு இறங்கினான் . வீடு செல்ல  மனமில்லாமல்  கடற்கரையில் கொட்டி கிடந்த சிமெந்து கற்கள் மீது நின்று கொண்டு சிறிய  கற்களைப் பொறுக்கினான். கீக் கீக் என்ற வினோத ஒலியை எழுப்பி வானில் தாழ்வான உயரத்தில் இருந்து பறந்து வந்து கடல் நீரில் மூழ்கி  மீன்களை கொத்தி உண்ணும் சாம்பல் நிற கொக்குகளை வெறித்துப்பார்த்தான். சில கற்களைக்கொண்டு கொக்குகளை அடித்தான். அவை விவேகமானவை சுழித்துக்கொண்டு பறந்து சென்றன. எறிந்த கற்கள் நேராக கடலுக்குள் விழுந்து  நொலுக் என்ற சத்தத்தை உண்டாக்கியது. கெழுத்துக்குஞ்சுகள் சில நீரின் மேலே மிதந்தன.

மீண்டும் எறியத்தொடங்கினான் . அந்தரத்தில் சில கொக்குகள் அவன் அடித்த மீன்களை லபக் எண்டு வாயில்போட்டுக்கொண்டு மேலே பறந்துசென்றன. அவன் வானத்தைப் பார்த்தான். மாலை நேரம் மங்கிக் கொண்டு போனது. கோயில் மணியும் அடிக்க ஆரம்பித்தது. ராட்சச மணியின் அதிர்வில்  மணிக்கூட்டுக் கோபுரத்தில் நின்ற புறாக்கூட்டம் வெருண்டடித்துக்கொண்டு அலங்க மலங்க பறக்க ஆரம்பித்தன. சற்று தொலைவில் நின்று பார்த்துக் கொண்டு நின்றவன் புதிதாக கோவிலில் சில வர்ண புறாக்கள் கலந்திருப்பதை நோட்டமிட்டான். தன் முழங்கால் வரை ஒட்டி இருந்த கடற்பாசிகளை கரை ஏறிக்கொண்டே வழித்துபோட்டு விட்டு கொட்டிலுக்குள் ஏறினான் . தகப்பன்  மறுபடி கள்ளுக் குடித்துவிட்டு அறைத் தட்டியோரம் படுத்து வீணி வடித்துக்கொண்டு கிடந்தார். குசினிக்குள் போனவன் பானையில் கிடந்த சோற்றையும் புளி மிளகாயையும் வடிய வடிய ஊற்றி தின்ன தொடங்கினான். தாய் பள்ளர் தோட்டத்தில் இருந்து குடி தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவதை தூரத்திலே கண்டுவிட்டான். கொட்டிலை அண்மித்த போது  தாய் எதுவும் அவனுடன் பேசவில்லை. கால்கள் மண்ணுக்குள் புதைத்து  எழும்ப  பாதங்களை விடுக் விடுக் தூக்கியபடி  கொட்டிலுக்குள் சென்றாள். அவளது கண்கள் கொவ்வம்பழம் போல சிவந்து இருந்தன.

சில மாதங்கள்உருண்டோடின. அடுத்த வருடம் எட்டாம்  வகுப்பில் எட்ட  முடியாமல் சிறுவன் தோல்வியுற்றான். சித்திரம்,கைவேலை ஆகிய பாடங்களில் மட்டும் சிறப்புச் சித்தி எய்தி இருந்தான். அன்று இரவு பொன்ராசார் வெறியைப்போட்டு விட்டு மனிசியையும் மகனையும்  சரமாரியாக அடித்து நொறுக்கி விட்டார். படிச்சு கிழிச்சது  போதும் அவனை என்னோடு பறிக்கூடு பின்ன அனுப்பிவிடு என்கிறார் மனிசி இல்லை என்று அடம்பிடிக்கவே இந்த சம்பவம் நடந்து முடிந்து இருக்கின்றது . சிறுவனுக்குப் புறாக்களின் மீது இருந்த ஆர்வம் மேலும் கூடிக்கொண்டு போனது. ஒருநாள் வீட்டு கோடியில் இருந்த இரை குற்றும் பெரிய அலுமினியப் பானை ஒன்றை எடுத்து அதை கற்களைக்கொண்டு அடித்து நெளித்து ஒரு உரப்பையில் போட்டு ஓணாசுடன் நடையிலே அஞ்சு சந்தியில் இருக்கும்  இரும்புக்கடைக்கு கொண்டு சென்று விற்று காசாக்கி இருக்கிறான்.

கிடைத்த பத்து ரூபாயையும் பக்குவமாக வீட்டுச் செத்தையோரம் புதைத்து வைத்தான். அடுத்தடுத்த நாட்கள் அவன் பாடசாலை போகிறேன் என்ற பெயரில் ஊரில் உள்ள குப்பை மேடுகளைத் தேட ஆரம்பித்தான். எங்கும் உலோகங்கள் கிடைக்கவில்லை ஏமாற்றத்தோடு விடு வந்தவன் ஒரு நாள் பக்கத்து வீட்டு குசினியில் தேய்த்துக்கழுவித் தொங்கிக்கொடிருந்த அலுமினியச் சட்டியொன்றைத் திருடி விட்டான்.

கடற்கரையோரம் வளர்ந்து இருந்த கண்ணாப் பற்றைக்குள் குழி தோண்டி அதைப் புதைத்து வைத்துவிட்டு வந்தான்.  சிலநாட்களாக ஊரில்உள்ள சமையல் பாத்திரங்கள் மாயமாக   மறைந்து போயின. இதை பள்ளர் தோட்டத்தில் குடி தண்ணீர் பிடிக்கப்போன பெண்கள் தமக்குக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் ஊரில் உள்ள குடிகாரர் மீதும் சிலர் தங்கள் புருஷன்மார்கள் கள்ளுக் குடிக்க பாத்திரங்களை திருடி விற்று விட்டனர் என்று தமக்குள்ளே எண்ணிக்கொண்டனர். சிறுவனது திருட்டு நாளாந்தம் கூடிக்கொண்டு போனது. பலதும் கற்றுக்கொண்டான். நிறை அதிகரிப்பதற்காக பானை சட்டி களுக்குள் கற்களை இட்டு அடித்து நெளித்து விட்டு ஏமாற்றி விற்று காசு சேர்க்க ஆரம்பித்துவிட்டான்.

சில வருடங்கள் கழிந்தன. அவன் பாடசாலையை  முற்றாக மறந்துவிட்டான். வீட்டுக்கு வருவதையும்  மெல்ல குறைத்துக் கொண்டான் கேட்டால் யாராவது சம்மாட்டி பெயரை கூறி அவரின் வாடியில் நிற்பதாக பொய் சொல்வான். ஒரு முறை கோயில்  திருவிழாவின் இறுதி நாளன்றுதான் அந்த சம்பவம் இடம்பெற்றது போலீசார் எங்கும் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். கிட்டத்தட்ட ஐம்பது சோடி புறாக்கள் இரவோடு இரவாக திருட்டுப் போய்விட்டன அதன் உரிமையாளர்கள் கண்மூடித்தனமாக அயல் கிராமத்தவர்களோடு வாள்கள் கத்திகளைக் கொண்டு சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள். இரு ஊர்களுக்கு இடையில் மிகப் பெரிய சண்டை. இரு பக்கத்திலும் தலா முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்து யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

திருப்பலிப்பூசைகளில் பங்குத்தந்தை மிகவும் கடுமையாக ஊர் மக்களை திட்டிய் தீர்க்க தொடங்கினார். “இது வெட்கக்கேடான செயல் பந்தடியில் தான் மைதானத்தில் அடிபட்டீர்கள் இப்போது புறாவுக்காக வெட்டுக் கொத்துப்படுகின்றீர்கள் இது குழந்தை யேசுவுக்கும் மரியன்னைக்கும் ஏற்ற செயலில்லை. என்று பீடத்தில் அடித்து பிரசங்கம் செய்தார் . ஊருக்குள் துணிவாக இறங்கி இந்த வேலை செய்தவன் பிடிபட்டால் அவனுக்கு சாவுதான் மவனே… கண்கள் சிவக்க வெற்றிலை வாயை சீறிக்கொண்டு சொன்னான் பெரிய புறாப்புள்ளி சேகர். உடனடியாகவே   பாதிக்கப்பட்ட புறா வளர்ப்பாளர்கள் சிலர் போலீஸ் முறைப்பாடு செய்தனர்.

சில வாரங்கள் கடந்தன ஒரு மத்தியான நேரம் போலீஸ் ஜீப்புகள் சில உறுமிக்கொண்டு கடற்கரையோரம் மணல் மேடைகளை புரட்டிக்கொண்டு ஊர் மனைக்குள் புகுந்தது. ஜீப்பில் வந்த போலீஸ் அதிகாரி சமரக்கோன் தொழிலுக்குப் போன சில பெரியவர்களிடம்  பொன்ராசாருடைய வீடு இருக்கும் முகவரியை விசாரித்தார். சில நிமிடங்களில் பச்சை நிற ஜீப் வண்டி புகையை கக்கிக்கொண்டு பொன்ராசாருடைய வீட்டுக்கு முன்னால் வந்து கோர்ன் அடித்தது. கோடிப்பக்கம் மறைவில் குறுக்கு கட்டோடு குளித்துக்கொண்டு நின்ற பொன்ராசாருடைய மனிசி  துடித்துப்பாதைத்துக்கொண்டு கிடுகு ஓட்டையால் எட்டிப்பார்த்தாள். போலீசார் கொட்டிலைச் சுற்றி வளைத்து நிற்பதை கண்டதும் குளிரில் நடுங்கிய கோழி போல நடுங்கினாள். சம்பவத்தை அறிந்த பொன்ராசர் கோயில் போட்டிக்கோவில் இருந்து வேகமாக வந்துவிட்டார்.

“ஏய் உன்ர மகன் எங்கே இருக்கு ? என்று கேள்வியோடு போலீஸ் சமரக்கோன் விசாரணை செய்ய ஆரம்பித்தார். “என்ன சேர் என்ர மகனுக்கு? அவன் சின்ன பொடியன் சேர்.. டேய் “பொய்சொல்லுது நீ அவன் புறா களவெடுத்து இருக்கு அவன் எங்க போயிருக்கு நாளைக்கு அவன் சுடேசனுக்கு வர வேணும் சரியா” ? போலீசின் அதட்டலில் குடல் கலங்கி செய்வதறியாது விறுக்கு விறுக்கு என்று கொட்டிலுக்குள் புகுந்து குளித்துவிட்டு பளபளப்பாக நின்ற மனைவியை ஈரக் கொண்டையில் பிடித்து உன்ர ஓ … மகன் எங்கடி தேவடியாள் என்று குருகு மண்ணில் வீழ்த்தி இரண்டு கால்களாலும் மாறி மாறி பந்தாடினார். விலக்கு பிடிக்க யாரும் போவதில்லை மீறி  போனால் கெட்ட வார்த்தைகள் பிரங்கிபோல வாயிலிருந்து புறப்பட்டு வரும். உதை வாங்கிய மனைவி முத்தத்தில் கிடந்த பனங்குத்தியோடு சாய்ந்துகொண்டு பிரடியை குத்தியில் அடித்து அழ ஆரம்பித்தாள். பொன்ராசார் கொட்டிலுக்குள் புகுந்தவர் சேட் ஒன்றை அணிந்துகொண்டு கள்ளுக்கொட்டில் பக்கம் விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார் . அன்று இரவு சிறுவன் கொட்டிலுக்கு வரவில்லை பல வாரங்கள் கழிந்தன. அவன் ஊர் பக்கமே இல்லை. எங்கு சென்றான் என்றான் என்ற தகவல் யாருக்கும் தெரியாது. பொன்ராசர் மனிசி அழுது கண்கள் குழிவிழுந்து தினம் தினம் மாதாவுடைய கால்களில் தஞ்சம் புகுந்து செபிக்க ஆரம்பித்தாள் .

பொன்ராசார் முன்பை விட அதிகம் குடிக்க ஆரம்பித்தார். சம்பவம் நடந்து ஒரு சில வருடங்களின் பின்னர் முல்லைத்தீவுக்கு மகளின் கலியாணத்துக்கு போய்விட்டு வந்த பவளத்தார் சிறுவனை கண்டதாகவும் அவன் கையில் கேசியோ மணிக்கூடும் தலை முடி போலீஸ் குரோப் வெட்டும் வெட்டி இருந்தான். என்று ஊருக்குள்ள கதையை கட்டி விட்டார். வேறு சிலர் கொழும்புக்கு போற வழியில புத்தள பஸ்ஸில் யாரோடு சிங்களத்தில் பேசிக்கொண்டு போனதாகவும் பொன்ராசாருக்கு தகவல் சொன்னார்கள். கொட்டில் இருந்து கிடந்தது.

நிற வெறியில் மங்கலான இருட்டில் பீடி குடித்துக்கொண்டு இருந்த பொன்ராசார் தெற்குப்பக்கமாக திரும்பி அவனை வாயில் வந்த சிங்களத்திலும் தமிழிலும்  தூஷண வார்த்தைகளால்  சபிக்க ஆரம்பித்த்தார். நடைபாதையில் மனிசி வருவதைக்கண்ட பொன்ராசர் சாரத்தை இடுப்பில் சுற்றி கட்ட எத்தனித்தார். அதற்குள் மனிசி மாதாவுடைய எண்ணையை நெத்தியில் தேய்த்துவிட்டு நெற்றியில் குருசு அடையாளம் வரைந்து விட்டு கொட்டிலுக்குள் சென்று விளக்கை ஏற்றத்  தொடங்கினாள்.

 

-டானியல் ஜெயந்தன். 2018  காலம் சஞ்சிகை




 



   





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *