அண்மைக்காலத் தமிழ் சினிமாவை நுட்பமாக அவதானிக்கும் போது; தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கரு, பாத்திரத் தேர்வு, களம், காட்சிப்படுத்தும் முறை எல்லாவற்றிலும் கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இவற்றைத் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த பாரிய வளர்ச்சியின் சமிக்ஞையாகக் கருதிக் கொள்ள முடியும்.
இம்மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய காரணிகளாக சிலவற்றைக் கூறலாம். இலக்கியத்தோடு பரீட்சயம் மிக்க கதையாசிரியர்களின் வருகை, தமிழ் எழுத்தாளர்கள் நடிகர்களாகவும், வசனகர்த்தாக்களாகவும் இங்கு அறிமுகப்படுத்தப்படுவதும், சர்வதேசத் திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றிய அறிமுகமும் போதியளவு கிடைத்துக்கொண்டிருப்பதாலும் , தற்போதைய திரைப்படப் பார்வையாளர்களது இரசனையில் பாரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதும் கண்கூடு.
முன்னர் சினிமாவில் அய்ந்து ஆறு பாடல்களுக்காவே அத்திரைப்படம் வெற்றி பெற்றதும், பாடல்களும் இசையும் சரி இல்லையென்பதற்காகவே திரைப்படம் தோல்வியடைந்ததுமான வரலாறுமுண்டு. இப்போது திரைப்படங்களில் மூன்று மணித்தியாலங்கள் பாடல் காட்சிகள் எதுவுமில்லாமல், இருக்கையில் அமர்ந்து அத்திரைப்படத்தைக் கண்டு, ஆரவாரம் செய்து, திருப்தியோடு மகிழ்ந்து செல்லும் சினிமா ரசிகர்கள் வளர்ந்துவிட்ட காலம் இது. விளிம்பு நிலையினரின் சினிமா என்ற வகைமைக்குள் பல நல்ல கதைகள் படமாக்கப்படுகிறது.
அரைத்த மாவை அரைப்பது என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். வணிக ரீதியாகப் பல கோடிகள் இலாபமடையும் பெரிய நடிகர்களுக்கு இணையாக அர்த்தமுள்ள கதையம்சங்களை நம்பி அறிமுக நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் பல நல்ல திரைப்படங்கள் இன்று பல கோடிகள் இலாபமடையும் வகையில் சூழல் மாறியிருக்கிறது. இது தமிழ் சினிமாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமென்று உறுதியாகக் கூறலாம். அண்மையில் வெளியாகிய சில திரைப்படங்களை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். அந்த வகையில் திரைப்படத்தின் கதையை நம்பித்தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படமொன்றைப் பற்றிய என் பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வாழை
இன்றைய கால கட்டத்தில் வாழை திரைப்படம் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளரும் இயக்குனருமான மாரி செல்வராஜ் இயக்கிய இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே அதிக வரவேற்பைப்பெற்றது. ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றிருந்தார். வாழை திரைப்படம் வெளியான உடனே எழுத்தாளர் சோ. தர்மன் சர்ச்சையான ஒரு கருத்தை முன் வைத்தார். தன் சிறுகதையொன்றை அடிப்படையாகக்கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தன்னிடம் படக்குழு எந்த அனுமதியையும் பெறவில்லையென்றும் அதில் வரும் பெரும்பான்மையான காட்சிகள் தன் கதையில் இடம்பெறுவதைப்போலவே அமைந்திருப்பதாகக்கூறி முக நூலில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாக சோ. தர்மனின் கதையைப் படித்துவிட்டு சிறந்த கதை அனைவரும் இதைப்படிக்கவேண்டும் எனத் தனது முக நூலில் கதையின் இணைப்பையும் பகிர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மாரி செல்வராஜ். அதுவரையும் இத்திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பின்னர், வாழை குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் கருத்து மிக முக்கியமான பேசு பொருளானது . வாழை படமானது ‘இரண்டு திரவங்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்’ என்று நேரடியாக அத்திரைப்படத்தை விமர்சனம் செய்தார். இவ்வாறான சர்ச்சைகள்,சர்ச்சைகளை எதிர்த்து வாதப்பிரதிவாதங்கள் என இணைய வெளியில் பரபரப்புடன் கருத்துகள் கொதித்தெழுந்துகொண்டிருந்த சமயத்தில் நானும் இப்படத்தினைப் பார்த்தேன்.
வாழைத்தோட்டங்களில் குலைகளை வெட்டி இறக்கி அதைச் சேறும் சகதியுமான நிலங்களினூடே சுமந்து சென்று வண்டியில் ஏற்றும் தொழிலாளர்களுக்குத் தகுந்த ஊதியம் கொடுக்கப்படாமல் மட்டமான ஊதியத்துக்கு வேலை செய்யும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை அவலச்சுவையோடு காட்சிப்படுத்திய சித்திரம் வாழை. வறுமை, சுரண்டல், எனக் கழியும் வாழ்வை திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளிக்குச்சென்று கல்வி கற்பதற்கு அவர்களது குடும்பச்சூழலும் வறுமையும் தடையாக இருக்கிறது. அதைப்போக்க சிறுவர்கள் இருவரும் பெற்றோரின் வற்புறுத்தலின் பெயரில் பாடசாலையை இடை நிறுத்தி வாழைத்தோட்டத்துக்குச் சென்று கடுமையாக உழைத்து வருவார்கள். இக்கதை இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டாலும். அவரது முன்னைய படங்களில் காணப்பட்ட அழுத்தமான கதைப்போக்கும், சொல்ல வந்த விடயத்தை நேரடியாகக்கூறாமல் சிறுவன் சிவனைந்தானின் இளமைப்பருவத்தில் தோன்றும் உணர்வுகளைச் சரியாகக் காட்சிப்படுத்தாமல் கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் உணர்கிறேன்.
பதின் மூன்று வயதில் ஆசிரியை பூங்கொடி மீது எழும் ஈர்ப்பை ,உங்களைப் பார்த்தால் அக்கா, அம்மா போன்று இருக்கிறது என்று கூறுவதும், ஆசிரியைக்குப் பின்னால் பித்துப்பிடித்து அலைவதும் ஆசிரியைக்குத் தெரியாமல் விழுந்த அவரது கைக்குட்டையை எடுத்து நோட்டுப்புத்தகத்தினுள் வைத்து முகர்ந்து பார்ப்பதும் அன்பு, பாசம் என்ற போர்வையைப் போர்த்தி அந்த வயதில் எழுந்த சிவனைந்தானின் எதிர்ப்பாலினரை ஈர்க்கும் உணர்வைக் கொச்சைப்படுத்தி இருப்பதாக உணர்கிறேன். பூங்கொடி ரீச்சர் சிவனைந்தான் மீது நிகழ்த்துவது பாலியல் சமிக்ஞையே. ஏனென்றால் தன் வகுப்பு மாணவன் தன் கைக்குட்டையை எடுத்துவிட்டான். தன் மீது ஒரு அவனுக்குப் பாசம், அன்பு எதுவுமில்லை பெண் மீது கொள்ளும் வயதுக்கோளாறு என்று அவருக்குத்தெரிந்தும் அவனை நல் வழிப்படுத்தக் கண்டிக்கும் எண்ணமோ அல்லது கைக்குட்டையைத் தான் பறித்துக்கூட வைக்க மனமில்லாமல் அவனிடமே திருப்பிக்கொடுத்துவிடுவது என்னைப்பொறுத்த வரையில் மகா அபத்தம். ஏமாற்று வேலை . மாரி செல்வராஜ் என்ன எண்ணத்தில் இக்காட்சியை வைத்தார் என்று புரிகிறது. அவ்வாறு செய்துவிட்டு அதற்கு இடையில் அன்பு என்ற வேலியை போட்டுப் பார்வையாளரை ஏமாற்றப் பார்த்திருக்கிறார்.
கைக்குட்டை யை முகர்ந்து பார்க்கும் காட்சியை பிள்ளைகள் பெற்றோருடன் எப்படி இருந்து பார்த்தார்கள்? பூங்கொடி ரீச்சர் சிறுவனை துஸ்பிரயோகம் செய்திருக்கிறார். தன் தேவைக்காக சிறுவனை கண்டிக்காமல் விட்டுவிடுவது போல உணர்வு எழுகிறது. ஏனென்றால் மில்லுக்கு அவனை அழைத்துப்போகிற காட்சியில் மோட்டார் வண்டியில் முன்னால் இருக்க வைத்து வண்டியை ஓட்டுவது என்பதுவும் அந்த நேரம் பதின்மூன்று வயதில் ஒரு பதின்பருவச்சிறுவனுக்கு எழும் உணர்வு எப்படி இருக்கும் என என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது.
பாடசாலை தவிர்த்த நேரங்களில் மாணவர்கள் குறிப்பாக ஆசிரியர்களைச் சந்தித்துப்பழகுவதென்பது மிகச்சாதாரணமாக காண்பிக்கப்டுகிறது. ஆசிரியரும் குறித்த பிள்ளை மீது அதீத கரிசனை கொள்வததும், அவனைத் தொட்டுப் பேசுவதும், அவன் மீது இரக்கம் கொள்வதும் அவனை தன் பின்னால் வரவழைக்கப் போடும் தூண்டில். இதை மாரி செல்வராஜ் அன்பு ,பாசம் என்ற போர்வையால் மூடி அது கலைவெளிப்பாடு எனக் கூறி கதையை முடித்துவிட்டால் ஏற்க முடியாது. வெறும் அபத்தம்!
என்னைப் பொறுத்த வரையில் காதல், காமம் அன்பு எல்லாவற்றையும் போட்டுக் குழப்பியிருக்கிறார். அதில் வரும் உண்மையான காதல் காட்சிகள் கூட அழுத்தமாக பதியப்படவில்லை. இளையாராஜாவின் பாடல்களை ஒலிக்கவிட்டு வெறும் கற்பனைச் சிறகுகளை விரித்துப் பறந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளான போது இறந்தவர்களை ஒவ்வொருவராகச் சிறுவன் பார்த்து கதறி வரும் காட்சியும் கொல்லப்படவர்களின் உறவினர்களும் கொள்ளும் துன்பியல் காட்சி ஒப்பாரியோடு நீண்டு செல்கிறது. சிவனைந்தானோடு நெருக்கமாகத் திரிந்த பூங்கொடி அந்தக் கிராமத்தில் மரணங்கள் சம்பவித்த போது பிணங்கள் நிறைந்த கிராமத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது வேடிக்கை. வெறும் கிளுகிளுப்புக் காட்சிக்காக பூங்கொடியை உருவாக்கியிருப்பது புலனாகிறது.
அழகான, பூங்கொடி என்ற பெண்ணை ஆசிரியர் என்ற சாயத்தைப்பூசி பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தில் பூங்கொடியை ஊறுகாய் போல இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார். சிறுவனின் தலைமுடியைக் கோதிவிட்டு இன்பம் காண்பதும் அவன் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதும் அச்சந்தர்ப்பத்தில் பொருத்தமான பாடலை ஒலிக்கவிட்டு காட்சியை மெருகேற்ற இயக்குனர் பாடுபட்டிருப்பார். இதுவெல்லாம் பித்தலாட்டமே தவிர வேறு எதுவுமில்லை. மாமன்னனின் வடிவேலு ஆசனத்தில் அமரச்சொல்லும் காட்சி தீப்பொறி மாதிரி, அந்த ஒரு காட்சி மட்டுமே அந்தத் திரைப்படத்தையே தூக்கி நிறுத்தியது.
வாழை படத்தில் கைக்குட்டையைப் பதின் மூன்று வயதுச் சிறுவன் முகர்வது போன்றுதான்… வேறு மொழித் திரைப்படங்களில் பெண்களின் உள்ளாடைகளை முகர்வது போல காட்சிகள் வைப்பார்கள். வயது மட்டும் தான் வேறுபடுகிறது. உணர்ச்சிகள் ஒன்றுதான். என்னைப்பொறுத்த வரையில் இரண்டுமே ஒன்றுதான் . சிறுவனுக்கு ஆசிரியை மீது ஈர்ப்பு உண்டு. அது பாலியல் சார்ந்தது அவன் ஒவ்வொரு முறையும் ஆசிரியை எதிர் நோக்கும் போதும் தாய் , சகோதரியுடன் ஏற்படும் குடும்பம் சார்ந்த உணர்வையா அடைவான்? எவ்வாறான உணர்ச்சி நிலையை அடைவான் என்பதை எல்லோரும் அறிவோம். ஏன் இந்த ஏமாற்று ? எதிரே உள்ள தனக்குப்பிடித்த பெண் மீது கொள்ளும் உணர்வை நேரடியாக சொல்ல முற்பட்டிருக்கலாம். ஏன் போலி வேசம் ? இதைத் தான் உண்மையான சினிமா என்று வாய் கூசச் சொல்லக்கூடாது. வெறும் உணர்ச்சிப்பெருக்கும் கொந்தளிப்பும் நிறைந்த காட்சிகள் மட்டும் வைத்தால் அது மாற்று சினிமா ஆகிவிடுமா?இயக்குனர் பாலா கண்ணீர் சிந்திக் கட்டித்தழுவினால் நல்ல சினிமா ஆகிவிடுமா? வயது கடந்து பெண் – ஆணுக்கு இடையிலான ஈர்ப்பை வெளிப்படுத்த உள்ளதை உள்ளபடி காண்பிக்கப்போனால் தமிழ்ப் பண்பாடு- கலாச்சாரம் என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக இப்படியான காட்சியை எடுக்கத்துணியக்கூடாது.
பொருத்தமென்று ஏற்றுக்கொள்பவர்களும் மஉள்ளனர். திரைப்படம் முழுவதும் உணர்ச்சிவசப் படகூடிய காட்சிகள் அதிகமுண்டு. குறிப்பாக, முதலாளிக்கு எதிராக ஒன்றுதிரட்டிப் போராட்டம் நடத்துவது. பசியோடு நடன வகுப்புக்கு சென்றுவிட்டு பசி ஏற்பட வீட்டுக்குச்செல்லாமல் அக்காவிடம் ,எடுத்துவந்த உணவை உண்பதற்காகப் போவதும் உணவு கிடைக்காமல் வாழைத்தோட்டத்தில் பழம் பிடுங்கப்போக கங்காணி அடித்துவிரட்டுவதும் பசியோடு வீட்டுக்கு ஓடிய சிறுவன் வரும் வழியில் கிராமம் எங்கும் மரண ஓலம் அவன் வயிற்றுப்பசியுடன் யாருக்கும் தெரியாமல் சமையல் கட்டில் இருந்த சோற்றை உண்ண முற்பட தாய் அவனை விரட்ட மீண்டும் ஒரு பிடி சோறு உண்ண முடியாமல் பசிக் களையில் குளத்தினுள் வீழ்ந்து மூழ்குவதும் கதையின் உச்சபட்ச உணர்ச்சிக்காட்சிகள்.
இவை எல்லாம் கலந்து நல்ல சினிமா, மாற்று சினிமா வகைக்குள் அடக்கும் முயற்சியில் பலர் தோற்றுப்போய்கொண்டிருக்கின்றனர்
-டானியல் ஜெயந்தன்-